அஷ்வின், தினேஷ் கார்த்திக் முதல் சரத் வரை பல பிரபல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய தமிழக கோச் ஹாரிங்க்டன்!
பள்ளி அளவிலிருந்து கிரிக்கெட் பயிற்சி கொடுத்தால் மட்டுமே இந்திய அணிக்கு தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும் என்கிறார், தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், செயிண்ட் ஜான்ஸ், சர்வதேச பள்ளியின் தலைமை கிரிக்கெட் பயிற்சியாளருமான ஹாரிங்டன்.
சென்னையில் சத்தமில்லாமல் பல கிரிக்கெட் சாதனை வீரர்களை உருவாக்கி வரும் இவர், பிரபல கிரிக்கெட் விமர்சகரும் கூட! 20 வருட அனுபவம், நேர்த்தியான பயிற்சி, சர்வதேச தரத்தில் அடிப்படை வசதிகள், பேட்டிங் டெக்னிக்குகள், பௌலிங் பயிற்சி மூலம் திறமையான கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி வருகிறார்.
இவரது பயிற்சியில் உருவான தினேஷ் கார்த்திக், அஷ்வின், சடகோபன் ரமேஷ், சரத், ஹேமங் பதானி, விக்ரம் குமார், என சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் நீள்கிறது.
நூற்றுகணக்கான மாணவர்களுக்கு, அவரவர்களின் திறமைக்கேற்ப பயிற்சி அளிக்கும் இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்று, மாநில அளவில் மட்டுமல்லாமல் தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மேல் தீராத காதல் கொண்ட ஹாரிங்டனின், கிரிக்கெட் அத்தியாயம் முத்தையா செட்டியார் பள்ளியிலேயே தொடங்கியுள்ளது.
கிரிக்கெட்டில் ஆர்வம் என்ற போதிலும், பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்பதால் வீட்டில் படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம். இதனால் கிரிக்கெட் விளையாட்டால் ஜொலிக்க முடியாமல், தன் நாட்டுக்காக தான் விளையாட நினைத்த விளையாட்டை, மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கலானார். கிரிக்கெட் பயிற்சியாளராக இன்ஸ்பிரேசனாக இவருக்கு இருந்தவர், சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர், ராம்காந்த் அஜிரேக்கர். காலை மூன்று மணி நேரம் மாலை மூன்று மணி நேரம் என கடுமையான பயிற்சி அளித்து வரும் இவரது ரோல்மாடல் கவாஸ்கர் தானாம்.
தமிழக முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளர் ஹாரிங்டன்னிடம் அவரது அனுபவத்தை கேட்ட போது, அவருடைய முகத்தில் சந்தோஷ ரேகைகள் படர்ந்தது.
“2004 ஆம் ஆண்டு பயிற்சியாளராக தேர்வானேன். ஆக்ராவில் நடைபெற்ற,19 வயதிற்குட்பட்டோருகான போட்டியில் பங்குப்பெற்றதே தேசிய அளவில் முதல் அனுபவமாகும். இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய என்.ராகவன், சர்வதேச போட்டிக்கு தேர்வாகி, மேற்கத்திய தீவில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.”
அர்பணிப்பணிப்பான பயிற்சிக்கு கிடைத்த அங்கிகாரங்களாக; 13 ,14 ,19 வயதிற்குட்பட்டோர் போட்டிகளில் பயிற்சியாளராக இருந்த செயிண்ட் ஜோன்ஸ் பள்ளி மூன்று முறை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை வெல்ல காரணமாக இருந்துள்ளார். ஹாரிங்டனின் திறமைகளை பாராட்டி ஏவிஎம் சிறந்த பயிற்சியாளர் விருதை வழங்கியுள்ளது.
உங்களுடைய பயிற்சியில் தற்போதுள்ள மாணவர்களில் சர்வதேச போட்டிக்கு செல்லக்கூடியவர்கள் பற்றி கேட்டபோது? ஒரு தாய்மைக்குரிய சந்தோசம் ஹாரிங்டனிடம் பார்க்க முடிந்தது. கோகுல், பிரவீண் யாதவ், வருண், சிவனேசன், ஸ்ரீகர் ஊக், விபு போன்றவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக வர வாய்ப்பிருகிறது என்கிறார்.
செயிண்ட் ஜான்ஸ் பள்ளி, ஹாரிங்டன் அகாடமி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் ஜொலித்து வருகின்றனர். 3 தரமான வலைப்பயிற்சி மைதானங்களும், வெளிநாட்டிலிருந்த வரவழைக்கப்பட்ட பௌலிங் மெசின்களும் உள்ளன. பௌன்சர், ஃபுல்டாஸ், யாக்கர், என பல அளவுகளில் வரும்போது வீரர்களின் திறமை மேம்படும். வீரர்களின் ஆட்டத்தை கண்காணிக்க புதிதாக வெப்கேமரா, வீடியோ அனலிசிஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
சில யோசனைகளை செயல்படுத்த பொருளாதார தேவையும் அவசியமாகிறது. கிரிக்கெட் பயிற்சியை தரமானதாக மாற்ற ஹாரிங்டன் நினைக்கும் அனைத்திற்கும் செயல் வடிவம் கொடுத்து வருபவர், செயிண்ட் ஜான்ஸ் பள்ளியின் நிறுவனர் Dr.R.கிஷோர் குமார். அடிக்கடி கிரிக்கெட் கருத்தரங்குகள் நடத்தி, நமது இந்திய அணிக்கு தமிழகத்திலிருந்து பல வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாய் வைத்துள்ளார். அதற்கான முதல் முயற்சியாய் ’ஹாரிங்டன் கிரிக்கெட் அகாடமி’ சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியில் 2001 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 14,16,19 வயதுக்குட்டோருக்கான பல மாநில போட்டிகளை ஹாரிங்டன் அகாடமி நடத்தி வருகிறது.
புற்றீசல்கள் போல புறப்பட்டு வரும் விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு மத்தியில் ஹாரிங்டன் கிரிக்கெட் அகாடமி எந்த வியாபார நோக்கமின்றி செயல்பட்டு வருகிறது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி என தமிழகம் முழுவதும், நூற்றுக்கணக்கான மாணவர்களை இனம் கண்டு ஊக்குவித்து வரும் ஹாரிங்டன் கிரிக்கெட் அகாடமி மூலம், கிராமப்புற மற்றும் ஏழ்மையான மாணவர்களின் கிரிக்கெட் திறமையை அடையாளம் கண்டு, அவர்களுக்கென சிறப்பு இலவச பயிற்சி முகாமும் நடத்தி வருகிறார். இந்த பயிற்சி முகாம் ஏப்ரல் 20 முதல் மே 30 வரை நடைபெறுகிறது.
இதில் மணப்பாறையைச் சேர்ந்த முரளிகார்த்திக், வேலூரை சேர்ந்த நந்திகேசவன், திருச்சி சேர்ந்த வருண், டிக்ரோஸ், மதுரையை சேர்ந்த முத்து யோகேஷ் மற்றும் சென்னையை சேர்ந்த சிவா மற்றும் ரித்திஷ் பேன்ற வீரர்கள் தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களில் மேலும் பலர் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் படிப்பு மற்றும் விளையாட்டு திறமையை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னையில் பயிற்சியளிக்கப்பட உள்ளதாகவும், தனது அகாடமி மூலம் இரண்டு மாநில அளவிலான 19 வயது மற்றும் 25 வயதோருக்கான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இறுதி வரை சென்றதோடு இல்லாமல் வெற்றிவாகை சூடியதாகவும் பெருமிதம் தெரிவிக்கிறார் ஹாரிங்டன்.
இதற்கு உறுதுணையாக உள்ள சோழிங்கநல்லூர் சேக்ரட் ஹார்ட் பள்ளி தாளாளர் ரெக்ஸ் ஆப்ரஹாம், முதல்வர் ஜெனட் ஆப்ரஹாம் ஹாரிங்டன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் ஹாரிங்டன், முயற்சி செய்தால் மாணவர்களின் சிறு வயது கனவையும், இலட்சியத்தையும் அடைவது சாத்தியமே என்கிறார்.
பல வருடங்களாக தமிழக ரஞ்சி அணியின் முன்னாள் கேப்டன் சரத், 8000 க்கும் அதிகமான ரன்களை கடந்துள்ள நான், ஹாரிங்டன்னின் முன்னாள் மாணவன் என இன்றளவும் பெருமைப்படுகிறார். சரத்; ஹாரிங்க்டனுடன் இன்றும் நட்புமுறையில் பழகுவதோடு மட்டும் அல்லாமல் திறமையான மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார் என்று ஹாரிங்க்டன் பகிர்கிறார்.
மற்றொரு ரஞ்சி அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட் வீரருமான ஹேமங் பதானியும், தன்னுடைய பயிற்சியாளர் ஹாரிங்டன் என பரவசப்பட்டுக் கொள்வாராம். தான் ஆல் ரௌண்டராக விளையாட கோச் ஹாரிங்டன்னும் முக்கியக் காரணம் என நெகிழ்வாராம் ஹேமங் பதானி.
செயிண்ட் ஜான்ஸ் சர்வதேச பள்ளியின் சிறந்த மாணவர்களை, இங்கிலாந்தில் உள்ள பல சிறந்த கிரிக்கெட் அகாடமிகளோடு இணைந்து பயிற்சி அளிக்க உள்ளார் ஹாரிங்க்டன்.