500 கோடி மதிப்பு பளிங்கு கல் வர்த்தகத்தை உருவாக்கிய 19 வயது இளைஞர்!
அமித் ஷா, 1994 ல் கிளாஸிக் மார்பிள் கம்பெனியை 19 வயதில் துவக்கினார். இன்று, 900 ஊழியர்களை கொண்ட, 66 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகமாக நிறுவனம் வளர்ந்திருக்கிறது.
90'களின் துவக்கத்தில் மும்பையைச்சேர்ந்த இளம் தொழில்முனைவோர் துணிச்சலான முடிவை எடுத்தார்.
19 வயதான அமித் ஷாவின் குடும்பம் ஜவுளி தொழிலில் ஈடுபட்டிருந்தது. ஆனால், அமித் பளிங்கு கல் துறையில் நல்ல வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார்.
எந்த பாதையை தேர்வு செய்வது என அவருக்கு உறுதியாக தெரியவில்லை. இந்தியாவில் மார்பிள் கல் துறையில் ஒருங்கிணைந்த நிறுவனங்கள் இல்லை என நினைத்தார்.
“இயல்பாகவே தொழில்முனைவு ஆர்வம் கொண்டிருந்தேன். பளிங்கு கல் துறையில் இருந்த இந்த வாய்ப்பை பற்றிக்கொள்ள தீர்மானித்தேன்,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் அமித் கூறினார்.
1994ல் அமித் மார்பிள் தொழிலில் நுழைந்து வர்த்தகம் செய்யத்துவங்கினார். ஆடம்பரமான பளிங்குக் கற்களை வாங்கி செல்வந்தர்களிடம் விற்பனை செய்தார். ’கிளாஸிக் மார்பிள்’ கம்பெனியின் ஆரம்ப காலமாக இவை அமைந்தன. அடுத்த சில ஆண்டுகள் இத்துறையில் தனது அனுபவத்தை வளர்த்துக்கொண்டார்.
அமைப்புசாரா துறையில் செயல்படுவது, சாதகம் இல்லாத உற்பத்தி கொள்கைகள், மூலப்பொருள் கொள்முதல் சிக்கல்கள் என நிறைய சவால்களை எதிர்கொண்டார்.
சுயநிதியில் துவங்கப்பட்ட நிறுவனம், பளிந்து கற்கள் பொருட்களை உருவாக்கி 50 பில்லியன் டாலர் மதிப்புள்ள சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விரும்பினார். முன்னணி பத்து நிறுவனங்கள் 3.76 சதவீத சந்தை பங்கை மட்டுமே கொண்டுள்ள துண்டுகளாக பிரிந்துள்ள சந்தையில் அவர் செயல்பட்டார்.
இதையே ஒரு வாய்ப்பாக அமித் மற்றும் இணை நிறுவனர் கே.எம்.சாமி கருதி, இன்று நாடு முழுவதும் 900 ஊழியர்களைக் கொண்ட ரூ.500 கோடி நிறுவனமான சி.எம்.சி நிறுவனத்தை உயர்த்தியுள்ளனர்.
எஸ்.எம்.பி ஸ்டோரிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், சிஎம்சி நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய பளிங்கு மற்றும் கிரானைட் சப்ளையராக உருவாக்கியது பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
எஸ்.எம்.பி. ஸ்டோரி: வர்த்தகத்தில் எதிர்கொண்ட ஆரம்ப கால சவால்கள் என்ன?
அமித் ஷா (ஏ.எஸ்): துவக்கத்தில், எனது வலைப்பின்னலை உருவாக்க வேண்டியிருந்தது. வர்த்தகத்தில் இயல்பான உறவுகளை உருவாக்கக் கற்றுக்கொள்ள அவகாசம் தேவைப்பட்டது. மூலப்பொருட்கள் கொள்முதல் இன்னொரு பிரச்சனையாக இருந்தது. உலகம் முழுவதும் உள்ள குவாரிகளுடன் கூட்டு வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
மேலும், ஒருங்கிணைக்கப்படாத துறை என்பதால், சந்தை ஆய்வு ஆவணங்கள் அதிகம் இல்லை. துறையை புரிந்து கொள்ள நிறைய முயற்சி தேவைப்பட்டது. இந்திய கொள்களையும் இத்தகைய உற்பத்திக்கு ஆதரவாக இல்லை. ஆடம்பர பொருள் என கருதப்பட்டதால் வரி விதிப்பு அதிகம் இருந்தது.
தவிர, எங்கள் கலிங்கா பிராண்ட் கீழ் உற்பத்தியை துவக்கிய போது, 2009ல் கம்போசிட் பளிங்கு உற்பத்தியை துவங்கிய முதல் ஆலையாக விளங்கினோம். மூலப்பொருட்கள் கொள்முதல், சரியான வளங்களை பெறுவது, ஆய்வு பணிகள் பெரும் சவாலாக இருந்தன. சந்தை ஏற்பு நிலையை உருவாக்குவதும் கடினமாக இருந்தது.
எஸ்.எம்.பி.எஸ் : சி.எம்.சி நிறுவனத்தின் தனித்தன்மை என்ன?
அமித் ஷா: துறையில் முன்னணி வகிக்கத்துவங்கினோம். தரமான, பிரத்யேகமான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள சவாலுக்கு தீர்வு கண்டோம். எங்கள் கலிங்கா ஸ்டோன் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல மதிப்பு பெற்றுள்ளது.
இப்போது 66 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். தொழில்நுட்பம், புதுமையாக்கத்தில் சிறந்தவற்றில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு ஏற்ற வடிவமைப்பு, ஸ்டைல், வண்ணங்களை கொண்டுள்ளோம்.
உலகம் முழுவதும் விரிவான விநியோக வலைப்பின்னலை உருவாக்கியிருப்பது எங்கள் பொருட்களை விற்பனை செய்ய உதவுகிறது. மேலும், பொருளின் நுட்பங்களை விளக்கிச்சொல்லும் ஆற்றலை விற்பனை குழு பெற்றுள்ளது.
எஸ்.எம்.பி.எஸ் : உற்பத்தியில் ஈடுபட்டது எப்படி?
அமித் ஷா: நாட்டில் கற்களுக்கான மிகப்பெரிய ஆலையை கொண்டுள்ளோம். குஜராத்தில், சில்வாசாவில் ஐந்து லட்சம் சதுர மீட்டரில் அமைந்துள்ளது. இயற்கை பளிங்கு, செயற்கை பளிங்கு, குவார்ட்ஸ் உள்ளிட்டவற்றுக்கு தனி பிரிவுகள் உள்ளன.
ஆண்டுக்கு 30 மில்லியன் சதுர அடி பளிந்து, லைம்ஸ்டோன் உற்பத்தி செய்ய முடியும். 30,000 மெட்ரிக் டன் பலகைகளை இருப்பு வைக்க முடியும். ஐந்து லட்சம் சதுர மீட்டர் பளிங்கு கற்களை வைத்திருக்க முடியும்.
இத்தாலியின் எஸ்.ஐ.எம்.இ.சி நிறுவனத்தின் மிகச்சிறந்த பாலிஷ் இயந்திரத்தைபெற்றுள்ளோம். விரும்பிய பளபளப்பை பொருளில் கொண்டு வர முடியும். பளிங்கில் உள்ள நுண் துளைகள் கூட அடைபடும் வகையில் வாக்கும் ரெசின் பயன்படுத்தும் ஒரே நிறுவனமாக இருக்கிறோம். இதனால் கல்லின் ஆற்றல் அதிகரிக்கிறது.
எஸ்.எம்.பி.எஸ் : பல்வேறு பொருட்கள் பிரிவில் விரிவாக்கம் செய்தது எப்படி?
அமித் ஷா: வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப விரிவாக்க உத்திகள் அமைந்தன. பளிங்கு கற்கள் உள்ளிட்டவற்றுக்கான சந்தை வளர்ந்து வந்த நிலையில், வாடிக்கையாளர்கள் பிரிமியம் தரத்தையும் எதிர்பார்த்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு எல்லா வகையான வாய்ப்புகளையும் ஒரே இடத்தில் வழங்க விரும்பினோம். இன்று, இயற்கை, செயற்கை பொருட்கள் தவிர, பரவலான வகைகளில் போர்சரில் ஸ்லேப்களை வழங்குகிறோம்.
அண்மையில் மிகவும் அரிதான கற்களுக்கான் 9த் அவன்யூ லிமிடெட் எடிஷனை அறிமுகம் செய்தோம். துருக்கியின் பழையமான Kalesinterflex, நிறுவனத்துடன் பிரத்யேக கூட்டு வைத்துள்ளோம். இந்நிறுவனம், மிகவும் இலகுவான, லேசான, டைல்களுக்காக அறியப்படுகிறது.
எஸ்.எம்.பி.எஸ்: உங்கள் இலக்கு வாடிக்கையாளர்கள் யார்?
அமித் ஷா: நிறுவனம் எல்லோருக்குமான பொருட்களைக் கொண்டிருக்கிறது. 9த் அவன்யூ மிகவும் பிரதேயேகமான பொருட்களின் கேலரியாகும்.
இயற்கை கல் பிரிவிலும் அதிக கலெக்ஷன் கொண்டிருக்கிறோம். 700க்கும் மேற்பட்ட வண்ணங்கள், வடிவமைப்புகள், வார்ப்புகளில் பொருட்கள் உள்ளன. பளிங்கு மிகவும் செழுமையான கல்லாகும். பலரும் இல்லம், அலுவலகங்களுக்கு தேர்வு செய்கின்றனர்.
கலிங்கா ஸ்டோனில் நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்குகிறது. ஸ்டைல் மற்றும் வசதியுடன் விலையும் ஏற்றதாக இருக்கிறது. Kalesinterflex தனித்தன்மை வாய்ந்த ஸ்லேபாக விளங்குகிறது. வர்த்தக கட்டிடங்களில் விரும்பி பயன்படுத்தப்படுகிறது.
எஸ்.எம்.பி எஸ்: நிறுவனம் டிஜிட்டல் மேடைகளை எப்படி பயன்படுத்துகிறது?
அமித் ஷா: நிறுவனம் இந்தப் பிரிவை இன்னும் முழுமையாக ஆராயவில்லை. ஆனால், சமூக ஊடக மேடைகளில் பிரபலமாக இருக்கிறோம். டிஜிட்டல் ஊடகம் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்கிறோம். எனினும் மார்கெட்டிங் விற்பனையை இந்த வழியில் முயற்சிக்கவில்லை. மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக பயன்படுத்தி வருகிறோம்.
எஸ்.எம்.பி எஸ்: உங்கள் எதிர்கால திட்டம்?
அமித் ஷா: கம்போசிட் மார்பில் பிரிவில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் கொண்ட நிறுவனங்கள் அதிகம் இல்லை. கலிங்காஸ்டோனை எங்கள் டீலர் வலைப்பின்னல் மூலம் பிரபலமாக்க உள்ளோம். எங்கள் டீலர்களான கலிங்கா ஷாப் மூலம் 20 கலிங்கா ஸ்டோன் ஷோரூம் கொண்டுள்ளோம். இதை அடுத்த நிதியாண்டில் 150 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்