'நாட்டின் பொருளாதார மீட்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது'– நிர்மலா சீராதாரம்!
இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டைத் தாங்கிப் பிடிக்கும் ஆறு முக்கியத் தூண்களை சுட்டிக்காட்டினார்.
2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
“இருள் சூழ்ந்திருக்கும்போது ஒளியின் பாடலைக் கண்டறிந்து இசைக்கத் தொடங்கிவிடுகிறது நம்பிக்கை என்னும் பறவை...” – என்ற ரவீந்திரநாத் தாகூர் வரிகளை மேற்கோள் காட்டி இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வருவதால் இது நவீன இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டாக கருதப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“இதுவரை மூன்று முறை மட்டுமே பட்ஜெட்டிற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. இந்த முறை மற்ற உலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் பெருந்தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார மீட்சியை ஊக்குவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது குறிப்பிட்டுள்ளார்.
கீழ்கண்ட ஆறு முக்கியத் தூண்களே 2021-22 பட்ஜெட்டைத் தாங்கிப் பிடிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்:
1. சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு
2. கட்டமைப்பு வசதி
3. உள்ளடக்கிய வளர்ச்சி
4. மனிதவள மேம்பாடு
5. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
6. அரசின் குறைந்த அரசு தலையீடு, கூடுதல் நிர்வாகம்
இந்தியப் பொருளாதார மீட்சி
இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். சுயசார்பு இந்தியா திட்டமும் கோவிட்-19 பொருளாதார நிவாரண உதவித் தொகுப்புகள் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது என்று சுட்டிக்காட்டினார். இந்த பட்ஜெட் அத்தகைய திட்டங்களின் நீட்சியே என்றும் தெரிவித்தார்.
“இது ஒரு புதிய விடியல். நம்பிக்கையும் உறுதியுமிக்க ஒரு எதிர்காலத்துக்கான தருணம்,” என்றார்.
இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவப்பு வண்ண வெல்வெட் துணியால் சுற்றப்பட்ட ‘மேட் இன் இந்தியா’ டேப்லெட் ஒன்றை கையில் ஏந்தியவாறே நாடாளுமன்றத்தை வந்தடைந்தார். கடந்த இரண்டாண்டுகளாக சிவப்பு வண்ணத் துணியால் சுற்றப்பட்ட கோப்புகளையே கையில் ஏந்தி வந்த நிதியமைச்சர் இந்தாண்டு டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் டேப்லெட் கொண்டு வந்தார்.
இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அனைத்துத் துறைகளிலும் சீர்திருத்தங்கள் இருக்கும் என இந்திய நிறுவனங்களும் ஸ்டார்ட் அப்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றன.
2022-23 நிதியாண்டில் 6.5 சதவீதமும் 2023-24 நிதியாண்டில் 7 சதவீத வளர்ச்சி விகிதமும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நோக்கிய முன்னெடுப்பிற்கு உதவும் வகையில் பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஸ்டார்ட் அப் சமூகமானது நாட்டின் வளர்ச்சியை முடுக்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1,000 கோடி ரூபாய் சீட் நிதியையும் கொரோனா பெருந்தொற்று சமயத்தில் அரசு வழங்கிய ஆதரவையும் ஸ்டார்ட் அப் சமூகம் கொண்டாடி வரும் நிலையில் தலைவர்களும், தொழில்முனைவோர்களும் மற்ற பங்குதாரர்களும் கட்டமைப்பு வசதி மற்றும் செயல்பாட்டு சீர்திருத்தங்களுக்கான தேவைகளை வலியுறுத்துகின்றனர்.
தொகுப்பு: ஸ்ரீவித்யா