44th Chess Olympiad: சென்னை டூ பெங்களூரு விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அரசுப் பள்ளிகளில் நடத்தப்பட்ட செஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்க உள்ளன. இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்க உள்ள விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் விளம்பர ஏற்பாடுகள்:
கடந்த சில வாரங்களாகவே 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு இடையே செஸ் போட்டிகளை நடத்துவது, அரசு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயிலில் செஸ் ஒலிம்பியாட் பற்றிய விளம்பரங்கள் போன்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தமிழக அரசு சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அடையாள சின்னமான 'தம்பி' எனப்படும் குதிரை சின்னம் தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் வேட்டி, சட்டையில் சென்னை முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை நேப்பியர் பாலத்தில் சதுரங்கப் பலகையைப் போலவே கருப்பு – வெள்ளை நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவர்கள்:
4-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்க உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற 152 மாணவ, மாணவிகளை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது.
அதன் படி, நேற்று மதியம் சுமார் 1 மணி அளவில் மாணவ, மாணவிகள் அனைவரும் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டனர். அமைச்சர்கள் மெய்யநாதன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை வழி அனுப்பி வைத்தனர்.
இந்தச் சிறப்பு விமானத்தில் பயணிக்கும் மாணவர்கள் விமானத்திற்குள் செஸ் விளையாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும், பெங்களூரு செல்லும் மாணவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் திரும்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு விமானத்தின் வெளிப்புறத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.