6 மாதத்தில் 6.5 லட்சம் வருமானம்: மோமோஸ் தந்த ருசிகர சக்சஸ் தொடக்கம்!
‘மோமோஸ் விற்பதே நல்ல தொழிலாகயிருக்கும் போல’ என்று கல்லூரியில் விளையாட்டாய் பேசிய இந்த கோவை நண்பிகளின் கனவு நினைவாகியுள்ளது.
டில்லி, மும்பை போன்ற பெருநகரங்களின் முக்கிய தெருக்களை ஆக்கிரமித்திருந்த பேல் பூரி, பானி பூரி-யை அடுத்து தற்போது பிரதான ஸ்ட்ரீட் ஃபுட்டாக மாறி வருகிறது ’மோமோஸ்’. இது இப்போ தமிழகத் தெருக்களையும் ஆக்கிரமித்துள்ளது. கோவையின் குளுகுளு சூழலுக்கு ஆவிப்பறந்த திபெத்தியர்களின் கொழுக்கட்டையான மோமோஸ் தற்போது சூடு பறக்க விற்பனையாகிறது.
ருசிபார்க்க இளசுகள் உணவுத் தேடலையே வீக்கெண்ட் பிளானாக்கி சுற்றுகையில், மோமோசின் தேவை அதிகரித்ததை கவனித்தனர் மூன்று ஃபுட்டீஸ். அதற்குத் தீர்வு காண எண்ணிய ஸ்ருதி சுரேஷ், சோனா பிரகாஷ், பிரதிக்ஷா ஆகிய மூன்று தோழிகள் இணைந்து மோமோசுக்காக பிரத்யேகமாய் ‘மோமோலிசியஸ்’ ‘Momolicious' எனும் பெயரில் கஃபே தொடங்கினர்.
அவர்களது நினைத்தது போலவே, கஃபே தொடங்கிய முதல் நாளிலிருந்ததே மோமோசின் பிரியர்கள் மோமோலிஷீயஸை தேடி வரத்தொடங்கினர். அரையாண்டிலே ரூ.6 லட்ச வருமானம் ஈட்டினர்.
மோமோஸின் பூர்வீகம் திபெத். அங்கிருந்து சீனா, ஜப்பான் வழியாக இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்குள் புகுந்து, பல்வேறு வடிவங்களில் பல்வேறு சுவைகளில் பிற மாநிலங்களுக்குள்ளும் பரவிவிட்டது. மோமோஸ், பெயரால் மட்டுமல்ல, சுவையாலும் வித்தியாசமான ஓர் உணவு. வித்தியாசமான இதன் வடிவமே பார்ப்பவர்களை ஈர்த்து, சாப்பிடாதவர்களையும் சாப்பிடத்தூண்டும்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த இந்த மூவருக்கும் மோமோஸ் என்றால் கொள்ளைப் பிரியம். பட்டம் முடித்தபின் சோனாவும், பிரதிக்ஷாவும் நிதிசார் நிறுவனத்தில் பணிபுரிய, பிரபல பைக் நிறுவனமான ஹார்லி டேவிட்சனில் மார்க்கெட்டிங் துறையில் ஸ்ருதி பணிபுரிந்தார். வாழ்க்கையில் வெவ்வேறும் பாதையில் சென்றாலும், மூவருக்கும் தொழில் முனைவராக வேண்டும் என்ற இலக்குடனே பயணித்துள்ளனர். விளைவாய், மூவரும் இணைந்து உணவுத் துறை சார்ந்து ஸ்டார்ட்-அப் தொடங்க முடிவெடுத்தனர்.
அதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்தது அவர்களுக்கு பிடித்தமானதும், வீதி உணவாக கொண்டாடப்படுவதுமான ‘மோமோஸ்’. ஆனால், அம்முடிவு எடுத்ததிலிருந்து ரெஸ்டாரென்ட்டை கட்டமைப்பதற்கு இடையிலான காலத்தில் நிரம்பியிருக்கிறது அவர்களது உழைப்புகள்.
“தீம் சார்ந்த ரெஸ்டாரென்ட் தொடங்கவேண்டும் என்பது முதலிலே எடுத்த முடிவு. மோமோசுக்கான பிராண்ட் உருவாக்கத் திட்டமிட்டவுடன், ஒரு ஆண்டு முழுவதும் அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினோம். மோமோஸ் பிரபலமாக இருந்த சிட்டிகளை நோக்கிப் பயணித்தோம். சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி, மும்பை, அகமதாபாத் என பல இடங்களுக்கு டிராவல் செய்து மோமோஸ் டெஸ்ட் பண்ணோம். பல விற்பனையாளர்களையும் சந்தித்தோம். ஒவ்வொரு ஊர்லயும் மோமோசின் டேஸ்ட் எப்படியிருக்குனு தெரிஞ்ச அப்பறம் நம்மளோட டேஸ்ட்டுக்கு அதை எப்படி பண்ணாலாம்னு எக்ஸ்ப்ரீமென்ட் பண்ணி பார்த்தோம். நம்ம மக்கள் விரும்பும் காரச்சாரமான ரெசிப்பிகளை உருவாக்கினோம்,” என்று மோமோலிசியஸ் பிறந்தகதை பகிர்ந்தார் ஸ்ருதி.
மோமோலிசியஸின் மூன்று நிறுவனர்களது முந்தைய தலைமுறைகளும் தொழில் முனைவர்களே. வணிகக்குடும்பத்தில் பிறந்த மூவருக்கும் இயல்பாகவே தொழில் சார்ந்த போதிய வழிகாட்டுதல் இருந்ததால், மோமோலிசியசை வெறுமனே சக்சஸ்புல் பிசினஸாக்க வேண்டும் என்பதைத் தாண்டி, இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் பிராண்ட்டாக முன்னிறுத்த வேண்டும் என்பதே அவர்களது இலக்காக இருந்தது. இது அவர்களது முதல் கிளை. அவ்வெண்ணித்திலே மோமோலிசியசின் கட்டிடமைப்பு, ரெசிப்பிகளின் டேஸ்ட் என அனைத்திற்கும் தரநிலை நிர்ணயித்தனர்.
“கான்செப்ட்டுனு முடிவாகிய அப்பறம், லோகேஷன் தேடுதல் வேட்டை ஆரம்பிச்சது. ஸ்கூல், காலேஜ், ஆஸ்பிட்டல்ஸ் இருக்கிற இடமாக தேடினோம். அப்படி தேடியதில் பீளமேட்டில் ஒரு காலி இடம் நாங்க எதிர்பார்த்தபடி கிடைச்சது. டெம்பரரி கட்டடமா பண்ணிகோங்கனு சொன்னாங்க. அதனால், எதிர்காலத்தில் வேற இடத்துக்கு மாற்றிக் கொண்டாலும், மோமோலிசியஸ்னா இப்படிதான் இருக்கும்னு தரநிலை செட் பண்ண நினைச்சோம்.
எக்ஸ்பென்சிவ்வா இருந்தாலும் ஒரு கண்டெய்னர் வாங்கி அதை ரீமாடலிங் செய்தோம். யெல்லோவ் அண்ட் பிளாக் தீமிலில் ரெஸ்டாரென்ட்டை உருவாக்கினோம். அதற்காக ரூ.25 லட்சம் வரை முதலீடு செய்தோம். ஆனால், அதற்கான வருமானத்தையும் முதல் மாதத்திலிருந்தே பெறத் தொடங்கிவிட்டோம்.
6 மாதத்திலே ரூ.6.5 லட்சம் வருவாய் கிடைத்தது. ஆன்லைன் டெலிவரி ஆப்’பிலிருந்து மட்டும் நாளொன்றுக்கு 50 - 60 ஆர்டர்கள் கிடைக்கும். வீக்கெண்ட் மற்றும் விசேஷ நாட்களில் 150-யும் தாண்டும்,” என்று உற்சாகமாய் கூறினார் ஸ்ருதி.
மதியம் 2மணி முதல் நைட் 2 மணி வரை கஃபே செயல்படுவதால், நைட் ஃபுட்டிகளுக்கு நல்லதொரு அனுபவத்தை கொடுக்கிறது மோமோலிசியஸ். ஏனெனில், கன்டெய்னரின் மாடிப்புறத்தில் ரூஃப்டாப் டைனீங் சேவையும் வழங்குகின்றன.
தவிர, ஈவ்னிங் ஸ்நாக்ஸாக மட்டுமே கடந்துவிட முடியாத அளவிற்கு, ஸ்டார்டர் தொடங்கி மெயின் டிஷ் வரை அவர்களது மெனு முழுக்க மோமோக்களின் ராஜ்ஜியம் தான். ஸ்டீம்டு மோமோஸ், டீப் ப்ரைடு மோமோஸ், மோமோஸ் பர்கர், மோமோஸ் சூப், மோமோஸ் சாண்ட்விச், லசங்கா மோமோஸ், கேஎஃப்சி ஸ்டைஸ் மோமோஸ், மோமோஸ் கிரேவி என 350 வெரைட்டி ஆப் மோமோஸ்களை கொண்டுள்ளது மோமோலிசியஸ்.
“தொடங்கிய புதிதில் கிச்சன் டீம் செட் பண்றதில் தான் ரொம்ப சிரமமாக இருந்தது. மோமோசின் ரியல் டேஸ்ட் கொண்டுவரணும்னு நார்த் இந்தியன் செஃப்பை தான் பணிக்கு அமர்த்தினோம். ஆனால், கம்யூனிகேஷன் பிரச்சினையால் கரெக்ட்டான கிச்சன் டீம் செட் பண்ண முடியாம இருந்தது.
நம்மவூர் செஃப் கிடைத்தபின், அவர்களது சப்போர்ட் பயங்கரமாக கிடைத்தது. மாதத்துக்கு ஒரு புது ரெசிபியை மெனுவில் சேர்க்க ஆரம்பித்தோம். லேபர் பிரச்சினை தீர்ந்தாலும், லேட் நைட் 2மணி வரை ரெஸ்டாரென்ட் இருக்குறதால எங்க மூணு பேருல யாராச்சும் ஒரு ஆளு கண்டிப்பா ரெஸ்டாரென்டில் இருந்தாகணும். அதுக்காக எங்க வீட்டிலருந்தும் யாராவது ஒருத்தங்க கூடவேயிருந்து கூட்டிட்டு போகுற மாதிரி இருந்தது. இப்போ, நாங்க ரெஸ்டாரென்ட்டுக்கே போகலைனாலும், ஆப்ரேட்டாகி கொண்டேயிருக்கும்,” எனும் அவர்களது அடுத்த இலக்கு கிளை விரிவாக்கம்.
ஆனால், கிளை விரிவாக்கத்தில் இருந்தே சிறுசிறு சந்தேகங்களுக்காக, ப்ரான்சைசிங் வணிகத்தின் கிங்கான நேச்சுரல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் சி.கே. குமாரவேலை ஃபேஸ்புக் வழி அணுகியுள்ளனர். மெசேஞ்சர்சில் அனுப்பப்பட்ட குறுந்தகவல் 1 மணிநேர மீட்டிங்கிற்கு வித்திட்டுள்ளது.
“ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சிக்கு குமாரவேல் சார் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்காரு தெரிஞ்சு, அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினோம். அவரிடம் இருந்து ரிப்ளை அவ்ளோ உடனே கிடைக்கும்னு நினைக்கல. மீட்டிங் டைம் ஒதுக்கியதுடன், 1 மணிநேரத்தில் அவர் பேசிய விஷயங்கள் எங்களுக்குள்ளே நிறைய கேள்விகளை எழுப்பி, அதற்கு விடை காண வைத்தது.
கோவையில் அடுத்தடுத்த கிளைகளுக்கான இடம் பார்த்துக் கொண்டிருக்கோம். ப்ரான்சைசிங் பண்றதுக்கும் தயாராகிவிட்டோம்...” என்றார் இறுதியாக.