குழந்தைகளுக்கு பெயர் வைத்து ரூ.1 கோடிக்கு மேல் சம்பாதித்த 33 வயது பெண்!
மாறிவரும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மக்களுக்கும் புதுப்புது தொழில்களை தொடங்கி அதன் வழியாக வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளனர். அதில் புதிதாக இந்தப் பெயர் வைக்கும் தொழிலும் தற்போது இணைந்துள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த ஹம்ப்ரே, ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க $1,500 வரை கட்டணம்.
பிறந்த குழந்தைக்கு பேர் வைப்பது என்பது சுலபமான வேலையில்லை. ஜாதகம், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எழுத்தில் ஆரம்பிக்கும், இந்த மாதிரியான பேர் தான் வேண்டும் என தேடிக் கண்டுபிடித்து பேர் வைப்பார்கள்.
புதிதாக பிறந்த குழந்தையைப் பார்க்க வருபவர்களிடம் எல்லாம், குழந்தைக்கு நல்ல பேர் இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்பார்கள். ஒரு சில பெற்றோர்கள் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இணையத்தில் தேடி, ஆண் குழந்தை என்றால் இந்தப் பெயர், பெண் குழந்தை என்றால் இந்தப் பெயர் என முடிவே செய்து வைத்திருப்பார்கள்.
ஏனென்றால், பேர் என்பதுதான் ஒருவரின் அடையாளம். குழந்தை வளர்ந்து வாலிபமாகி வயதாகலாம்.. உருவம் மாறலாம்.. ஆனால் வாழ்நாள் முழுவதும் உடன் வருவது நமது பெயர் தான்.
அப்படிப்பட்ட பெயரை குழந்தைகளுக்கு வைப்பதையே தொழிலாகக் கொண்டு ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா..?
அமெரிக்காவைச் சேர்ந்த அப்பெண்ணின் பெயர் டெய்லர் ஏ.ஹம்ப்ரே (Taylor A. Humphrey). 33 வயதாகும் இவர், கடந்த 2020ம் ஆண்டு மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பேர் வைத்திருக்கிறார். அதன்மூலம்,
அவர் சம்பாதித்த பணம் $150000 ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,14,44,655 (ஒரு கோடியே பதினான்கு லட்சத்து நாற்பத்தி நான்காயிரத்து அறுநூற்று ஐம்பத்தி ஐந்து ரூபாய்).
மாறி வரும் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மக்களுக்கும் தினந்தோறும் புதுப்புது வித்தியாசமான தொழில்களைத் தொடங்கி அதன் வழியாக வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளனர். அதில் புதிதாக இந்தப் பெயர் வைக்கும் தொழிலும் தற்போது இணைந்துள்ளது.
சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு அப்பழுக்கற்ற, நல்ல தூய்மையான, புனிதமான பெயர்களைச் சூட்ட விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு அதனைத் தேடுவதற்கு போதுமான நேரம் இருப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள், ஹம்ப்ரேயைத்தான் தேடி வருகின்றனர்.
நியூயார்க்கைச் சேர்ந்தவரான ஹம்ப்ரே, தன்னை தொழில்ரீதியான பெயர் வைப்பவர் (Professional baby namer) என்றே குறிப்பிட்டுக் கொள்கிறார். தங்களது குழந்தைகளுக்கு என்ன பெயர் வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கும் பெற்றோருக்கு, இவரது சேவை மிகவும் உதவிகரமானதாக இருக்கிறது. ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க இவர் $1,500 வரை கட்டணம் வசூலிக்கிறார். இந்திய ரூபாயில் இது சுமார் 38 ஆயிரம் ரூபாய் ஆகும்.
கடந்த 2015ம் ஆண்டு இந்த பேர் வைக்கும் தொழிலை ஆரம்பித்துள்ளார் ஹம்ப்ரே. 'What's In A Baby Name' என்ற பெயரில் இணையதளம் ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். போன் மூலமே தேவைப்படுபவர்களுக்கு சரியான, பொருத்தமான பெயரைத் தேர்வு செய்து கொடுப்பதால், நாளுக்கு நாள் ஹம்ப்ரேக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அதோடு பெற்றோரின் பொருளாதார நிலை மற்றும் பெயரின் தன்மைக்கு ஏற்ப தனது கட்டணத்தையும் மாற்றிக் கொள்கிறார்.
பெயர் வைக்கும் வேலைதானே, இணையத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கப் போகிறது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ஹம்ப்ரேயின் வேலை அவ்வளவு சுலபமானதல்ல.
ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பெயர் வைப்பதற்கு ரொம்பவே மெனக்கெடுகிறார் ஹம்ப்ரே. அதாவது அக்குழந்தையின் பெற்றோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களையும், இடங்களையும்கூட குழந்தையின் பெயர்களில் சேர்த்து, வாழ்நாள் முழுவதும் அந்த இனிமையான நினைவுகளை அவர்கள் நினைத்துப் பார்க்கும்படி செய்வது இவரது தனிச்சிறப்பு.
உதாரணத்திற்கு பார்க்கர் என்ற இடத்தில் முதன்முறையாக முத்தமிட்டுக் கொன்ற தம்பதியின் குழந்தைக்கு, பெயரோடு பார்க்ஸ் என்பதையும் சேர்த்து விட்டுள்ளார் ஹம்ப்ரே.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு மட்டுமின்றி, பிரசவ நேரத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவியாக மற்றும் உறுதுணையாக இருப்பதற்காவும் சில தம்பதிகள் இவரை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றனர்.
நியூயார்க் பல்கலைக்கழக பட்டதாரியான ஹம்ப்ரே, இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் திருமணங்களை முடித்து வைக்கும் மண இணைப்பாளராக (Matchhmaker) இருந்துள்ளார். அதோடு, நிதி திரட்டுதல் மற்றும் நிகழ்வு திட்டமிடும் பணி (event planner) போன்றவற்றையும் செய்து வந்துள்ளார்.
இதுதவிர, தனது லிங்க்டுஇன் புரொபைலில் தன்னை ரெய்கி பயிற்சியாளர் என ஹம்ப்ரே குறிப்பிட்டுள்ளார். இரண்டு திரைப்படங்களுக்கான திரைக்கதையையும் இவர் எழுதியுள்ளார். ஹம்ப்ரே டிக்டாக்கிலும் பிரபலமானவர் ஆவார். தனது பக்கத்தில் அடிக்கடி அவர் இலவசமாக பல அறிவுரைகளை வழங்குவதாலேயே அவர் டிக்டாக்கில் மிகவும் பிரபலம்.
தங்களது குழந்தையின் பெயரை மாற்றித் தரக் கோரியும், மூன்றாவது அல்லது நான்காவது குழந்தைக்கு புதிய பெயர் தேடியும், தன்னிடம் பெற்றோர்கள் பலர் வருவதாகக் கூறுகிறார் ஹம்ப்ரே. காரணம் மூத்த குழந்தைகளுக்கு பெயர் வைத்து வைத்தே அவர்களிடம் பெயருக்கு பஞ்சம் ஏற்பட்டு விடுவதுதான் என்கிறார்.
சமீபத்திய வீடியோ ஒன்றில் தனது மூன்றாவது குழந்தைக்கு பேர் தேடி வந்திருக்கும் தாய் ஒன்றிற்கு ஹம்ப்ரே அறிவுரை கூறுகிறார். அந்த தாயாரின் மூத்த இரண்டு பிள்ளைகளின் பெயர்கள் முறையே எம்மட் (Emmet) மற்றும் மில்லர் (Miller) ஆகும். எனவே, மூன்றாவது குழந்தைக்கு கிரேடி (Grady), வில்சன் (Wilson) மற்றும் ஃப்ளெட்சர் (Fletcher) என்ற பெயர்களை பரிந்துரைக்கிறார் ஹம்ப்ரே.
பெற்றெடுத்த குழந்தைகளுக்குப் பேர் வைக்கக்கூட நேரம் இல்லாத அளவிற்கு பெற்றோர்கள் சோம்பேறி ஆகி விட்டார்களா என ஹம்ப்ரேவின் தொழிலுக்கு எதிராக கண்டனங்களும் வராமல் இல்லை. ஆனால், இந்த விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு, ‘தன்னை நம்பி தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வருபவர்களை பெர்பக்ஷன் எதிர்பார்ப்பவர்கள்’ எனப் பாராட்டுகிறார் ஹம்ப்ரே.