சுவாரசிய கதைகளை சொல்லும் பொம்மைகள்... ஒரு தோற்பாவைக் கலைஞரின் உன்னத பயணம்!
ஆயிரமாயிரம் நவீனபொருட்கள் வந்து விடலாம்...
ஆனாலும் குழந்தைகளிடமிருந்து நம்மால் பொம்மையைப் பிரிக்க முடியுமா??
பொம்மையோடு பேசி, சிரித்து, அடித்து, ஆறுதல் படுத்தி, அருகில் படுக்க வைத்து, தட்டிக் கொடுத்து, தானும் தூங்கிப் போகும் குழந்தைகளுக்கு மட்டுமே தெரியும் பொம்மைகளின் மொழி.
உயிரற்ற ஒரு பொம்மை குழந்தைகளிடம் சென்று சேர்ந்தவுடன் எப்படி உயிர் பெருகிறது என்கிற ஆச்சர்யத்திற்கு இணையாக, நம்மை வியக்க வைக்கிறவர் செல்வராஜா...
தசாவதாரம் திரைப்படத்தில் 'முகுந்தா முகுந்தா... என்ற பாடலுக்கு ஆடிய பொம்மைகள் செல்வராஜாவின் விரலசைவில் தான் உயிர் பெற்றன.
தோற்பாவைக் கூத்து என்றழைக்கப்படும் பொம்மலாட்டக் கலைஞரான செல்வராஜாவை தமிழ் யுவர் ஸ்டோரிக்காக தொடர்பு கொண்டோம்.
எளிய கலைஞன், நெடிய வரலாறு...
தனது கலையைப் போலவே எளிமையாகப் பேசும் செல்வராஜா, அறுபது வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் போதும், அச்சரம் பிசகாமல் கதைகளைச் சொல்கிறார்.
ராமாயணம், மகாபாரத கர்ண மோட்சம், அரிச்சந்திரா, நல்ல தங்காள், நவீன கால சமுதாய பிரச்சினைகள் என ஏராளமான கதைகளும், அதை நிகழ்த்தும் கருவியான அழகான பொம்மைகளுமாய் வாழ்கிற செல்வராஜின் பரம்பரைக் கலை தோற்பாவைக் கூத்து என்கிறார்.
"சென்னை சின்னான்டிக்குப்பம் பகுதியில் இப்போது இருக்கேன். குடும்பத்துல என்னோட மனைவி மகனச் சேத்து மூணு பேருதான். பதினைந்து தலைமுறையாக இதுதான் வாழ்க்கை, எங்க பெரியப்பா செல்லப்பாகிட்ட இருந்து 10 வயசுல இந்த கலையைக் கத்துக்கிட்டேன். எங்க தாத்தாவுக்கு தாத்தா தஞ்சாவூர் சரபோஜி மகாராஜா அரண்மனையில பொம்மலாட்டம் நடத்திருக்கார்."
எங்க பெரியப்பா காலத்துல கிராமம் கிராமமா போவோம், ஒவ்வொரு கிராமத்துலயும் ஒருவாரம் பத்து நாள்னு தங்கி பொம்மலாட்டம் நடத்துவோம். இப்ப... அப்படியில்ல.... கல்யாண வீடு, பிறந்தநாள் அப்புறம் ஏதாவது விழாவுக்கு கூப்பிடுவாங்க, மத்த நேரங்கள்ல சின்னப் பிள்ளைகளுக்கான ராட்டினம் சுத்துவேன், என்று ஒரு கலையின் ஏற்ற இறக்கமான வரலாற்றை எளிமையாகச் சொல்கிறார் செல்வராஜா.
தோற்பாவைக் கலையின் தொன்மை
“ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் புதுமையாக இருக்குது, நாலு பேரு நடுவிலே நூலு ஒருத்தன் கையிலே” என்ற ஜேசுதாசின் பாடல் நினைவுக்கு வர... இந்தக் கலைக்காக என்ன தேவை, எப்படி நிகழ்த்துகிறீர்கள் என்றோம்...
தோலில் செய்த பொம்மைகளின் தலை, கைகள், தோள் பட்டைகள், முழங்கால்கள் இவற்றில் கயிறுகளைக் கட்டி, அந்த கயிறுகளின் மறு முனையை எங்கள் விரல்களில் கட்டி, பாடல் மற்றும் கதைக்குத் தகுந்த மாதிரி இயக்குகிறோம். அனுபவம் இல்லைன்னா, தாளம், இசை பேச்சுக்கு ஏற்ப இயக்க முடியாது. பொம்மலாட்ட மேடை அமைக்க ஒரு மணி நேரம் ஆகும் என்று சொல்கிறார் செல்வராஜா...
இதை எவ்வளவு நேரம் நிகழ்த்துவீர்கள் என்றால்?,
"முன்னலாம், விடிய விடிய நிகழ்ச்சி நடந்துருக்கு, அப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமா சுருங்கி, இப்ப அதிகபட்சம் 3 மணி நேரம், சில இடங்களில் ஒரு மணி நேரம் கூட நடத்துவோம் என்கிறார்.
எத்தனை பேர் இருந்தால் இந்த நிகழ்ச்சியை நடத்திட முடியும்? என்றால்,
ஒரு கதைக்கு 10 அல்லது 12 பொம்மைகள் தேவைப்படும். பொம்மையை இயக்க கதைக்கேற்ப 4 பேரோ இரண்டு பேரோ தேவை. ஹார்மோனியம், மிருதங்கம், தபேலா வாசிக்க ஒரு நாலு பேரு வேணும் என்கிறார்.
அயல்நாட்டு மக்களின் ஆர்வம்
இப்பல்லாம் நம்ம ஆளுகள விட வெளிநாட்டுக்கார்ர்கள் தான் பொம்மலாட்டத்தை ஆர்வமா பார்க்கிறாங்க என்று கூறும் செல்வராஜா, ஜெர்மனியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை, அந்த நாட்டினர் மொழி புரியாத நிலையிலும் ரசித்ததை நினைவு கூர்கிறார்.
அதன் பின்னர் ஒரு மாத்த்தில் மீண்டும் ஜெர்மனி செல்ல வாய்ப்புக் கிடைத்ததாகவும், தொடர்ந்து ஆஸ்திரேலியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் பொம்மலாட்டம் நிகழ்த்தியதையும் நெகிழ்வோடு குறிப்பிடுகிறார்.
துபாய்ல நடத்துன நிகழ்ச்சிதான் மறக்க முடியாத்து. அங்க இந்த பொம்மலாட்டத்த பாத்தவுங்க ஆச்சர்யப்பட்டு பாராட்டுனதோட, விருதும், மெடலும் கொடுத்தாங்க. திறமைக்கு மரியாத கெடைக்குறதுதான பணம் காச விட பெரிசு என்கிறார் செல்வராஜா.
பொம்மைகளைக் குழந்தைகளிடம் சேர்ப்போம்
பண்டைக்கால சீனாவில் தோன்றி, அதன் பின்னர் மராட்டியம் வழியாக தமிழகத்திற்கு வந்ததாக சிலரும், தமிழகத்தில் தோன்றி மராட்டியம் வழியாகச் சீனா சென்றதாக இந்த கலைக்கு வரலாறு சொல்லும் தோற்பாவைக் கலைஞர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்தார்கள் என சொல்லப்படுகிறது.
குழந்தைகளின் மனதில் நீதியை விதைக்கும் இந்த நிகழ்த்துக் கலைஞர்கள் இப்போது விரல் விட்டு எண்ணிவிடக்கூடியவர்களே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக உள்ள செல்வராஜா, தனது மகன் இந்தக் கலையைப் பயில மறுத்துவிட்டதை கொஞ்சம் வருத்தமாகவே பதிவு செய்கிறார்.
என்ன செய்வது காலம் மாறிப் போச்சு என்று தேற்றிக் கொள்ளும் அவர், பள்ளிகளில் குழந்தைகளுக்குப் போதிக்கும் முறையில், பொம்மலாட்டத்தை ஏன் பயன்படுத்தக்கூடாது என்று கேட்கிறார்.
செயல்வழிக் கற்றல் என்றவாரெல்லாம் கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வர முனையும் அறிஞர்கள், நிகழ்த்துக் கலையான தோற்பாவைக் கூத்தையும் அந்த முயற்சிகளில் பயனாக்க முடியுமா என சிந்திக்கலாம் என்கிறார்.
ஒரு பாரம்பரியக் கலையின் தொடர்ச்சியாக ஒரு சிலராய் வாழும் செல்வராஜாக்களின் விருப்பம் அது தான்...
பொம்மைகளின் அருமை குழந்தைகள் மட்டுமே அறிவர்...
கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் பொம்மலாட்டக் கலையை காதலித்து வாழ்ந்து வரும் இப்படிப்பட்ட கலைஞனை காண்பது அவ்வளவு எளிதல்ல. இவரது நிகழ்ச்சியை காண விரும்புவோர் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தக்க்ஷின சித்திராவிற்கு சென்று கண்டு மகிழலாம்.