ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் சங்கமித்து சென்னையில் கொண்டாடிய ‘பொங்கல் 2.0’
’ஸ்டார்ட் அப்’ என்ற சொல்லைக் கேட்டாலே பலரது நினைவில் வருவது, தொழில்நுட்பக் கூட்டங்கள், நிறுவனர்கள் கலந்துரையாடல், தொழில் வளர்ச்சி பற்றிய விவாதங்களே ஆகும். ஆனால் சென்னையில் ஒன்றிணைந்துள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் சிலர், இந்த பார்வையை மாற்றி, ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி உற்சாகமான சூழலில் கொண்டாடியபடியே தங்களுடைய தொழிலை வளர்த்தெடுக்கத் தேவையான தொடர்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று காட்டியுள்ளனர்.
’ஸ்டார்ட்-அப் கரம்’ என்று நிறுவனர்கள் சிலர் சென்னையில் தொடங்கியுள்ள ஒரு அமைப்பு, தமிழர் பாரம்பரிய பண்டிகையான பொங்கலை கொண்டாட ‘ஸ்டார்ட்-அப் பொங்கல் 2.0’ என்ற விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
கடந்த ஆண்டு நடைப்பெற்ற ‘ஸ்டார்ட் அப் பொங்கல்’ விழாவில் சுமார் 160 ஸ்டார்ட்-அப்’கள் கலந்துகொண்டனர். அதே போல் இந்த ஆண்டும் தொடக்க நிறுவனங்களின் நிறுவனர்களை தமிழகம் முழுவதிலும் அழைத்து வந்து சென்னையில் கலந்து கொள்ளவைத்து பிரம்மாண்ட விழாவாக ஆக்கினர் ‘ஸ்டார்ட்-அப் கரம்’ அமைப்பினர். இது பற்றி பேசிய இவ்விழாவின் ஒருங்கிணைப்பாளரும், சாய்கிங்க் நிறுவனருமான சுரேஷ் ராதகிருஷ்ணன்,
“ஸ்டார்ட்-அப் தொடங்கும் ஆர்வமுள்ள பலர், மதுரை, கோவை, பொள்ளாச்சி, திருச்சி என பல ஊர்களில் இருந்து சென்னையில் நிறுவனம் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு தங்கள் ஊர்களில் கிடைத்த பொங்கல் பண்டிகையின் அனுபவத்தை சென்னையில் அளிக்க ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ விழாவை கொண்டாட முடிவெடுத்தோம்,” என்றார். மேலும்,
”கடந்த ஆண்டு இந்த நிகழ்வின் முதல் பகுதி நடைபெற்ற பிறகு நாங்கள் ஆய்வு செய்ததில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான வணிகம் உருவாக்கப்பட்டதை அறிந்தோம். சில ஸ்டார்ட் அப்கள் தங்களுக்கான இணை நிறுவனர்களையும் முதலீட்டாளர்களையும் இங்கு கண்டறிந்துள்ளது இவ்விழாவின் சிறப்பு,” என்றார்.
பாரம்பரிய உணவு, பாடல், துடும்பாட்டம் நடனம், கிராமிய விளையாட்டான கபடி, கயிறு இழுத்தல், உறியடி என சென்னை ஸ்டார்ட் அப்களின் பொங்கல் 2.0 கொண்டாட்டம் 250-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப் நிறுவனர்களுடன் கோலாகலமாக நடைப்பெற்றது.
நிறுவனங்கள் ஒருங்கிணையவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், சாத்தியக்கூறுகள் நிறைந்த வணிக பார்ட்னர்களை தேர்ந்தெடுக்கவும், முதலீட்டாளர்களை தேடவும் ஸ்டார்ட் அப் பொங்கல் என்கிற இந்த நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமையும் என பகிர்ந்தார் the6.in நிறுவனர் சக்திவேல் பன்னீர்செல்வம்.
”மற்ற தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் போலல்லாமல் தொழில்நுட்பம் சாராத எங்களைப் போன்ற ஸ்டார்ட் அப்கள் மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைய உதவும் அமைப்புகள் எதுவும் இல்லை. இப்படிப்பட்ட முயற்சிகள் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள 200-க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்களை ஒன்றிணைக்கும். வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்கள் தங்களது சமூகம் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள இது ஒரு சிறந்த தளமாக அமையும்,” என்றார்.
மேலும், வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்த நிறுவனர்கள் ஒன்று கூடி விளையாடி, குழுவாக கொண்டாடும் போது அவர்களிடையே நல்லுறவு ஏற்படவும், அதுவே பின்னர் தொழிலில் உதவிகரமாக அமைய வாய்ப்புகள் உருவாகும்,” என்றார்.
துரைப்பாக்கம் எம்என்எம் ஜெயின் கல்லூரியில் நடந்த இந்நிகழ்ச்சியை பெண் தொழில்முனைவோர்கள் பலரும் கலந்துகொண்டது சற்றே வியப்பான விஷயம். பொதுவாக தொழில்முனைவோர் கூட்டங்களில் பெண்களின் பங்கு மிக்குறைவாகவே இருக்கும். ஆனால் இது போன்ற பாரம்பரியம் மற்றும் இயல்பான சூழலில் ஸ்டார்ட்-அப்’களின் சங்கமம் நடைப்பெற்றதால் கோவை, திருப்பூர் போன்ற இடங்களைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டது விழாவின் சிறப்பு.
“பொதுவாக ஸ்டார்ட்-அப் கூட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் மட்டுமே கலந்து கொள்வதே வழக்கம். ஆனால் ஸ்டார்ட்-அப் பொங்கல் விழா எங்களுக்கு குடும்பச்சூழலையும், இயல்பாக மற்றவர்களுடன் பேசவும் வாய்ப்பளிப்பதால் இதில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளோம்,” என்றார் மை ஹார்வெஸ்ட் நிறுவனர் அர்ச்சனா ஸ்டாலின்.
உணவுத்துறை, ஆர்கானிக் விவசாயத் தொழில், கட்டமைப்புச் சார்ந்த நிறுவனங்கள், கல்வி ஸ்டார்ட்-அப்ஸ் மற்றும் தொழில்நுட்பமல்லாத சேவை சார்ந்த ஸ்டார்ட்-அப்’களைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் விழாவில் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். 50 ஸ்டார்ட்-அப்’ கள் தங்களுக்குள் கூட்டுநிதி மூலம் நிதி திரட்டி, இந்த விழாவை ஏற்று நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.