பிரபல மாடல் மற்றும் விளையாட்டு வீராங்கனை ஆன காது கேளாத, வாய் பேசமுடியாத கேரள பெண்!
24 வயது சோஃபியா எம். ஜோ, காது மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுள்ளவராக பிறந்தார். ஆனால் அவர் இன்று எட்டியுள்ள உயரம் அந்த குறைபாடு அவரை சிறிதளவும் பாதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. சோஃபியா இன்று ஒரு பிரபல மாடல் அழகி மற்றும் தடகள வீராங்கனை. மூன்று முறை தேசிய குண்டு எறிதல் மற்றும் தட்டு எறிதல் சாம்பியன் ஆவார். இந்தியா சார்பில் பல சர்வதேச போட்டிகளிலும் கலந்து கொண்டு பெருமை சேர்த்தவர். இதைத்தவிர சோஃபியா ஒரு திறமைமிக்க ஓவியக்கலைஞர் மற்றும் நகை வடிவமைப்பாளரும் கூட.
கொச்சியில் பிறந்த சோஃபியாவின் குழந்தைப் பருவம் சுலபமாக இருந்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் அவரை அனுமதிக்க மறுத்தனர். சோஃபியாவின் சகோதரர் ரிச்சர்டுக்கும் அதே குறைபாடு உள்ளது.
“இது குழந்தைகளின் குற்றமோ, எங்களது குற்றமோ இல்லை. அவர்கள் அப்படித்தான் பிறந்தனர், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சுற்றி இருந்தோர் எங்களை தவறிழைத்தவர்கள், பாவம் செய்தவர்கள் அதனால்தான் இப்படி ஊனமுள்ள குழந்தைகள் பிறந்துள்ளதாக ஏளனம் செய்தனர்,”
என்று கென் ஃபோலிஸ் பேட்டியில் வருத்தத்துடன் கூறினார் சோஃபியாவின் தந்தை ஜோ பிராசிஸ். சோஃபியா செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். பிரபல மாடலாகவும், விளையாட்டு வீராங்கனையாகவும் ஜொலிக்கிறார். அவரது தாய் கோரியாட்டி, இந்தியா டுடே பேட்டியில் கூறுகையில்,
“அவள் எல்லா மாணவியை போல் சாதரணமாக வளர்ந்தார். சில ஆண்டுகள் நாங்கள் வீட்டுப் பாடங்களை அவளுக்கு அளித்தோம், பின்னர் தான் கேரளாவில் ஒரு பள்ளியில் அவளை சேர்த்தோம். நாங்கள் எப்போதும் அவளது கனவுகளுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். அதை அடைய உதவுகிறோம். இதுவே அவளுக்குள் இருக்கும் நம்பிக்கையை கூட்டியது,” என்றார்.
காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோருக்கு நடைப்பெறும் மிஸ் இந்தியா 2014’ இல் சோஃபியா இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்தியா சார்பில் ப்ரேகில் நடைப்பெற்ற காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதோருக்கான மிஸ் வோர்ல்ட் போட்டியில் கலந்து கொண்டார். அவர் பெஸ்ட் விஷஷ் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். நடனமும் தெரிந்தவர். கேரளாவில் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் காது கேளாத பெண்மணி சோஃபியா என்ற பெருமையை கொண்டவர். இதற்காக அவ்வர் டெல்லி உயர் நீதிமன்றம் வரை போராட வேண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. வருங்காலத்தில் ஒரு கார் ரேசராக வேண்டும் என்பதும் இவரது ஆசையாம்.
கட்டுரை: Think Change India