கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35,000 கோடி: பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை!
கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பட்ஜெட் உரையில் அறிவித்தார் நிர்மலா!
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 2021-22க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கொரோனா பெருந்தொற்று காரணமாக பேப்பர்லெஸ் பட்ஜெட் என்பதால் காகித ஆவணங்களுக்குப் பதில் 'டேப்லெட்' மூலம் பட்ஜெட் உரையை நிகழ்த்தி வருகிறார்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என பட்ஜெட் உரையில் அறிவித்தார் நிர்மலா.
"கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகமாக வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் ரூ.64,180 கோடி மதிப்பில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தற்சார்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை அளித்தல் ஆகிய விஷயங்களில் சுகாதாரத்துறை கவனம் செலுத்தும். அந்தவகையில்,
"கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான பட்ஜெட் செலவினம் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.2.23 லட்சம் கோடி ஆகும். இது தற்போது ரூ.94,452 கோடி மற்றும் 137 சதவிகிதம் அதிகரித்துள்ளது," என்றார் நிர்மலா சீதாராமன்.
தொடர்ந்து பேசியவர், 2021லும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். கொரோனாவுக்கு எதிராக மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் நடைமுறைக்கு வரும். இந்த 2 தடுப்பூசிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன, என அவையில் அறிவித்தார்.
அவசரகால பயன்பாட்டிற்காக இந்தியா ஜனவரி மாதத்தில் இரண்டு தடுப்பூசிகளை - எஸ்ஐஐ தயாரித்த ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகியவற்றை அனுமதித்தது. ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கோவிட் -19 தடுப்பூசி இயக்கம் அறிமுகப்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். கிட்டத்தட்ட மூன்று கோடி சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.
அதன்படி, COVID-19 தடுப்பூசி செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, முதலில் ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கும், சுமார் இரண்டு கோடி முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டது வருகிறது. இன்னும் சில தினங்களில் பின்னர் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும், பின்னர் 50 வயதுக்கு குறைவான நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.
முன்னதாக அரசு, கொரோனாவுக்கு எதிரான போரை கடினமாக எடுத்துக்கொண்டுள்ளது என்பதை உணர்த்தும் விதமாக,
“கொரோனா பெருந்தொற்று நாட்டை பெரிதும் பாதித்திருக்கிறது. இதன்காரணமாக இந்திய பொருளாதாரமும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதுவரை இல்லாத பெருந்தொற்றால் நாடு பாதிப்படைந்திருக்கும் காலத்தில் நான் இந்த மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்,” என்றார் நிதி அமைச்சர்.
லாக்டவுன் அறிவிக்காமல் இருந்திருந்தால், கொரோனாவால் இந்தியா பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கும். நம் மக்கள் கொரோனாவிலிருந்து விரைந்து வெளியில் வர வேண்டும் என்பதற்காக இரண்டு தடுப்பூசிகளை மத்திய அரசு விரைவாக கொண்டுவந்துள்ளது, என பட்ஜெட் உரை தொடக்கத்திலேயே உணர்ச்சிமிகுதியில் பேசினார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தொகுப்பு: மலையரசு