'புறக்கணிக்காதீர்கள்... நாங்களும் சாதிப்போம்': திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ ஷர்மிளா!
11 ஆண்டுகளாக நம்பிக்கையிழக்காமல் இருந்ததன் பலனாக தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டுள்ளார் 36 வயது சத்யஸ்ரீ ஷர்மிளா.
கடந்த ஜூன் 30ம் தேதி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய காத்திருந்த 485 பேரில் ஒருவர் மட்டும் தனிச்சிறப்பு பெற்றவர். அவர் வேறு யாரும் இல்லை 36 வயது சத்யஸ்ரீ ஷர்மிளா. ஆம் சத்யஸ்ரீ ஷர்மிளா வாழ்த்தப்படுவதற்கு முக்கியக் காரணம் இவர் தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கும் சத்யஸ்ரீ ஷர்மிளா இந்த நிலைக்கு அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை. வலிகள், ஏளனப் பேச்சுகளைத் தாண்டித்தான் இன்று தன்னை ஒரு வழக்கறிஞராக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுநாள்வரை ஏளனம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட வலியை அனுபவித்தவர், இப்போது முகம் தெரியாதவர்கள், முன்பின் தெரியாவர்களும் தன்னைப் பார்த்து புன்னகைப்பதை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார். தனது வாழ்க்கைப் போராட்டம் குறித்து தமிழ் யுவர் ஸ்டோரியிடம் சத்யஸ்ரீ ஷர்மிளா பகிர்ந்து கொண்டார்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஒரு சிறிய கிராமத்தில் உதயகுமாராகப் பிறந்தவர் தான் திருநங்கை சத்ய ஸ்ரீஷர்மிளா. பெற்றோருக்கு 2வது ஆண் பிள்ளையாக பிறந்தவர் 5 வயதிலேயே தனக்கு பெண் பிள்ளைகளுக்கான உணர்வுகள் வந்துவிட்டதை உணர்ந்திருக்கிறார்.
“என்னுடைய அப்பா அரசு ஊழியர் குடும்பத்தில் நான் இரண்டாவது பையன். அண்ணன், 2 தம்பிகள் என மொத்தம் ஆண் பிள்ளைகளின் கூட்டமாகவே இருந்தாலும் நான் மட்டும் இவர்களை விட மாறுபட்டே இருந்தேன்.”
சிறு வயதிலேயே என்னுடைய பெரியம்மாவின் பெண் குழந்தைகளின் ஆடைகளை உடுத்திப் பார்ப்பது, பெண் பிள்ளைகளோடு விளையாடுவது என்றே இருந்து வந்ததால் அம்மாவிடம் பல முறை அடி வாங்கி இருக்கிறேன். சமைப்பது, பாத்திரம் கழுவுவது, காய்கறி நறுக்கிக் கொடுப்பது என்று வீட்டு வேலைகளில் அம்மாவிற்கு உதவியாக இருப்பேன். சில சமயங்களில் அம்மா அவருக்கு பெண் பிள்ளை இல்லை என்கிற குறையை நான் போக்குவதாக நினைப்பார். ஆசையோடு நான் செய்யும் வேலைகளை ஏற்றுக்கொள்வார், ஆனால் பல சமயம் அடி வெளுத்துவிடுவார் என்று வெள்ளந்தியாகக் கூறுகிறார் சத்யஸ்ரீ.
அப்பாவும் அப்படித்தான் அம்மாவின் சமையல் பிடிக்கவில்லை என்று சொல்லி என்னை சமைக்கச் சொல்லி சாப்பிடுவார். எனினும் இருவருக்குமே என்னை இந்த சமுதாயம் எப்படி பார்க்கும் என்ற பயத்தினால் பல சமயங்களில் அடி உதைகள், ஏச்சு பேச்சுகளுடனே இளவயதில் நாட்கள் கழிந்தன.
பரமக்குடியில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிப்பை படித்து முடித்த சத்யஸ்ரீ படிப்பில் ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் சராசரி மாணவியாக திகழ்ந்திருக்கிறார். “நான் படித்த பள்ளி இரு பாலர் கல்வி பயிலும் பள்ளி, வகுப்பில் கூட எனக்கு ஆண் நண்பர்களை விட பெண் தோழிகளே அதிகம். என்னுடைய நெருக்கமான நண்பர்கள் சிலருக்கு எனக்கு அப்போது இருந்த உணர்வு குறித்து தெரியும் சிலர் என்னைப் புரிந்து ஏற்றுக்கொண்டாலும் பலர் கிண்டலும் கேலியுமே செய்தனர். எனினும் நான் திருநங்கை என்பதை உணர்ந்திருந்த காரணத்தால் படிப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்,” என்று கூறுகிறார் சத்யஸ்ரீ.
பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் பரமக்குடி அரசுக் கல்லூரியில் இளநிலை கார்ப்பரேட் செக்ரடிரிஷிப் படித்து முடித்து விட்டு சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு காத்திருந்துள்ளார் சத்யஸ்ரீ ஷர்மிளா. சேலம் சட்டக்கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் தந்தையின் அறிவுறுத்தல் ஒரு புறம் மற்றொரு புறம் திருநங்கைகள் சமுதாயத்திற்கு இந்த படிப்பு உதவும் என்பதை மனதில் வைத்து சட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார்.
2004ம் ஆண்டு சேலம் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது நான் ஆண்பிள்ளையாகவே இருந்தாலும் சக மாணவர்களுடன் விடுதியில் தங்கிப் படிக்க விரும்பவில்லை ஏனெனில் உடல் அமைப்பிலும் மனதளவிலும் பெண்ணிற்கான மாற்றங்கள் இருந்ததால் எனக்கு ஒரு அச்சம் இருந்தது. மற்றொருபுறம் பெண்கள் விடுதியிலும் என்னை அனுமதிக்கமாட்டார்கள் இதனால் தனியாக அறை எடுத்து தங்கிப் படித்து வந்தேன் என்கிறார் சத்யஸ்ரீ.
கல்லூரி காலத்திலும் பலரின் கேலிப் பேச்சுகளுக்கு ஆளாகி இருக்கிறேன், அதைப்பற்றிய கவலைகள் இருந்தாலும் எனக்குள் மாற்றத்தை படைத்த ஆண்டவனை நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பெண்களின் உடையணிந்து நடனமாடி எனது ஆசையை அவ்வபோது நிறைவேற்றிக்கொள்வேன் என்கிறார் சத்யஸ்ரீ.
18 வயது வரை பெண் என்ற உணர்வை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு வெளி உலகிற்கு ஆணாக நடந்து கொள்ள முடியாமல் கிண்டல் பேச்சுகளை சகித்துக் கொள்வதை விட திருநங்கையாகவே மாறிவிடலாம் என்று முடிவெடுத்து குடும்பத்தினருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளார் சத்யஸ்ரீ ஷர்மிளா.
“சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது திருநங்கைகள் சமுதாயத்தினருடன் பழகத் தொடங்கினேன். என்னைப் போன்றே உணர்வுள்ளவர்களுடன் பேசிப் பழகுவது மனதிற்கு ஆறுதலாக இருந்தது. எப்படியும் இந்த சமுதாயம் கேலிப் பேச்சுகளை நிறுத்தப்போவதில்லை எதற்காக இன்னும் ஆண் என்ற வேஷம் என நினைத்து சட்டப்படிப்பு முடித்த பின்னர் முழுவதும் திருநங்கையாக மாறினேன்.
”2007ம் ஆண்டில் வெளிஉலகிற்கு உதயகுமாராக இருந்த நான் திருநங்கையாகி எனது பெயரை சத்யஸ்ரீ ஷர்மிளா என்று மாற்றிக் கொண்டேன்,” என்று கூறுகிறார்.
காஞ்சிபுரத்தில் இருந்த திருநங்கைகள் சமுதாயத்தினருடன் எனது பயணம் 2007ம் ஆண்டு தொடங்கியது. அதன் பின்னர் திருநங்கைகளுக்கான சமூக ஆர்வலராக செயல்படத் தொடங்கினேன். வயிற்றுப் பிழைப்பிற்காக கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்தேன், வடஇந்தியாவின் பல இடங்களிலும் பணிக்காக சுதந்திரமாக சுற்றித் திரிந்தேன். சட்டப்படிப்பு முடித்த போதும் வழக்கறிஞராக பதிவு செய்யாமல் இருந்ததற்கு காரணம் அதற்கான வாய்புகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை என்கிறார் சத்யஸ்ரீ.
மூன்றாம் பாலினத்தவருக்கும் தனியாக ஒரு இடம் ஒதுக்க வேண்டும் என்று 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு இனி அனைத்திலும் திருநங்கை சமுதாயத்திற்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. அப்போது நான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், பாஸ்போர்ட்டிற்காக அரசுத் துறையை அணுகிய போது மூன்றாம் பாலினத்தவருக்கென தனி காலம் சேர்க்கப்பட்டதை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் திருநங்கை என அச்சிடப்பட்டு பாஸ்போர்ட் கிடைத்தது. திருநங்கை என அச்சிட்டு முதன்முதலில் பாஸ்போர்ட் வாங்கியதும் நான் தான் என்று பெருமையோடு கூறுகிறார் சத்யஸ்ரீ.
கடும் சட்ட போராட்டங்களுக்கு பிறகு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ள பிரித்திகா யாஷினி போல சட்டத்துறையில் முதல் திருநங்கை வழக்கறிஞராக அடியெடுத்து வைத்துள்ளேன்.
“தமிழகத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்று அனைவரும் என்னைக் கொண்டாடுவதை பார்க்கும் போது 35 ஆண்டுகளாக அனுபவித்து வந்த வலிகள் எல்லாம் காணாமல் போய்விட்டது,” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.
சட்டம் படித்து முடித்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறேன். முன்னரே வந்து பார் கவுன்சிலை அணுகி இருக்கலாமே என்று வழக்கறிஞர்கள் கூறியது அவர்கள் எனக்கு அளிக்கும் மதிப்பு என்ன என்பதை புரிய வைத்துள்ளது. இதே போன்று சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர் சங்கத்தினர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை சந்திக்க வைத்தது மறக்க முடியாதது. தலைமை நீதிபதியும், நான் ஒரு நீதிபதியாக வர வேண்டும் என்று வாழ்த்தியது மிகுந்த உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்ததாக ஆனந்தத்துடன் தெரிவிக்கிறார் சத்யஸ்ரீ.
”என்னைப் பார்த்து ஒதுங்கிப் போனவர்கள் கூட தேடி வந்து வாழ்த்து தெரிவித்தனர், முகம் சுளித்துக் கொண்டு போனவர்கள் எல்லாம் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்று அடையாளம் கண்டு புன்னகைக்கின்றனர். மூத்த வழக்கறிஞர்கள் பலரும் எனக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கல்வி என்ற ஒன்றால் மட்டுமே இன்று பலரின் ஏளனப் பார்வையையும் ஆச்சர்யப் பார்வையாக மாற்றி இருக்கிறேன்," என்கிறார் சத்யஸ்ரீ.
திருநங்கைகள் பற்றி சமூகத்திற்கு தவறான பார்வையே இருக்கிறது, அவர்கள் விரும்பி பாலியல் தொழிலாளர்களாக செல்வது கிடையாது. வயிற்றுப் பிழைப்பிற்கு வேறு வழியில்லாமலே இந்த தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். மற்றொருபுறம் இவர்களின் இந்த நிலைக்கு சமூகமும் ஒரு முக்கியக் காரணம். சமுதாயத்தில் சக மனிதன் அனுபவிக்கும் அடிப்பைடை வசதிகள் வேலைவாய்ப்பில் இருந்து புறக்கணிக்கப்படும் போது ஏற்படும் கோபத்தின் உச்சத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற முடிவை திருநங்கைகள் எடுத்துவிடுவதாகக் கூறுகிறார் சத்யஸ்ரீ. நான் ரயிலில் வரும் போது கூட்ட நெரிசலான நேரத்தில் எனக்கு அருகில் இடம் இருந்து அமரத் தயங்குகின்றனர். நாயைக் கூட மடியில் வைத்து கொஞ்சும் இந்த மக்கள் நாங்களும் மனிதர்கள் தான் என்பதை ஏற்க மறுக்கின்றனர். பல முறை பெண்களிடம் இதற்காக சண்டையும் கூட போட்டுள்ளேன் என்று ஆதங்கப்படுகிறார் ஷர்மிளா.
ஒவ்வொரு முறையும் தோல்விகளை சந்திக்கும் போது அதில் இருந்து பாடத்தை கற்றுக் கொண்டேன். தோல்வியில் இருந்து கிடைத்த அனுபவத்தை வைத்து அடுத்த அடியை எப்படி உறுதியாக வைக்க வேண்டும் அதில் எந்த அளவிற்கு திடமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொள்வேன் என்கிறார் ஷர்மிளா.
திருநங்கைகளாக இருப்பது சாபமல்ல இதுவும் இறைவனின் படைப்பில் ஒன்று தான், எனவே நாம் திருநங்கை என்று சோர்ந்து விடாமல் எல்லாத் துறைகளிலும் திருநங்கைகள் காலூன்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
திருநங்கைகளின் வளர்ச்சிக்கு சமுதாயமும் தனது பங்களிப்பை அளிக்க வேண்டும். அவர்களால் உதவ முடியவில்லை என்றால் கூட உபத்திரம் கொடுக்காமல் இருந்தாலே பெரும் உதவிதான் இதைச் செய்தாலே திருநங்கைகள் வாழ்வில் ஏற்றம் அடைவார்கள் என்று கூறுகிறார் ஷர்மிளா.
வாழ்வில் நான் இந்த நிலைக்கு வர எத்தனை கஷ்டங்களைக் கடந்து வந்தேன் என்பதை கூறி மற்ற திருநங்கைகள் தடைகளை எப்படி கடந்து வர வேண்டும், தடைகள் ஏற்படாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்வேன். இதே போன்று முறையாக வழக்கறிஞராக பயிற்சி பெற்று திருநங்கைகள் சமுதாயம் வளர்ச்சியடைய எந்த விதமான சட்ட உதவிகள் தேவையோ அந்த உதவிகளை செய்வேன், திருநங்கைகளின் சட்டப் போராட்டங்களுக்கு உதவியாக இருப்பேன் என்றும் கூறுகிறார் திருநங்கைகள் சமூகத்தின் நட்சத்திரமாகியுள்ள சத்யஸ்ரீ ஷர்மிளா.