உத்திர பிரதேசத்தில் 3,350 டன் தங்கச் சுரங்கம் இருப்பது உண்மையா?
உபி மாநிலத்தில் 2 தங்கச் சுரங்கம் இருப்பதாக வந்த செய்தி உண்மையா? இந்திய புவியியல் ஆய்வு மையம் என்ன சொல்கிறது?
தங்கம் விலையைக் கேட்டாலே தகிடதோம் ஆடும் அளவிற்கு நடுத்தர வர்க்கத்தினரை பதற்றத்திலேயே வைத்துக் கொண்டிருக்கிறது விறு விறுவென ஏறி வரும் தங்கத்தின் விலை. கொரோனோ வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் இருக்கும் சீனாவின் பொருளாதார நிலை மாற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கமே 4 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. நுகர்வோரின் தேவைக்காக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் விலை உயர்வில் இருந்து தப்பிக்க வழியில்லையா என்று தவித்துக் கொண்டிருந்த நிலையில் தான் கடந்த 2 நாட்களாக ஊடகங்களில் வைரலானது அந்த செய்தி.
உத்திரபிரதேச மாநிலத்தில் இந்தியாவின் கையிருப்பை விட 5 மடங்கு தங்கம் உள்ள இரண்டு சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தீயாக செய்திகள் பரவின. அந்த மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்ட சுரங்க அதிகாரி கே கே ராய் கடந்த வெள்ளிக்கிழமையன்று உபியின் 2 மாவட்டங்களில் தங்கச் சுரங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சோன்பகதி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் மட்டுமே 2,943.26 டன் தங்கம் இருப்பதாகவும் ஹார்தி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் 646.15 டன் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் தற்போது 626 டன் தங்கம் இருப்பு இருப்பதாக உலக தங்க கவுன்சில் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த 2 சுரங்கங்களில் இருக்கும் தங்கம் தற்போதைய இருப்பை விட 5 மடங்கு அதிகம். இதன் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டது.
மாவட்டச் சுரங்க அதிகாரியின் தகவலை வைத்து பெரிய கோட்டையே கட்ட அதை இடிந்துபோகச் செய்தது இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் அறிக்கை.
அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: சோன்பகதி மற்றும் ஹர்தி பகுதிகளில் 3350 டன் தங்க சுரங்கம் இருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் இந்தத் தகவலை தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த செய்திக்கும் புவியியல் ஆய்வு மையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் இது போல் பெரிய அளவு தங்கம் இருப்பதாக புவியியல் ஆய்வு மையம் மதிப்பிடவும் இல்லை.
இந்திய புவியியல் மையம் வடக்குப் பகுதியில் தங்கம் இருப்பு குறித்து பல்வேறு ஆய்வுகளை நடத்தியது. எனினும் அதன் முடிவுகள் சோன்பத்ராவில் இந்த அளவு தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை. 1998-99 மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வு இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சோன்பத்ரா மாவட்டத்தில் சாத்தியமான தாது 52,806.25 டன் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு டன் தாதுப் பொருளில் சராசரியாக 3.03 கிராம் தங்கம் கிடைக்கும். அதன்படி அங்கு இருக்கும் தாதுப்பொருளில் சுமார் 160 கிலோ தங்கம்தான் கிடைக்கும், ஊடகங்களில் வெளியானதுபோல 3,350 டன் அல்ல என்றும் கூறியுள்ளது.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி