22 வயதில் ரூ.50 கோடி மதிப்பு ட்ராவல் ஏஜென்சியை கட்டமைத்துள்ள இளைஞர்!
இளைஞரான மானவ் சராப், தனது குடும்ப வர்த்தகத்தை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்னேற வழி செய்து முன்னுதாரணமாக விளங்குகிறார்.
இணையத்தின் எழுச்சி மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனையின் எளிமை, பயண முன்பதிவை எளிதாக்கி இருக்கிறது. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் பழக்கங்களும் மாறி வருகின்றன. பயணச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர் விசுவாசம் குறைவதை சந்தித்து வருகின்றன. பயணிகளுக்கு இப்போது தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பினும், பயண ஏற்பாட்டு நிறுவனங்கள், டிஜிட்டல் பரப்பில், தாங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் புதிய தொழில்நுட்பங்களை அரவணைத்து செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன.
வேகமான டிஜிட்டல்மயமாகி வரும் இந்தியாவில், பயணம் என்பது எப்போதுமே பிரபலமானதாக இருக்கிறது.
“இந்தியாவில் பயண வர்த்தகம் ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. ஆன்லைன் போர்ட்கல்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அதிக சந்தை பங்கை பெற்றுள்ளனர்,” என்கிறார் Gainwell Travel நிறுவன வர்த்தக வளர்ச்சி தலைவர் மானவ் சராப்.
இளைஞரான மானவ், தனது பெற்றோர்கள் மனோஜ் மற்றும் மதுலிகா சராப் துவக்கிய கெயின்வெல் டிராவல் நிறுவனத்தின் டிஜிட்டல் மார்கெட்டிங் வர்த்தக உறவுகள், கெயின்வெல் ஸ்போர்ட்ஸ் மற்றும் எதிர்கால வளர்ச்சி உத்திகளை கவனித்து வருகிறார்.
“பயணச் சேவைகளில், விளம்பரம் மற்றும் ஊடகத்தின் தன்மையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இது பரபரப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. எங்களுடையது குடும்ப வர்த்தகம் என்பதால், மார்க்கெட்டிங் முடிவுகள் பெரும்பாலும் உள்ளுணர்வால் மேற்கொள்ளப்படுகின்றன,” என்கிறார் அவர்.
பயணத் துறையில் டிஜிட்டல் அம்சங்களை பயன்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மாறுவதற்கான வாய்ப்புகளை எப்போதும் வரவேற்று இருக்கிறோம். இதுவே நிலைத்து நிற்க வழி‘ என்றும் அவர் விளக்குகிறார்.
“ஆன்லைன் பயண தளங்கள் மற்றும் அதிகரிக்கும் போட்டியாக சாவால்கள் ஏற்பட்டாலும், பயணிகளின் தேவை மாறிக்கோண்டே இருக்கிறது. எனவே, பயணிகளுக்கு சேவைகளை மார்க்கெட் செய்ய மற்றும் மதிப்பு அளிக்க முயற்சி மேற்கொண்டால் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன,” என்று அவர் நம்பிக்கையோடு சொல்கிறார்.
கொல்கத்தாவில் துவக்கப்பட்ட கெயின்வெல், கடந்த ஆண்டு ரூ.50 கோடி விற்றுமுதலை எட்டியது. வர்த்தக மற்றும் தனிநபர் விமான டிக்கெட் பதிவு, ஹோட்டல் பதிவு, விடுமுறை பயணங்கள், பாஸ்போர்ட் சேவைகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.
டிஜிட்டல் பாதை
மானவ் பெற்றோர் பயணத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்கள். வழக்கமான முன்பதிவு ஏஜென்சியில் இருந்து வேறுபட்ட ஒரு பயண ஏற்பட்டு நிறுவனத்தை துவக்குவது நல்லது என நினைத்தனர். பெற்றோர்கள் தங்கள் சுய நிதியை கொண்டு நிறுவனத்தை துவக்கினர்.
“துவக்கத்தில், நிறுவனம் விமான டிக்கெட் பதிவும், ஹோட்டல் பதிவு போன்றவற்றை வழங்கினாலும், இணையத்தின் வருகை மற்றும் முன்பதிவுக்கான லாபம் குறைவு போன்ற காரணங்களால் தங்கள் வர்த்தகம் மாற வேண்டியிருந்தது என்கிறார் மானவ்.
இணையத்தின் வளர்ச்சியை புரிந்து கொண்டு 1991ல் கெயின்வெல் இ-காமர்ஸ் பிரிவை துவக்கினாலும், அது காலத்திற்கு முந்தையதாக இருந்ததால் மூடப்பட வேண்டியிருந்தது.
”அதன் பிறகு வாடகை கார், ஈவண்ட் நிர்வாகம், சிறப்பு திருமணங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம். தேவை காரணமாக புதிய பிரிவுகளில் விரிவாக்கம் செய்தோம்,” என்று மனோஜ் குறிப்பிடுகிறார்.
கெயின்வெல் டிஜிட்டல் பாதையை தேர்வு செய்த போது மானவின் டிஜிட்டல் திறன்கள் கைகொடுத்தன. புள்ளிவிவர நோக்கில் பார்த்தால், எங்கள் முதல் டிஜிட்டல் வெற்றி 2012ல் புதிய இணையதளத்தை அறிமுகம் செய்வதாக அமைந்தது. இந்த தளத்தில் கூகுள் அனல்டிக்ஸ் மற்றும் பிற கருவிகளை பயன்படுத்தி, எந்த அளவுக்கு பார்வையாளர்கள் கவர முடிகிறது என அறிந்து வியந்து போனோம்” என்கிறார் மானவ்.
“இந்த அளவுகோள்களை சில மாதங்கள் ஆய்வு செய்த பிறகு, பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றும் திட்டங்களை செயல்படுத்தி, இந்த வருகைகளை வருவாயாக்க முயன்றோம்,” என்கிறார் அவர்.
இந்தத் திட்டங்களில் ஒன்று ’சாட்பாட்’களை பயன்படுத்துவது. சாட்பாட் வாடிக்கையாளர்களுடன் உரையாடி, கெயின்வெல் குழுவுக்கான முன்னெடுத்தலை அளிக்கும். அதனடிப்படையில் மார்க்கெட்டிங் குழு வாடிக்கையாளருக்கு சேவை அளிக்கும். ‘சாட்பாட்’ அறிமுகம் செய்த ஆண்டில், 80 சதவீத முன்னெடுத்தல் அதிமரித்து, வருவாய் 20 சதவீத வளர்ச்சி அடைந்தது” என்கிறார் மானவ்.
காலப்போக்கில் கெயின்வெல், தனது மார்க்கெட்டிங் பட்ஜெட்டின் பெரும்பகுதியை டிஜிட்டல் மீடியாவுக்கு ஒதுக்கி, தேடியந்திரம் மற்றும் சமூக ஊடக மார்க்கெட்டிங்கில் அதிக முதலீடு செய்துள்ளது.
“எஸ்.இ.ஓ , டிஜிட்டல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான கோரிக்கைகள், கூகுள் தேடலை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. இந்த வெற்றி காரணமாக, வாடிக்கையாளர் உறவு நிர்வாக தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளோம்,” என்கிறார் மானவ்.
இந்த மென்பொருள் கெயின்வெல்லின் விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் குழு திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“எல்லோரும் முழு பயிற்சி பெற்ற பிறகு மற்றும் மென்பொருளை முழுவதும் பயன்படுத்தும் நிலையில், ஊழியர்கள் செயல்திறனை இருமடங்காக ஆக்க முடியும். தானியங்கியமாக்கல் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட உள்ளது,” என்கிறார் அவர்.
தற்போதைய நிலை
நிறுவனம் ஃபேஸ்புக் விளம்பரங்களையும் பயன்படுத்தி வருகிறது. மேலும் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பையும் நிறுவன டிஜிட்டல் உத்திகளுக்கு உதவியிருக்கிறது. .
“எங்கள் விளையாட்டு இணையதளத்தில் பயண பேக்கேஜை விற்பனை செய்துள்ளோம். வழக்கமான விளம்பரங்களுக்கு பதிலாக, வலைப்பதிவு, கேள்வி பதில் தளமான குவோரா போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம் என்கிறார் மானவ்.
வெற்றியை மீறி சவால்கள் இருக்கவே செய்கின்றன.
“பயணத் துறையின் துடிப்பான, போட்டிமிக்க தன்மையே எங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. இது எங்களை புதுமையாக்கத்தில் ஈடுபட வைத்து வளர்ச்சிக்கு உதவுகிறது. மாறிவரும் பயண போக்குகளை புரிந்து கொண்டு தனித்தன்மை வாய்ந்த சேவைகளை உருவாக்குவதே வெற்றிக்கு வழி,” என்கிறார் மதுலிகா.
எதிர்காலத்தில், கெயின்வெல் கிழக்கு இந்தியாவைச் சார்ந்த நிறுவனம் என்பதில் இருந்து தேசிய நிறுவனமான விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கெயின்வெல் ஸ்போர்ட்ஸ் போன்ற துணை பிராண்ட்களை வருவாயாக மாற்றவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர்சிம்மன்