பார்வையற்றவர்களுக்கு கல்வி ஒளி கொடுக்கும் பார்வையில்லாத வித்யா!
பார்வை மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு விருப்பமான பாடங்களை படிக்க உதவும் வகையில் ‘விஷன் எம்பவர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பார்வை மாற்றுத்திறனாளியான வித்யா.
பார்வை மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு விருப்பமான பாடங்களை படிக்க உதவும் வகையில் ‘விஷன் எம்பவர்’ என்ற நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் பார்வை மாற்றுத்திறனாளியான வித்யா.
பார்வையற்றவர்களின் கல்வி ஒளியாக மாறிய வித்யா:
பிறப்பிலிருந்தே பார்வையற்றவரான வித்யா, பெங்களூருவில் உள்ள கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள பள்ளியில் ஆரம்ப கல்வியை முடித்த வித்யா, உயர் கல்விக்காக பிற குழந்தைகள் படிக்கும் சாதாரண பள்ளியில் சேர்ந்தார்.
சமன்பாடுகள் மற்றும் வரைபடங்களை உள்ளடக்கிய பாடத்திட்டங்களான கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் வித்யாவின் ஆர்வம் அதிகமாக இருந்தது. எனவே, அதனையே படிக்க தீர்மானித்தார். கண்பார்வை இருப்பவர்களே படிக்க சிரமப்படும் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவை அவர் தேர்ந்தெடுத்ததால் பலரது கேலி, கிண்டலுக்கு ஆளாக நேர்ந்தது.
பள்ளிக்குப் பிறகு அடிப்படையான விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு ஒரு ஆசிரியரின் உதவியையும் வித்யா நாடினாலும், தொழில்நுட்ப ரீதியாக அவர்களை அனுகுவதில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்கள் தொடர்பாக செயல் முறை கற்றல்களை பெறுவதும் மிகப்பெரிய சிக்கலாக மாறியது.
இருப்பினும், தன்னம்பிக்கையுடன் தனது படிப்பை தொடர்ந்த வித்யா, முதுநிலைப் படிப்பில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், இன்று அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) படிப்புகளில் பிற பார்வை மாற்றுத்திறனாளிகளும் சாதிக்க உதவு வருகிறார்.
மேலும், தனது பல்கலைக்கழகத்தில் கணிதத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்து, நல்ல மதிப்பெண்களுடன் பாடத்தில் தேர்ச்சி பெற்ற மாநிலத்திலேயே முதல் பார்வையற்ற மாணவி என்ற பெருமையை பெற்றார்.
“சிறுவயதில் இருந்தே எனக்கு எண்கள் மீது விருப்பம் அதிகம். இப்போதும் கூட, நான் சிறுவயதில் ஒவ்வொரு கடுகு விதையையும், நெல்மணியையும் எண்ணிப் பார்த்ததை என் அம்மா நினைவு கூர்ந்தார். இயல்பிலேயே எனக்கு கணிதத்திலும் அறிவியலிலும் நாட்டம் இருந்தது,” எனக்கூறுகிறார்.
நாம் படித்தால் மட்டும் போதாது தன்னைப் போன்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் பலரும் பிடித்தமான படிப்பை படிக்க முடியாமல் கஷ்டப்படுவதை நினைத்து வித்யா மனம் வருந்தினார்.
பியுசிக்குப் பிறகு, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் இளங்கலைப் படித்திருந்தார். ஐஐஐடி பெங்களூருவில் டிஜிட்டல் சொசைட்டி புரோகிராமிங்கில் முதுகலை பட்டம் பெற்றவர். இதனை எல்லாம் கொண்டு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என வித்யா முடிவெடுத்தார்.
‘விஷன் எம்பவர்’ உதயம்:
வித்யா பல படிப்புகளில் தங்கப் பதக்கம் வென்றிருந்தாலும், அவர் பார்வை மாற்றுத்திறனாளி என்பதால் எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கவில்லை. அந்த பின்னடைவை கூட ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த முடிவு செய்தார், மேலும், பார்வையற்ற மாணவர்களுக்கு STEM கல்வியை அணுகும் நோக்கத்துடன் ஒரு தொழில்முனைவோராக மற்றவர்களுக்கு வேலைகளை உருவாக்க முடிவு செய்தார்.
வித்யா, ஐஐஐடி-பியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஐடி நிபுணர் சுப்ரியா டே மற்றும் நிறுவனத்தில் பேராசிரியரான அமித் பிரகாஷ் ஆகியோருடன் இணைந்து ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாஜ ‘விஷன் எம்பவர்’ (VE)- யை நிறுவினார், இது STEM பாடங்கள், கணக்கீட்டுப் பயிற்சி, டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் குழந்தைப் பருவத் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்முறை கற்றலை மேம்படுத்த அணுகக்கூடிய கற்றல் மேலாண்மை தளத்தை வடிவமைத்துள்ளது.
அதன் தொழில்நுட்பப் பிரிவான ‘வெம்பி டெக்னாலஜிஸ்’ குழந்தைகளுக்கான ‘ஹெக்சிஸ்-அன்டாரா’ எனப்படும் உலகின் மிகவும் மலிவு விலையில் பிரெய்லி புத்தக வாசிப்பை உருவாக்கியுள்ளது.
ஒரு பள்ளியில் அறிவியல் மற்றும் கணித தலையீடுகள் தொடங்கி, விஷன் எம்பவர் தற்போது ஆறு மாநிலங்களில் உள்ள 30 பள்ளிகளுடன் STEM, கணக்கீட்டு சிந்தனை மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு போர்ட்ஃபோலியோவில் பணிபுரிகிறது. குறிப்பாக 300 தன்னார்வலர்களின் முயற்சியால், 8,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக பயனாளிகளை தொடர் முடிந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான பார்வையற்ற மாணவர்கள் பார்வையற்ற பள்ளிகளில் படிக்கின்றனர். கணிதம் மற்றும் அறிவியலைக் கற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்று பார்வை குறைபாடுள்ள ஆசிரியர்களால் அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.
“எனக்கு விருப்பமான பாடங்களைப் படிக்கும் போது நான் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை எந்த பார்வைக் குறைபாடுள்ள குழந்தையும் எதிர்கொள்வதில்லை என்பதை உறுதிப்படுத்த நான் உழைக்கிறேன். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு தேவையான அனைத்தையும் VE வழங்குகிறது. மற்றவர்களை இயக்கத்தில் சேர ஊக்குவிக்கவும், பார்வையற்றவர்களின் திறன்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாற்றுத் திறனாளிகளுக்கான வாய்ப்புகளை ஆராயவும் எனது பங்களிப்பை செலுத்தி வருகிறேன்,” என்கிறார் வித்யா.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி