‘சுடச்சுட ஃபில்டர் காபி; இது நிஜமா? அல்ல ஓவியமா? ‘வைரல் காபி’ உருவான கதை!
ஒரே ஒரு ஓவியம் மூலம் இன்று சமூகவலைதளங்களில் பிரபலமாகி விட்டார் சென்னையைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வருணா. 8 பேரோடு இருந்த அவரது டிவிட்டர் பக்கம் இந்த ஒரு ஓவியத்தால் நாலாயிரம் பாலோயர்களைச் சம்பாதித்திருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், இது நிஜமா அல்லது ஓவியமா என ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் 'டபரா செட்'டில் ஆவி பறக்கும் ஃபில்டர் காபியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அருகில் ஒரு செய்தித்தாள் இருக்க, அந்தக் காபி டபரா பார்ப்பவர்களை பரவசப்படுத்தி, காபி குடிகாமலேயே புத்துணர்ச்சி அடைய வைத்தது. ஏதோ புகைப்படம் எனக் கடந்து போனவர்கள்கூட, அது ஓவியம் என அறிந்து ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.
பலரையும் வியக்கவைத்த அந்தத் தத்ரூபமான ஓவியத்துக்குச் சொந்தக்காரர், சென்னையைச் சேர்ந்த 22 வயது வருணா ஆவார். சமூக செயற்பாட்டாளரும் முற்போக்கு எழுத்தாளருமான கொற்றவையின் மகளான இவர், முடங்கிக் கிடந்த தன் டிவிட்டர் பக்கத்திற்கு தெம்பூட்ட இந்த ஓவியத்தைப் பகிர, அது 58,000-க்கும் அதிகமான லைக்குகளைக் குவித்து, வருணாவை சோஷியல் மீடியாவில் செல்பிரிட்டி ஆக்கி விட்டது.
ஓவியம் வரைவதற்கென தனியாக வகுப்பெதுவும் செல்லவில்லையாம் வருணா. அவரது அப்பாவும் ஒரு ஓவியர் என்பதால், சிறுவயதில் கிறுக்கலாக ஆரம்பித்த பழக்கம், சித்திரமும் கைப்பழக்கமுமாக தன்னைத் தானே மெருகேற்றி, இன்று தத்ரூபமாக வரையும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். தன் நான்கு வயதிலிருந்து தற்போதுவரை 13 முறை ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கிறார்.
கைகளால் தூரிகையைப் பிடித்து வரைய மட்டுமல்ல, கேமராவுக்குள்ளும் காட்சிகளை கவிதைகளாகப் படம் பிடிக்க, ஒளிப்பதிவுக்கான படிப்பை முடித்துள்ளார் வருணா. பல்வேறு விளம்பரப் படங்கள் மற்றும் கார்ப்பரேட் குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இசை சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் டிசைனராக வேலை செய்து வரும் இவர், 'மய்யம்' திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
“நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் வரைந்து அதை சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்வேன். வழக்கமான ஓவியமாக இல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையில ரொம்பவே ஒன்றிப்போன சில விஷயங்களை வரைய வேண்டும் என நினைத்தேன். அதில் உயிரோட்டம் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். பார்ப்பதற்கு புகைப்படம் போல் தெரிய வேண்டும், ஆனால் அதனை ஜூம் செய்து பார்த்தால் ஓவியம் என தெரிய வேண்டும். அப்படி ஒரு வித்தியாசமான ஓவியம் வரைய வேண்டும் என்ற யோசனையில் வரைந்ததுதான் இந்த காபி டபரா ஓவியம்,” என இந்த வைரல் ஓவியம் உருவான கதை பற்றி பேட்டியொன்றில் கூறியுள்ளார் வருணா.
இந்த ஓவியம் மட்டுமின்றி, முட்டை உடையும் ஓவியம், இட்லி, சாம்பார் டிபன் செட் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பதிவு செய்துள்ள மற்ற இரண்டு ஓவியங்களுமே ஆஹா ரகம் தான். பில்டர் காபி, ஓணம் ஸ்பெஷல் சாப்பாடு, பிரெட் அண்டு ஜாம் என தனது அடுத்த ஓவியத்திற்கு மூன்று ஆப்ஷன்களைக் கொடுத்து, அதில் ரசிகர்கள் அதிகம் விரும்பிக் கேட்டதன்படியே இந்த பில்டர் காபி ஓவியத்தை வருணா வரைந்துள்ளார்.
தனது ஓவியம் உருவான விதத்தையும் சிறிய வீடியோவாகப் பதிவு செய்துள்ளார் வருணா. நுணுக்கமாக வரைய வேண்டும் என்பதற்காக, காபி மேலிருக்கிற நுரை பகுதியை வரைய மட்டுமே அதிகமாக மெனக்கெட்டுள்ளார் அவர். இந்த ஓவியத்தை வரைந்து முடிக்க அவருக்கு மூன்று நாட்கள் ஆனதாம். முதலில் இந்த ஓவியத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் வெளியிட்டார் அவர். வழக்கத்தைவிட அதிகமான லைக்ஸ் கிடைக்கவே, அதனை நீண்ட காலமாக முடங்கிக் கிடந்து, சமீபத்தில் மீட்ட தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டார்.
அதுவரை, வெறும் 8 பேர் மட்டுமே பின் தொடர்ந்த அவரது அக்கவுண்ட், இந்த ஒரு ஓவியத்தைப் பதிவிட்ட பிறகு, ஒரே நாளில் நாலாயிரம் பேராக உயர்ந்தது. ஒரே நாளில் அந்த ஓவியத்துக்கு 50 ஆயிரத்தையும் தாண்டி லைக்ஸும், கூடவே பாராட்டுகளும் குவியத் தொடங்கியது.
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உட்பட பிரபலங்கள் சிலரும், அந்த காபி ஓவியத்துக்கு லைக்ஸ் தட்டியதோடு, வருணாவின் டிவிட்டர் பக்கத்தையும் பின்தொடர ஆரம்பித்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த ஒரேயொரு ஓவியம் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார் வருணா. அவரது தத்ரூபமான இந்த பில்டர் காபி மற்றும் இட்லி சாம்பார் ஓவியங்களை வாங்க பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். அடுத்ததாக மசால் தோசை ஓவியத்தை வரைய இருப்பதாகக் கூறுகிறார். இப்போதே மசால் தோசைக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கின்றனர் அவரது ஓவியத்தின் ரசிகர்கள்.
“ஓவியம்ங்கிறது இம்ப்ரஷனிஸத்துக்கான (impressionism) கருவி. அதனோடு ரியலிசத்தையும் (realism) இணைத்து படம் வரைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதன்படி, ஒவியத்துறை வரலாற்றில் என் பெயர் இடம் பிடிக்க வேண்டும் என்பதே என் இலக்கு. அதை அடையும் உத்வேகத்துடன் புதுப்புது முயற்சிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கேன்,” என்கிறார் வருணா.