பசுக்களுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் - பால் உற்பத்தியை கூட்ட ரஷ்ய வேளாண் புதுப் புரட்சி!
பால் உற்பத்தியைக் கூட்ட, ரஷ்ய விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் கருவியை பொருத்தி நல்ல ரிசல்ட் பெற்றுள்ளனர்.
‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் ராமராஜன் பாட்டுப்பாடி பசுக்களுக்கு பால் கறப்பார். அப்படியான ஓர் அணுகுமுறையை தான் ரஷ்ய விவசாயத் துறை கையிலெடுத்துள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிக்க, புதுமையான அணுகுமுறையாக ரஷ்ய விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளுக்கு விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) எனப்படும் மெய்நிகர் ரியாலிட்டி ஹெட்செட் கருவியை பொருத்தி பசுக்களை ஒருநிலைப்படுத்தி உற்பத்தியை பெருக்குகின்றனர்.
ரஷ்ய விவசாயத் துறை சார்பில் இந்த சோதனை பசுக்களிடையே நடத்தப்பட்டது. சோதனை முடிவின்படி, இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் கறவை மாடுகளுக்கு ஆக்டிவான மனநிலையை அதிகரிக்க செய்வதோடு, அதன் விளைவாக பால் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது என்பது தெரியவந்துள்ளது.
திரைக்குப் பின்னால் உள்ள அறிவியல்!
இந்த விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் பசு மாடுகளின் உடலமைப்புக்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக காட்டப்படும் மெய்நிகர் காட்சிகள் பொதுவாக இயற்கை சூழல் மிகுந்த வயல்கள், சிற்றோடைகள். பால் உற்பத்தியை தொழிலாக கொண்டுள்ள பண்ணைகளில் வழக்கமாக காணப்படும் சூழலுக்கு மாற்றாக இந்த மெய்நிகர் காட்சிகள் அமைகின்றன.
ஆரம்பகட்ட ரிப்போர்ட்டின்படி, விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணிந்த பசுக்கள் அமைதியானதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் முயற்சியானது ஒரு தொழில்நுட்ப அற்புதம் என்றும், விலங்குகளின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கான நன்மை பயக்கும் கருவியாகக் கருதினாலும் சிலர் விலங்குகளின் உணர்வுகளை செயற்கையாக கையாளுவது கவலை அளிக்கிறது.
இந்த தொழில்நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதால், இதன் தேவைகள் இனி வரும் காலங்களில் அதிகரிக்கலாம். கால்நடை வளர்ப்பு, வனவிலங்கு பாதுகாப்பின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படலாம். தவிர, பண்ணைகள் போன்ற சிறைபிடிக்கப்பட்ட அல்லது மன அழுத்தம் நிறைந்த சூழலில் அடைக்கப்பட்ட நிலையில் வாழும் விலங்குகளின் நிலைமையை மேம்படுத்தும் கருவியாக விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் உருவெடுத்துள்ளது.
இத்தகைய கண்டுபிடிப்புகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பாரம்பரிய விவசாயத்துக்கு எவ்வாறு புதிய சாத்தியங்களை உருவாக்குகின்றன என்பதைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகின்றன.
மேலும், வேளாண்மைக்கான இத்தகைய அணுகுமுறை, தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியும் என்பதையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
எனினும், இந்தத் தொழில்நுட்பம் வரும் காலங்களில் மிக தீவிரமாக பயன்படுத்தப்படுமா என்பது ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் விலங்கு நலன் ஆகியவற்றின் வெற்றியை பொறுத்தே அமையும்.
Edited by Induja Raghunathan