#100UNICORNS | ‘யுனிக்’ கதை 42 - Digit Insurance: இன்ஷுரன்சை எளிமையாக்கிய காமேஷ் வென்ற கதை!
எளிமை என்ற ஒற்றை அம்சத்தால் மிகக் குறைந்த காலத்தில் ‘டிஜிட் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தை யூனிகார்ன் நிலையை எட்டவைத்த காமேஷ் கோயலின் கதை வியக்கத்தக்கது.
வாழ்க்கை என்பது அழகானது மட்டுமல்ல... ஆபத்தானது, நிச்சயமற்றதும்கூட. ஒருவர் எப்போது வேண்டுமானாலும் மரணத்தை சந்திக்க நேரிடலாம்.
நாம் இன்னும் கொரோனா தொற்று காலங்களை மறந்திருக்க மாட்டோம். கொரோனா தொற்று ஏற்பட்ட சமயத்தில் மக்கள் பலரும் இறப்பை சந்தித்தனர். எதிர்பாரா மரணங்களால் பல குடும்பங்கள் நிர்கதி ஆகின. தங்கள் குடும்ப தலைவர்களை இழந்து அப்படி நிர்கதி ஆன குடும்பங்கள் பலவும் இப்போது பொருளாதார சிக்கல்களை சந்திப்பதையும் நாம் கண்ணார கண்டு வருகிறோம்.
இக்கட்டான தருணங்களில் இருந்து பல குடும்பங்களை காப்பாற்றியது காப்பீடுகள் எனப்படும் இன்சூரன்ஸ் மட்டுமே. நிச்சயம் இல்லாத வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுப்பது இன்சூரன்ஸ் மட்டுமே. அப்படியான இன்சூரன்ஸ் மூலம் யூனிகார்ன் அந்தஸ்த்தை எட்டிய ஓர் நிறுவனமே இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப்போவது.
அதுவும் மற்ற நிறுவனங்களில் இருந்து வித்தியாசமான அணுகுமுறையை கொண்டு குறைந்த ஆண்டுகளில் யூனிகார்ன் நிலையை எட்டியது அந்த நிறுவனம். அதுதான், ‘டிஜிட் இன்சூரன்ஸ்’ (Digit Insurance) நிறுவனம்.
எளிமை என்ற ஒற்றை அம்சத்தால் மிகக் குறைந்த காலத்தில் ‘டிஜிட் இன்சூரன்ஸ்’ நிறுவனத்தை யூனிகார்ன் நிலையை எட்டவைத்த காமேஷ் கோயலின் கதை வியக்கத்தக்கது.
டிஜிட் இன்சூரன்ஸ் & காமேஷ் கோயல்...
டிஜிட் இன்சூரன்ஸ் 2016-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் டிஜிட்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் இதுவே. ஆனால், இன்சூர் டெக் ஸ்டார்ட்அப் துறையில் யூனிகார்ன் அந்தஸ்த்தை எட்டிய முதல் நிறுவனம். அதுவும் நிறுவனம் தொடங்கப்பட்டு ஐந்தே ஆண்டுகளில் இந்த மதிப்பை அடைந்தது.
இவ்வளவு குறைவான காலகட்டத்தில் சாதிக்க முடிகிறது என்றால், அதற்கு பின்னால் எத்தனை உழைப்பு இருக்க வேண்டும். அந்த உழைப்புக்கும், டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும் மூளையாக செயல்பட்டவரும்தான் காமேஷ் கோயல்.
காமேஷ் கோயல்தான் டிஜிட் இன்சூரன்ஸின் தந்தை. காப்பீட்டுத் துறையில் அவருக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் பட்டம் பெற்ற காமேஷ், டெல்லி பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
ஐசிஐசிஐ லோம்பார்ட், பஜாஜ் அலையன்ஸ் மற்றும் ராயல் சுந்தரம் உள்ளிட்ட பல காப்பீட்டு நிறுவனங்களிலும் காமேஷ் பணியாற்றியுள்ளார். எனினும், காப்பீட்டுத் துறைக்குள் காமேஷ் வந்தது ஒரு விபத்து போன்றது.
அப்போது இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்த காமேஷுக்கு வாழ்க்கையில் குறிப்பிட்ட லட்சியம் எதுவும் இல்லை. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அக்கட்டத்தில் அவரின் சீனியர் இன்சூரன்ஸ் துறையில் வேலைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். அந்த சீனியர் காமேஷ் கோயலையும் வேலைக்கு விண்ணப்பிக்க வற்புறுத்த, அதன்படி, அவரும் விண்ணப்பித்தார். அப்படி கிடைத்த நேர்காணலில், காமேஷ் சொன்னது இதுதான்:
“இன்சூரன்ஸ் பற்றி எதுவும் தெரியாது. ஏன், அந்த துறையில் உள்ள நிறுவனங்கள் பெயர்கூட தெரியாது.”
அந்தத் தருணத்தில், ராஜஸ்தானில் உள்ள தொழில்துறை நகரமான கெத்ரியில் வளர்ந்த இளைஞனான காமேஷ் கோயலுக்கு இன்சூரன்ஸ் என்பது பாலைவனத்தில் உள்ள தண்ணீரைப் போல அந்நியமாகவே இருந்தது.
காமேஷ் கோயலின் ஆரம்பகால கனவுகள் பெரும்பாலும் அவரது சூழல் காரணமாக உருவானவை. பொதுவாக தொழில்கள் அதிகம் மிகுந்த நகரத்தில் வளரும்போது, நமக்கும் தொழில் குறித்த கனவுகளே மேலோங்கும். அது இயல்பான ஒன்று. அத்தகைய சூழலில் தான் காமேஷும் வளர்ந்தார். அந்த பிசினஸ் எண்ணம் தான் அவரை பிட்ஸ் பிலானியில் (பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி & சயின்ஸ்) சேர விரும்ப வைத்தது.
ஆனால், ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் கட்-ஆஃப் தவற, டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் சேர்ந்தார். மூன்று வருட கல்லூரி வாழ்க்கை அவருக்கான விதிவிலக்கான நேரங்களையும் சில சிறந்த நண்பர்களையும் கொடுத்தது. அப்படி வந்ததுதான் இன்சூரன்ஸ் துறையில் நுழைந்தார்.
25 ஆண்டுகால அனுபவத்தில் பல நிறுவனங்களில் பணியாற்றினாலும், அதில் முக்கியமானது ஜெர்மன் இன்சூரன்ஸ் நிறுவனமான அலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியது. அலையன்ஸுடனான அவரது பணி அவர் ஒருபோதும் திட்டமிடாத ஒன்று.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸில் ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு பணிக்குப் பிறகு அலையன்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். ஜெர்மனில் இருந்து இந்திய வணிகத்தை குறிவைத்து அலையன்ஸ் நிறுவனத்துக்காக பணியாற்றினார். பின்னர், பஜாஜ் நிறுவனத்துடன் அலையன்ஸ் இணைய, சிஓஓ அந்தஸ்துக்கு உயர்ந்தார். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் அலையன்ஸ் நிறுவனத்தில் பணி. அந்தப் பணி கொடுத்த அனுபவம் மிகப் பெரியது.
டிஜிட் இன்சூரன்ஸ் ஐடியா...
இன்சூரன்ஸ் துறையில் ஒட்டுமொத்தமாக 25 ஆண்டுகால அனுபவம் கொண்டிருந்தாலும், காமேஷ் எதிர்பாரா ஒரு சிக்கலை எதிர்கொண்டார். இன்சூரன்ஸின் பேஸிக்சை தனது டீனேஜ் மகனுக்கு கற்றுக்கொடுப்பதில் தோல்வியடைந்தார். அந்த தோல்வி புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அப்படித்தான் அவருக்கு டிஜிட் இன்சூரன்ஸை உருவாக்குவதற்கான ஐடியா வந்தது. அந்த ஐடியாவை நிறைவேற்றுவதற்காக அலையன்ஸை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
தனது டீனேஜ் மகனுக்கு இன்சூரன்ஸ் பற்றி புரியாமல் போனதில், இன்சூரன்ஸ் துறையின் சிக்கலான செயல்பாடுகளும் ஒரு காரணம். அதுகுறித்தான சிந்தனையில் இன்சூரஸ் துறையில், வாடிக்கையாளர்களுக்கு எளிமையான தீர்வுகள் தேவைப்படுவதும், துறையில் புதுமை புகுத்தப்படாமல் இருப்பதும் போன்ற பிற சிக்கல்களும் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
இவற்றை தீர்க்க எண்ணினார் காமேஷ் கோயல். அந்த எண்ணத்தின் விளைவு, 2016-ஆம் ஆண்டில், ஓபன் வென்ச்சர்ஸ் மற்றும் ஃபேர்ஃபாக்ஸ் பைனான்சியல் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் Go Digit Infoworks Services என்கிற ஐடி மேம்பாடு மற்றும் ஆலோசனை நிறுவனம் உருவாக்கப்பட்டது. Go Digit Infoworks-இன் துணை நிறுவனமாக அதே ஆண்டில் Go Digit General Insurance ஆக பதிவுசெய்யப்பட்ட Digit, செப்டம்பர் 2017 முதல் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனமாக பயணிக்க தொடங்கியது.
டிஜிட் இன்சூரன்ஸின் முதல் நோக்கம், 15 வயதினரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு இன்சூரன்ஸை எளிமையாக்க வேண்டும் என்பதே. டிஜிட் இன்சூரன்ஸ் முதல் டீமின் பெரிய கவலையாக இருந்தது, மக்கள் இந்த இன்சூரன்ஸ் சிஸ்டத்தில் எந்த அளவுக்கு அவநம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என்பது.
‘நம்பிக்கையில் செழித்து வளர வேண்டிய இந்தத் தொழில் ஏன் இவ்வளவு அசௌகரியம் நிறைந்ததாக இருக்கிறது?’ என்கிற கேள்வியை தங்களுக்குள் கேட்டுக்கொண்ட அந்தக் குழு, சுயபரிசோதனை செய்ய முற்பட்டனர்.
இறுதியாக, ‘இன்சூரன்ஸை எளிமையாக்கு’ என்கிற முழக்கத்துடன் இன்சூரன்ஸின் செயல்பாடுகளை ஆவணங்கள் சமர்ப்பிப்பு முதல் இன்சூரன்ஸ்களை க்ளைம் செய்வது வரை அத்தனை செயல்பாடுகளையும் எளிமையாக்கினார்கள்.
கிளவுட் அடிப்படையில் முழுக்க முழுக்க டிஜிட்டல் அடிப்படையில் அனைத்து செயல்முறைகளும் நடத்தப்பட்டது. அதேநேரம், மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எல்லாம் பக்கம் பக்கமாக பாலிசிகளை கொண்டிருக்க, டிஜிட்டின் பாலிசியோ இரண்டே பக்கம்தான்.
இது இன்சூரன்ஸ் செட்டில்மென்ட்களை எளிதாக்கியது. அதிகபட்சம் 24 மணிநேரம், அதற்குள்ளாக டிஜிட்டில் இன்சூரன்ஸை க்ளைம் செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல், சந்தையில் சில புதிய விஷயங்களையும் அறிமுகப்படுத்த தொடங்கியது டிஜிட் இன்சூரன்ஸ்.
சில தனித்துவமான பாலிசிகளை சந்தையில் கொண்டுவந்தது. நகைகள் மற்றும் தங்கத்திற்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. ஆனால், இங்கு நகை காப்பீடு இல்லை. இதுதவிர விமான தாமத காப்பீடு என புதுமையான பாலிசிகளை கொண்டுவந்தது. இந்த காப்பீடுகள் டிஜிட் இன்சூரன்ஸுக்கு ஆரம்ப கட்ட முன்னேற்றத்தைக் கொடுத்தன.
கொரோனா கால வளர்ச்சி
நிறுவனம் தொடங்கிய மூன்றாம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய் பரவியது. பின்னர், கொரோனாவை முன்னிறுத்தி கோவிட் ஹெல்த் இன்சூரன்ஸ், கோவிட் ஃபயர் இன்சூரன்ஸ் என இரண்டு பாலிசிகளை டிஜிட் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்த அது பிளாக்பஸ்டராக மாறியது.
கொரோனா தொற்றுக்கு பின் டிஜிட் இன்சூரன்ஸ் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டது. 2020-ல் நிறுவனத்தின் வருவாய் 30% அதிகரித்தது. இதுதொடர்ந்து அதிகரிக்க, 2 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இணைந்தனர்.
இப்படி வளர்ச்சி அதிகரிக்க முதலீடுகளும் அதிகரித்தன. டிஜிட் இன்சூரன்ஸ் பெற்ற முதலீடுகளில் குறிப்பிடத்தக்கது விராட் கோலியின் முதலீடும், கனடாவின் வாரன் பஃபெட் என சொல்லக்கூடிய பிரேம் வஸ்தாவின் முதலீடும்.
அக்செல் பார்ட்னர்ஸ், டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் மற்றும் கேபிடல்ஜி என மேலும் பல நிறுவனங்கள் முதலீடுகளை குவிக்க, 2021 வரை சுமார் 530.8 மில்லியன் டாலர் நிதி திரட்டி ‘டிஜிட் இன்சூரன்ஸ்’ 2021-ம் ஆண்டில் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டியது.
2021-ம் ஆண்டில் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டிய முதல் நிறுவனமும் இதுதான். அதேபோல் இன்சுர்டெக் ஸ்டார்ட்அப்களில் யூனிகார்ன் அந்தஸ்தை எட்டிய முதல் நிறுவனமும் இதுதான். இதன்பின் டிஜிட் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருந்து வருகிறது தற்போது வரை.
வெற்றிக்கு காரணம் என்ன?
டிஜிட் இன்சூரன்ஸின் வெற்றிக்கு முக்கியக் காரணம், எளிமையான செயல்பாடும், மக்கள் எளிதில் அணுகுவதற்கான வழிகளும். இன்சூரன்ஸ் அனைவருக்கும் தேவையான ஒன்றை என்பதை தாண்டி, அவற்றை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்திய பழைய கால செயல்முறைகளும், புரிதல்களும் அகற்றப்பட வேண்டும் என்ற சிந்தனை, இந்த துறையில் புதுமையை கொண்டுவர உதவியதோடு, டிஜிட் இன்சூரன்ஸ் என்கிற சாம்ராஜ்ஜியம் உருவாவதற்கும் உதவிகரமாக இருந்தது.
இதன் விளைவு, ராஜஸ்தானில் உள்ள தொழில்துறை நகரமான கெத்ரியில் வளர்ந்த இளைஞனான காமேஷ் கோயலுக்கு, இன்சூரன்ஸ் என்பது பாலைவனத்தில் உள்ள தண்ணீரைப் போல அந்நியமாக இருந்த காலம் மாறி, அந்த துறையின் லெஜண்ட்டாக உருவெடுக்க வைத்தது.
யுனிக் கதைகள் தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 41 - FirstCry: குழந்தைகளின் தேவைகளில் வெற்றிக் கோட்டை அமைத்த இரு நிறுவனர்கள்!
Edited by Induja Raghunathan