தமிழ் சினிமா 2015: திரைத் துறைக்கு ஊக்கம் தந்த 'காக்கா முட்டை'
தமிழில் 2015-ம் ஆண்டு 240-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. 'பாகுபலி', 'ஐ' போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் பிரம்மாண்ட பிம்பத்தை சுமந்து வந்த தருணத்திலும், 'தனி ஒருவன்' போன்ற கமர்ஷியல் உச்சத்தைத் தொட்ட படங்களுக்கு மத்தியிலும் 'காக்காமுட்டை' படம் தனித்துவமானதும், தவிர்க்க முடியாத முக்கியத்துவமும் பெறுகிறது.
தமிழ் சினிமா பார்வையாளனுக்கான சினிமா, படைப்பாளியின் சினிமா என எப்போதுமே இரண்டு வகையாக இருக்கிறது. பார்வையாளனுக்குரிய சினிமா வணிக அம்சங்கள் நிறைந்ததாக, ரசிகனை திருப்திப்படுத்தும் நோக்கில் குத்துப்பாட்டு, சண்டைக்காட்சி, நகைச்சுவை, காதல் கவர்ச்சி நிறைந்து உருவாக்கப்படுகிறது. வெளிப்படையாக சொல்லப்போனால், ஃபார்முலா திரைப்படமாகவே பார்வையாளனுக்கான சினிமா திட்டமிட்டே எடுக்கப்படுகிறது.
படைப்பாளியின் சினிமாவில் கலைத் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நகைச்சுவை, பாடல்கள் போன்ற அம்சங்களுக்கு இடம் கொடுக்காமல் கதைக் கருவின் ஆழத்தை நேர்த்தியாக சொல்வதற்காக விதிகளுக்கு உட்படாமல் எடுக்கப்படுகிறது. ஆனால், இதில் இருக்கும் மிக முக்கியப் பிரச்சினை படைப்பாளியின் அறிவு ஜீவித்தனத்தை ஒரேயடியாக கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்ற விருப்பமும், முனைப்பும் வந்துவிட்டால் மென்சோகம், மெலோடிராமா, அழுகை, உருக்கம் மிகுந்த காட்சியமைப்புகள் என்று திரைப்படத்தை சாதாரண ரசிகனுக்கு எட்டாத உயரத்தில் வைத்துவிடுவார்கள். அதுவே ரசிகனுக்கு அலுப்பையும், சோர்வையும் ஏற்படுத்திவிடுகிறது. இந்த மாதிரியான படங்கள் வெகுஜன மக்கள் விரும்பும் வகையில் பெரும்பாலும் இருப்பதில்லை.
பார்வையாளனுக்கான சினிமா, படைப்பாளியின் சினிமா என்ற இரண்டு வகைகளும் ஒரே புள்ளியில் இணையும் சினிமாவை நல்ல சினிமா என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு நிகழ்கால சாட்சியாக 'காக்கா முட்டை' திரைப்படத்தை சொல்லலாம்.
கலைத்தன்மை படங்கள், விருதுக்கு அனுப்பப்படும் படங்கள் எல்லாம் சோகத்தையும், வறுமையையும், இயலாமையையும், விரக்தியையும் மட்டுமே கொண்ட படங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. யதார்த்தமான படங்களும் விருதுக்குரிய படங்கள்தான் என்பதை காக்காமுட்டை இயக்குநர் மணிகண்டன் தமிழ் சினிமா உலகுக்கு உணர்த்தி இருக்கிறார்.
''வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் படமாக எடுக்கவே ஆசைப்படுவேன். விழாக்களுக்கு அனுப்ப வேண்டும் என்று சோகத்தைத் திணித்து கதை பண்ணுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. யதார்த்தமான படங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மக்களுக்குப் பிடித்த மாதிரி, அவர்களுக்கு போர் அடிக்காத படங்களில்தான் என்னோட கவனம் இருக்கும்'' என்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
மேலும், ''சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது எனக்கு ஒரே நோக்கம் மட்டுமே இருந்தது. பொதுவான ரசிகர்கள் 'காக்கா முட்டை' படத்தை எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்பதுதான். படம் பார்த்த பெரும்பாலான நபர்கள் உற்சாகம் பொங்கப் பேசியதை மறக்க முடியாது'' என்று நினைவுகளைப் பகிர்கிறார் மணிகண்டன்.
'காக்காமுட்டை' திரைப்படம் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மாபெரும் வெற்றி பெற்றதற்குக் காரணம் அதன் எளிமையும், யதார்த்தமும் தான். உண்மைக்கு மிக நெருக்கமான சம்பவங்களை நம் கண்முன் காட்சியாக விரியும்போது அதில் நாம் ஒன்றிவிடுகிறோம். அதுதான் ரசிகனை கைதட்ட வைக்கிறது. விசிலடிக்க வைக்கிறது. கொண்டாடச் செய்கிறது.
இத்தனைக்கும் 'காக்கா முட்டை'யின் கதையம்சம் வழக்கமும் பழக்கமும் மிக்க ஒன்றுதான். குடிசைப் பகுதியில் வாழும் இரண்டு சிறுவர்களின் உச்சபட்ச ஆசை பீட்சா சாப்பிடவேண்டும் என்பதுதான். அதற்காக இறுதிவரை முயற்சி செய்கிறார்கள். அந்த சிறுவர்களுக்கு பீட்சா கிடைத்ததா? சாப்பிட்டார்களா? அதற்குப் பிறகு அவர்களின் ரியாக்ஷன் என்ன? என்பதுதான் கதைக்களம்.
இயல்பான வாழ்க்கை, அன்பு நிறைந்த வீடு, சுயநலத்துடன் செயல்படும் பீட்சா முதலாளி, ஊடகங்களின் வணிகப்பசி, சிறுவர்கள் அவமானப்பட்ட வீடியோவை வைத்து காசு பார்க்க நினைத்து இளைஞர்கள் டீல் பேசுவது, சுயமாக சம்பாதிக்க கஷ்டப்பட்டாலும் மாமியாரை பாரமாக நினைக்காத மருமகள், பாட்டி இறந்ததும் பீட்சாவுக்காக சேர்த்து வைத்த காசை செலவு செய்ய கொடுக்கும் சிறுவர்கள் என யதார்த்தங்களை மட்டுமே படமாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிகண்டன்.
பூங்காவில் பார்த்து பழக்கமாகும் சிறுவன் பீட்சாவை கொஞ்சம் பிச்சி கொடுக்கும்போது, பெரிய காக்காமுட்டை சின்ன காக்காமுட்டைய அதட்டி எச்சி பீட்சா சாப்பிடாதே என சொல்வதும், சின்ன காக்காமுட்டை அதற்கு மறுப்பு சொல்லாமல் பீட்சா வேணாம் என்று சொல்லிவிட்டு வரும்போது ஸ்லோமோஷனில் நடந்து வருவதை ரஜினி லெவலுக்கு ஹீரோயிஸமாக காட்டுவது சிறப்பு.
பெரிய காக்காமுட்டையாக நடித்த விக்னேஷ், சின்ன காக்கா முட்டையாக நடித்த ரமேஷ் ஆகிய இருவருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரங்களுக்கான தேசிய விருதுகள் தேடிவந்தன. சிறந்த குழந்தைகள் திரைப்படமாகவும் 'காக்காமுட்டை'க்கு தேசிய விருது கிடைத்தது.
இப்படி திரைப்படம் குறித்து அலாதி இன்பத்தோடு செய்திகளைப் பகிரவும், சுவாரஸ்யங்களைக் குறிப்பிடவும், சிலாகித்துக் கொண்டாடவும் நுட்பங்களை சொல்லவும் முடிந்தாலும் சமகாலத்தில் மூத்த இயக்குநரின் பதிவு ஆரோக்கியத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ் சினிமாவை நகர்த்திச் செல்வதாகவே உணர முடிகிறது.
'காக்கா முட்டை' வெற்றி குறித்து இயக்குநர் வசந்தபாலன் தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
'''காக்கா முட்டை' படத்தின் வியாபார வெற்றி அளவில்லாத உற்சாகத்தை அளிக்கிறது.
தொடர்ந்து தமிழ் சினிமாவின் நிலை வேறுவிதமாகவும், பயமுறுத்தும் வகையிலும், பிடிபடாத வகையிலும் இருந்தது. திகில் படங்கள், பயமுறுத்தும் பேய் படங்கள், பயமுறுத்தி சிரிப்பூட்டும் பேய் படங்கள், வெறும் சிரிப்புப் படங்கள், திரில்லர் படங்கள், திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டை ஊசி வளைவுகளும் நிரம்பிய சண்டை படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த நிலையில், பார்வையாளர்கள் மொத்தபேருமே இதற்கு மாறிவிட்டார்களோ என்று தோன்றியது. இளம் பார்வையாளர்கள் இந்த மனநிலையில் தான் திரைப்படங்களை ரசிக்கிறார்களோ என்ற ஐயம் உண்டாகியது.
இது ஐபோன் யுகம், ஐபேடு யுகம், பேஸ்புக் – ட்விட்டர் – வாட்ஸ்அப் யுகம், ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று நிலவிய பேச்சை பொய்யாக்கியது 'காக்கா முட்டை'யின் வெற்றி.
யதார்த்த வகை படங்களுக்கான காலம் முடிந்து விட்டதோ என்று எண்ணுகிற நிலையில், 'காக்கா முட்டை' திரைப்படம் ஒரு தேவதூதன் - என் போன்ற யதார்த்த வகை இயக்குநர்களுக்கு'' என்கிறார் வசந்தபாலன்.
தமிழ் சினிமா தன் தரத்தையும், தகுதியையும் தக்கவைத்துக்கொள்ள 'காக்காமுட்டை' போன்ற படங்கள் வரவேண்டும். 2016-ல் அது தொடர வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
அதேவேளையில், குறைந்த பட்ஜெட்டில் நிறைந்த சினிமா எடுக்க முன்வரும் இளம் படைப்பாளிகளுக்கு ஊக்கம் தரும் படைப்பாகவும் திகழ்கிறது 'காக்கா முட்டை'.