28 IPO; ரூ.38,000 கோடி - 2024 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் முதலீட்டாளர்களுக்கு குட் நியூஸ்!
பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஐபிஓ திருவிழா தொடங்கவுள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஐபிஓ திருவிழா தொடங்கவுள்ளது.
2023-24 நிதியாண்டின் இரண்டாம் பாதியில் மொத்தம் 28 ஐபிஓக்கள் வரப்போகிறது. இதில் ஓயோ முதல் டாடா டெக் வரையிலான முன்னணி நிறுவனங்களும் அடங்கும். 28 பொதுபங்கு வெளியீடுகள் மூலம் அந்தந்த நிறுவனங்கள் ரூ.38 ஆயிரம் கோடி நிதி திரட்ட வாய்ப்புள்ளதாக பிரைம் டேட்டாபேஸ் மதிப்பிட்டுள்ளது.
மேலும், 41 நிறுவனங்களும் நிதி திரட்ட சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் அனுமதி கோரியுள்ளன. இந்த 41 அமைப்புகளும் இணைந்து ரூ.44 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.38,000 கோடி:
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பரில் ஐபிஓக்கள் மூலம் நிதி திரட்டுவது 26 சதவீதம் குறைந்துள்ளது. 2022-23 இதே காலகட்டத்தில், 14 ஐபிஓக்கள் மூலம் நிறுவனங்கள் ரூ.35,456 கோடி வசூல் செய்துள்ளன. பிரைம் டேட்டாபேஸின் படி, இந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 31 ஐபிஓக்கள் ரூ.26,300 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளன.
மூலதனச் சந்தைகளின் முன்னணி தரவுத்தளமான பிரைம் டேட்டாபேஸின் நிர்வாக இயக்குநர் பிரணவ் ஹல்டியா கூறுகையில்,
“அடுத்த ஆறு மாதங்களில் 28 ஐபிஓ-க்கள் வரவுள்ளன. செபி அனுமதி கோரும் 41 நிறுவனங்கள் உட்பட மொத்தம் 69 நிறுவனங்கள் முதன்மை சந்தையில் நுழையத் தயாராக உள்ளன. 3 புதிய தலைமுறை தொழில்நுட்ப நிறுவனங்கள் ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட வாய்ப்புள்ளது. இதில் OYO மற்றும் கோ டிஜிட் இன்சூரஸ் மூலம் ரூ.8,300 கோடி திரட்டப்படும் எனக்கூறப்படுகிறது.
முக்கிய IPO-க்கள்:
ஓயோ மட்டுமின்றி டாடா டெக்னாலஜிஸ், ஜேஎன்கே இந்தியா, டோம் இண்டஸ்ட்ரீஸ், அபீஜய் சுரேந்திரா பார்க் ஹோட்டல்ஸ், எபேக் டியூரபிள்ஸ், பிஎல்எஸ் இ-சர்வீசஸ், இந்தியா ஷெல்டர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், செலோ வேர்ல்ட், ஆர்கே ஸ்வாமி, ஃபிளேர் ரைட்டிங் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அடங்கும். இதில் கோ டிஜிட் இன்சூரன்ஸ் மற்றும் க்ரெடோ பிராண்ட்ஸ் மார்க்கெட்டிங் போன்றவையும் அடங்கும்.

2004க்குப் பிறகு, டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் மீண்டும் ஐபிஓ-வை வெளியிடவுள்ளது. ஆஃபர் ஃபார் சேல் முறையில் 8.11 கோடி பங்குகளை முழுமையாக விற்க ஆயத்தமாகி வருகிறது.
ஓயோ ரூம்ஸ் தொடக்கத்தில் ரூ.8,430 கோடி ஐபிஓவை வெளியிடவுள்ளது. இதில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம் ரூ.7 ஆயிரம் கோடி, ஆஃபர் ஃபார் சேல் முறையில் ரூ.1,430 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
ஹால்டியா தரவுகளின் படி, “2023ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.43,694 கோடி திரட்டப்பட்ட நிலையில், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 69 சதவீதம் அதிகரித்து ரூ.73,747 கோடியாக உள்ளது. நிதியாண்டின் முதல் பாதியில் மேன்கைண்ட் ஃபார்மா (ரூ.4,326 கோடி), ஜேஎஸ்டபிள்யூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (ரூ. 2,800 கோடி) மற்றும் ஆர்ஆர் கேபல் (ரூ. 1,964 கோடி) ஆகியவை மிகப்பெரிய ஐபிஓ வெளியிடாகும். பிளாசா வயர்ஸின் நிறுவனம் ரூ.67 கோடிக்கான ஐபிஓவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.