Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘இந்தியாவின் காட்டுராஜா’- 39 ஆண்டுகள்; 1360 ஏக்கரில் தனிமனிதனாக காடு வளர்த்த ஜாதவ் பயேங்!

ஜாதவ் பயேங் - இந்தியாவின் வனமகன். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவரது வரலாறை அமெரிக்க மாணவர்கள் படிக்க போகிறார்கள். எதற்காக? யார் அவர்?

‘இந்தியாவின் காட்டுராஜா’- 39 ஆண்டுகள்; 1360 ஏக்கரில் தனிமனிதனாக காடு வளர்த்த ஜாதவ் பயேங்!

Wednesday November 11, 2020 , 6 min Read

ஜாதவ் பயேங் என்ற பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? யாரது என்கிறீர்களா? வியக்கத்தகு மனிதர் - ‘இந்தியாவின் வனமகன்'. ஜாதவ்வை பற்றி தெரிந்து கொள்ள இச்சம்பவத்திலிருந்து தொடங்கலாம்.

2008ம் ஆண்டில் ஒரு நாள் பிரம்மபுத்திராவில் உள்ள ஒரு நதிதீவின் குடியிருப்புப் பகுதிகளை துவம்சம் செய்து சென்றது காட்டு யானைக்கூட்டம். யானைகளை துரத்திக் கொண்டே சென்ற வனத்துறை அதிகாரிகள், கடைசியில் அடைந்த இடம் ஒரு காடு. வனத்துறை அதிகாரிகளுக்கோ நம்பமுடியா ஆச்சரியம். ஏனெனில், அவர்கள் வசமிருந்த வரைப்படத்தில் அப்படியொரு காடேயில்லை. அவ்விடத்தில் நதியின் நடுவே மணற்படுகையே இருந்துள்ளது. மிகுந்த குழப்பத்தின் இறுதியாய், பரந்து விரிந்த காடு எப்படி உருவாகியது என்ற தேடலின் விடையாகினார் ஜாதவ் பயேங். ஆம், அக்காட்டின் ராஜா ஜாதவ் பயேங்.

ஒன்றல்ல, இரண்டல்ல 30 வருட அயராத உழைப்பினால், 1,360 ஏக்கர் நிலப்பரப்பளவில் தனிமனிதனாக பெரும் காட்டையே உருவாக்கியுள்ளார். மெய் சிலிரித்து... ‘என்ன மனுசன்யா' என சொல்ல தோன்றும் ஜாதவ்வின் பயணத்தை ஆதியிலிருந்து தெரிந்து கொள்வோம்.

jadhav

ஜாதவ் பயேங்

அசாம் மாநிலத்தின் பிரம்மபுத்திரா நதியின் நடுவே சிறு, சிறு தீவுகள் உள்ளன. அவை மொத்தமாக மஜூலி தீவுகள் என அழைக்கப்படுகின்றன. மஜூலி; உலகின் மிகப்பெரிய நதி தீவு. அதிலொரு தீவான அருணா சபோரியில் பிறந்தவர் ஜாதவ் பயேங். அசாமின் இரண்டாவது பெரிய பழங்குடி இனமான மிஸிங் இனத்தை சேர்ந்தவர்.


7 சகோதரிகள், 5 சகோதரன்கள் என பெரிய குடும்பம் ஜாதவுடையது. அவரது தந்தை லக்கிராமும் தாய் அபோலியும், கால்நடைகளை வளர்த்து அவற்றிலிருந்து கிடைக்கும் பாலை விற்று பிழைக்கும் எளிமையான வாழ்வை மேற்கொண்டனர். பிரம்மபுத்திராவில் வெள்ளோற்சவம் என்பது வருடாந்திர நிகழ்வு. அப்படி ஓராண்டு கரைபுரண்டு பெருக்கெடுத்து வந்த வெள்ளம் ஜாதவ்-ன் குடும்பத்தை நிலை குலையச் செய்தது.


பிழைப்பு தேடி 12 கி.மீ தொலைவில் ஆற்றின் மறுகரையிலிருந்த மஜூலி என்ற தீவுக்கு இடம்பெயர்ந்தனர். கடுமையான வறுமையால் 5 வயதான ஜாதவை அசாமின் ஜோர்ஹட் மாவட்ட நீதிமன்றப் பணியாளராக பணிபுரிந்த அனில் போர்தாகூரிடம் ஒப்படைத்தனர். அவரே ஜாதவை படிக்க வைத்து வளர்த்தார். இந்நிலையில், ஜாதவின் பெற்றோர் நோய்வாய்பட, கால்நடைகளை கவனித்து கொள்ள மஜூலியை அடைந்தார் ஜாதவ்.


1979ம் ஆண்டில் மீண்டும் வெள்ளம். நதி நூற்றுக்கணக்கான பாம்புகளை தனது கோர வெள்ளத்திற்கு பலியாக்கி, தனது படுகையில் தூக்கி வீசிவிட்டு சென்றது. ஏராளமான பாம்புகள் செத்துக்கிடந்தன. சில பாம்புகள் சுடுமணலின் வெப்பம் தாங்க முடியாமல் உயிர் துடிக்க நெளிந்து கொண்டிருந்தன. பாம்புகளின் நிலை கண்டு தவித்து போனார் பத்தாம் வகுப்பு சிறுவனான ஜாதவ்.


பதறி அடித்து ஊராரிடம் சென்று பாம்புகளின் நிலை குறித்து கூறினார். அதற்கு அவர்கள், அச்சிறு பிராணிகள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மரங்கள் சூழ்ந்து இருந்திருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறியுள்ளனர்.

‘‘வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான பாம்புகள் தூக்கி வீசப்பட்டன. வெள்ளம் வடிந்த நிலையில் சில பாம்புகள் இறந்தும், சில பாம்புகள் சுடுமணலில் துடித்துக் கொண்டிருந்தன. இன்று பாம்புகளுக்கு ஏற்பட்ட நிலை, நாளை மனிதர்களுக்கு ஏற்பட்டால்?'' என்ற இக்கேள்வி ஜாதவின் மனதுக்குள் எழுகையில், அவருடைய வயது 16.
jadhav

பழங்குடியின மக்கள் மரம் வளர்த்தலே இதற்கு ஒரே தீர்வு என்றதுடன், அவர் கையில் சில விதைகளையும், 25 மரக்கன்றுகளையும் கொடுத்துள்ளனர். உற்சாகத்துடன் விதைகளைத் தூவி, மரக்கன்றுகளை நட்டார். ஒரு மரம் கூட இல்லாத வெண்மணல் காட்டில், நட்ட விதையிலிருந்து சிறு துளிர் எழும் என நம்பிக்கையில் இருந்தார். ஆனால், நாளடைவில் ஜாதவின் நம்பிக்கை பட்டுப்போனது.

என் செய்வது என அறியாதிருந்த ஜாதவ், வனத்துறையினரை அணுகினார். ஆற்றுமணலில் வளருவதற்கு ஏற்ற மரம் மூங்கில் எனக் கூறினர். ஜாதவின் முகத்தில் பழைய உற்சாகம். மூங்கில் மரக்கன்றுகளுடன் தீவினை அடைந்தார். ஒவ்வொரு கன்றுக்கும் தனி கவனம் செலுத்தினார். ஒவ்வொரு கன்றும் மெல்ல துளிர்விட்டது. அப்போது அவர் மனதிலும் ஒரு லட்சியம் உருவெடுத்தது. அப்பரந்த நிலப்பரப்பில் ஒரு காட்டை உருவாக்கத் தீர்மானித்தார்.

மூங்கில் மரங்களுடன், மற்ற மரக்கன்றுகளை வளர வைப்பதற்கான வழியினையும் தேடி அலைந்தார். செவ்வெறும்புகள் மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதை அறிந்தவர், செவ்வெறும்புகளை தேடி தேடி சேகரித்து கொண்டு வந்தார்.


செவ்வறும்புகள் ஊர்ந்து செல்லச் செல்ல ஆற்றுமணலை துளைத்து மணற்படுகைக்கு கீழுள்ள சத்துமிகுந்த மண்ணை மேல்நோக்கி உயிர்பித்து கொண்டுவந்தன. பிற மரக்கன்றுகளும் வேர்பிடித்தன. வெண்மணல் தீவில் பச்சை படரத் தொடங்கியது. அதற்காக படிப்பையும் துறந்தார். அச்சமயத்தில், ஜாதவிற்கு எக்ஸ்ட்ரா பூஸ்ட் கொடுக்கும் வகையில் தீவுப் பகுதியில், ‘சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டம்' செயல்படுத்தப்பட்டது.


திட்டத்தின் முதல் பணியாளாய் பணிக்குச் சேர்ந்தார் ஜாதவ். 5 ஆண்டு திட்டம் அது. கேட்டு கேட்டு அனைத்தையும் அறிந்து கொண்டார். திட்டம் முடிவடைந்தது. அனைவரும் வீடு திரும்பினர். ஆனால், ஜாதவின் பணி முடியவில்லை. அன்றிலிருந்து ஒரு படிமேல் உழைக்க ஆரம்பித்தார். விதைகளைத் தேடி சேகரித்தார்.


ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மரக்கன்றுகளை நட்டார். ஆண்டின் மற்ற மாதங்கள் முழுவதும், விதை சேகரிப்பு. தன்னிலை மறந்து மரம் தான் அவருக்கு எல்லாமுமாக ஆகின. இதில் வயதை அவர் கணக்கில் வைத்துக் கொள்ளவில்லை. அதனால் தான், அவருடைய 39 வயதில் திருமணம் செய்து கொண்டார். அவருடைய மனைவி பினிதா மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவருடைய காட்டிலே வசிக்கத் தொடங்கினார்.

வருமானத்திற்காக கால்நடைகளை வளர்க்கும் அவர், பால் விற்று அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துகொள்கிறார். விடியற்காலை 3 மணிக்கு தொடங்குகிறது ஜாதவின் நாள். ஜாதவ் அனுதினமும் அவருடைய பண்ணையிலிருந்து காட்டுக்கு, 1 மணிநேர சைக்கிள் பயணம், பின் 5 கிலோமீட்டர் படகு பயணம், பிறகு நடை பயணம் மேற்கொண்டு காட்டின் எல்லையினை நீட்ட உழைத்து வருகிறார். அவருடைய லட்சியத்தையும் அடைந்தார்.
jadhav

550 ஹெக்டர் பரப்பில் பரந்த அடர்காட்டில், மூங்கில் மரங்கள் மட்டும் 200 ஹெக்டருக்கு கம்பீரமாய் நிற்கின்றன. அவை தவிர, மாமரம், பலா மரம், சீதா மரம், புளியமரம், தேக்கு மரம், என எண்ணற்ற மரங்கள் உயரமாய் வளர்ந்து அழகிய காடாக காட்சியளித்தது. ஜாதவின் செல்லபெயரான ‘மொலாய்' என்ற பெயரிலே பழங்குடியின மக்கள் காட்டை அழைத்தனர். மரகள் உயர, உயர பறவைகள் கூடு கட்டின. பறவைகளின் எச்சங்களின் வழியே, போகும் திசையெல்லாம் விதையிட்டு ஜாதவ் உடன் சேர்ந்து உழைத்தன.

யானைகளும், காண்டாமிருகங்கள் மற்றும் வங்காள புலிகளும் காட்டில் குடியேறின. இப்படியாக, 2008ம் ஆண்டு வரையிலும், உலகில் யாருக்கும் தெரியாமல் 1,360 ஏக்கரில் ஒரு காடு உருவாகிக் கொண்டிருந்தது.

2008ம் ஆண்டில் உள்ளூர் நாளிதழில் அவரைப் பற்றி ஒரு கட்டுரையை வெளியிட காரணமான, வனவிலங்கு புகைப்படக் கலைஞரான ஜிட்டு கலிதா அன்று இல்லாதிருந்தால், அன்பான மரங்களால் சூழப்பட்ட ஜாதவ் அவற்றின் நிழலிலே கடைசி வரை இருந்திருப்பார்.

jadhav

ஜாதவ் உடன் வனவிலங்கு புகைப்படக் கலைஞரான ஜிட்டு கலிதா.

அச்சமயத்திலே, 115 யானைகள் மொலாய் காட்டை நோக்கி படையெடுத்ததை அடுத்தே அரசுக்கும் வரைப்படத்திலே இல்லாத ஒரு காட்டை பற்றி தெரிய வந்தது. யானைகளின் வருகையினால், காடு முழுமையடைந்ததை எண்ணி ஜாதவ்விற்கோ ஒரே ஆனந்தம். எந்த அளவிற்கு எனில், பிழைப்பிற்காக வளர்த்து வரும் பசுமாடுகளை புலிகள் வேட்டையாடிய போதும் அவர் அதற்காக வருந்தவில்லை.

‘‘ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் வருகை தரும் 115 யானைகள், 3 முதல் 4 மாதங்களுக்கு தங்கிவிட்டுச் செல்கின்றன. இந்த 39 ஆண்டுகளில், வங்காள புலிகள் என்னுடைய 85 மாடுகள், 95 எருமைகள் மற்றும் 10 பன்றிகளை வேட்டையாடி விருந்தாக்கி கொண்டன. அவைகள் புலிகளின் உணவுகள். அவைகளுக்கு (புலிகளுக்கு) விவசாயம் தெரியாது இல்லையா,'' என்று சிறு புன்னகையுடன் கூறுகிறார் ஜாதவ்.

உண்மையில், ஒவ்வொரு நாளும் ஜாதவ் கையாளும் ஒரே அச்சுறுத்தல் -மனிதன். வேட்டையாடுபவர்கள் தனது காடு மற்றும் அதன் குடிமக்கள் மீது ஒரு கண் வைத்திருப்பதை அவர் அறிவார். அதனாலே, ஒவ்வொரு முறையும் அவர் எங்காவது பயணம் செய்யும் போதெல்லாம், உள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டே செல்கிறார்.


ஏனெனில், ஒரு முறை ஒத்த கொம்பு கண்டாமிருகத்தினை வேட்டையாடி அதன் ஒற்றைக் கொம்பை, நகங்களை, வாலை வேட்டைக்காரர்கள் அறுத்து சென்றிருந்ததில், அதன் வலி அறிவார் ஜாதவ். இத்தனை தொல்லைகளுக்கு மத்தியில், காட்டின் அழகினை அப்படியே பாதுகாத்து வருகிறார்.

jadhav
அவரது அசாத்திய தனி முயற்சியை பாராட்டி, 2012ம் ஆண்டு ‘புவி தினத்தன்று' ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவிற்கு ‘இந்திய வன நாயகன்' என்ற பட்டத்தை வழங்கியது. அதே ஆண்டின் பிற்பகுதியில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மும்பையில் அவருக்கு பண விருது வழங்கினார். அதே ஆண்டு, பிரான்சில் எவியன் நகரில் நடைபெற்ற நிலையான அபிவிருத்திக்கான சர்வதேச மன்றத்தின் ஏழாவது உலகளாவிய மாநாட்டில் கூடியிருந்த 900 நிபுணர்களில் இவரும் ஒருவர். 2015 ஆண்டு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

பரிசுகளும், விருதுகளும் அளிக்கும் மகிழ்ச்சியை காட்டிலும் மற்றவர் ஒருவர் மரக்கன்று நட்டு வைத்தார் என்பதை கேட்பதிலே ஜாதவிற்கு அதிக மனமகிழ்வு. ‘‘பத்மஸ்ரீ என்பது ஊக்கத்திற்கான ஒரு விருது. ஆனால் எனக்கு எப்போதும் நாட்டுக்கு நல்லது செய்வது மட்டுமே நோக்கம். ஏன், இந்திய ஜனாதிபதி கூட இப்புவிக்காக ஏதாவது செய்ய வேண்டும். இல்லையெனில், யாரும் இருக்க மாட்டார்கள், எதுவுமிருக்காது,'' என்றார் நிதானமாக.


இந்த இயற்கை காதலன் சுற்றுச்சூழல் அறிவியலை ஒரு கட்டாய பாடமாக மாற்ற பரிந்துரைக்கிறார். அவற்றை இளமை பருவத்தில் குழந்தைகள் கற்க ஆரம்பிக்கையில்- அவர் செய்தது போல ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்புகிறார்.

‘‘ஒவ்வொரு பள்ளி மாணவர்களுக்கும் இரண்டு மரங்களை வளர்ப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டால், அது நிச்சயமாக ஒரு பசுமை இந்தியாவுக்கு வழிவகுக்கும்,'' என்று அவர் வலியுறுத்துகிறார்.

இத்தகு மாமனிதரை பற்றி அறிந்து கொள்ளாமல் இருக்கலாமா? அதனால் தான், இவரை பற்றி அறிந்த அமெரிக்க பள்ளி ஒன்று ஜாதவ் பயேங்கின் வரலாறை பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளது. ஆனால், இவற்றையெல்லாம் அவர் எதிர்பார்ப்பதுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. நீங்கள் இக்கட்டுரையை படிக்கும் இந்நேரமும் மரங்களோடு கதைப்பேசி கொண்டு, வழக்கம்போல் விதைகளைத் தேடி நடந்து கொண்டிருப்பார் அம்மாமனிதர்..!


தகவல் உதவி: தி வீக்கெண்ட் லீடர் மற்றும் தி இந்து | படங்கள் உதவி : தி வீக்கெண்ட் லீடர்