'நவ்துர்கா': நெல் உமி கொண்டு தயாரிக்கப்படும் சுத்தமான சமையல் அடுப்பு!
நவ்துர்கா கண்டுபிடித்த நெல் உமியைக் கொண்டு செயல்படும் சுத்தமான சமையல் அடுப்பு பலரின் வாழ்வையும், பணத்தையும் சேமித்துள்ளது.
ஏறத்தாழ 400 மில்லியன் மக்கள் – இதில் 90% பெண்கள், திறனற்ற சமையல் அடுப்புகள் வெளியிடும் ஆபத்தான நச்சு பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்களுக்கு மூச்சுத்தினறல், நுரையீரல் பாதிப்பு மற்றும் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. சமையலறையில் ஏற்படும் மாசு காரணமாக, சுமார் 1.3 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் (WHO) தெரிவிக்கிறது. திட எரிபொருள்களான விறகு மற்றும் பசுஞ் சாண வரட்டி போன்றவற்றை திறனற்ற சமையல் அடுப்புகளில் பயன்படுத்துகின்றனர். இதில் இருந்து வெளியாகும் நச்சுத்தன்மையே உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைகிறது.
சுகாதார சீர்கேடுகள் ஒரு பக்கம் இருந்தாலும், விறகு சேகரிக்கவோ, வரட்டி செய்யவோ ஏராளமான நேரமும், முயற்சியும் வீணடிக்கப்படுகிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 80 மில்லியன் பேர் சமையலுக்கு பாரம்பரிய எரிபொருள் ஆதாரங்களையே தேர்ந்தெடுப்பதாக '2013 எரிசக்தி புள்ளிவிவரம்' தெரிவிக்கிறது. அதாவது அவர்கள் விறகுகள், கரித்துண்டு, வைக்கோல் மற்றும் வரட்டியை பயன்படுத்துகின்றனர். வீட்டில் மண்ணெண்ணெய் பயன்படுத்துவோர் தன்னுடைய வருமானத்தில் 30 சதவீதத்தை அதற்காக தனியாக ஒதுக்க வேண்டியுள்ளது.
சௌரப் சாகர் ஜெய்ஸ்வால் மற்றும் அவருடைய தந்தை அரவிந்த் சாகர் ஜெய்ஸ்வால் இணைந்து 2009ம் ஆண்டு, நவ்துர்கா மெட்டல் தொழிற்சாலை மூலம் இந்த பிரச்னைக்குத் தீர்வு கண்டனர். சௌரபின் மாமனார் மகேந்திர பிரதாப் ஜெய்ஸ்வாலின் எண்ணத்தில் இது உருவானது. நேபாளத்தில், ஒரு ஏழை விவசாயி நெல் உமியை எரிபொருளாக பாரம்பரிய அடுப்பில் பயன்படுத்தியதைக்கண்டு அவருக்கு அந்த எண்ணம் தோன்றியது. இதை முன்மாதிரியாகக் கொண்டே ஒரு சுத்தமான சமையல் அடுப்பைத் தயாரிக்க அவர் விரும்பியுள்ளார். நவ்துர்காவின் முதல் தயாரிப்பான 'ஜன்தா சுல்ஹா' புகையில்லா அடுப்பின் விலை ரூ.500.
சமையல் அடுப்புகளில் முன்னேற்றம் காண்பதால் குடும்பத்தாரின் சுகாதாரம், வாழ்க்கையில் பல்வேறு நன்மைகளையும், உலக அளவில் நிலையான தாக்கத்தையம் ஏற்படுத்த முடியும் என்று நாங்கள் நம்பினோம். எங்களின் அடுப்பு அவர்களுக்குப் பாதுகாப்பு, சிறந்த ஆரோக்கியம் மற்றும் உயர்ந்த வருமானத்தையும் அளிக்கும். விறகு சேகரிக்கும் நேரம், சமையல் நேரம் குறைவதால் அவர்களுக்கு வேலைவாய்ப்பில் நிறைய நேரம் கிடைக்கும். இவை, சுற்றுச்சூழல் மாசு குறையவும் உதவி செய்யும்" என்று கூறும் மகேந்திரனின் மகன், விபோர் ஜெய்ஸ்வால், நவ்துர்காவின் செயல் இயக்குனராக 2012ல் இணைந்துள்ளார். விபோர், எம்பிஏவில் (MBA) மனிதவளம் படித்துள்ளார். இதற்கு முன்னர் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைனிலும், இந்தியா முழுவதிலும் பல்வேறு மின் ஆளுமை திட்டங்களிலும் பணியாற்றி உள்ளார். பயனுள்ள பயோமாஸ் சமையல் அடுப்புகளைத் தயாரிக்க வேண்டும் என்ற தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காக பணியை ராஜினாமா செய்து விட்டு, தொழிலை வளர்த்தெடுக்க நவ்துர்காவில் சேர்ந்துள்ளார் விபோர்.
அவர் சேர்ந்த பிறகு, நவ்துர்கா மூன்று மாநிலங்களில் இருந்து எட்டு மாநிலங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டுக்கான ஆதாரம் திரட்டுவது, உமியால் இயங்கும் சமையல் அடுப்புகளின் தேவையை அதிகரிப்பது மற்றும் வருமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களிடம் இது பற்றிய நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது என முதல்கட்ட சவால்களை சமாளிக்கும் பணியை விபோர் பார்த்துக் கொண்டார். எல்பிஜி அடுப்புகளைப் போலவே நவ்துர்காவின் அடுப்பும் அதே நீல நிற நெருப்பை வெளியிடும், புகையில்லாமல் ஐந்தே நிமிடத்தில பற்ற வைத்து விடலாம் என்கிறார் ஜெய்ஸ்வால். நவ்துர்கா 10 வடிவங்களில் சமையல் அடுப்புகளை தயாரித்துள்ளது. அதாவது உமி (இதர வேளாண்/மரக்கழிவுகள்) கொண்டு இயங்கும் அடுப்புகள், பாரம்பரிய அடுப்புகளை விட சமையல் கட்டுகளில் இருந்து வெளியாகும் காற்று மாசை 80 சதவீதம் குறைத்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 120 மில்லியன் டன் நெல் உமி கிடைக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை எரிக்கப்படுகிறது அல்லது வீணாக்கப்படுகிறது. உமியை மூலதனமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் சில, அண்மையில் நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். நவ்துர்காவால் பயன்படுத்தப்படும் நெல்உமி ஒரு நல்ல புகையில்லா எரிபொருள் ஆதாரம்.
“வாடிக்கையாளருக்கு ஏற்ற அடுப்பை கொடுக்கிறோமா என்பது தான் முக்கிய அம்சம். சமையல் தயாரிப்புகளுக்கு சிறு முதலீடு, முதலீடு மற்றும் நிறுவனத்தின் புதிய முயற்சிக்கு ஏற்ற திறன்மிகு கட்டமைப்பு திட்டங்களும் தேவை என்பதை சிறிது காலம் கழித்தே நான் தெரிந்து கொண்டேன். நெல் உமி சார்ந்த அடுப்பு தயாரிப்பை பொறுத்தமட்டில், அதை உருவாக்கி, தயாரித்து, விற்பனை செய்வதற்கு இந்தியாவில் இன்று வரை நாங்கள் மட்டுமே உள்ளோம்” என்கிறார் ஜெய்ஸ்வால். நவ்துர்கா, உத்திரப்பிரதேசத்தைத் தலைமையிடமாக் கொண்டு செயல்படுகிறது. மற்ற மாநிலங்களான பீகார், உத்தரகாண்ட், ஒரிசா, சத்தீஸ்கர், கர்நாடகா, அசாம், மேகாலயாவிலும் அது செயல்படுகிறது.
நவ்துர்கா, 30 ஆயிரம் வீடுகள் அல்லது 1 லட்சத்து 80 ஆயிரம் மக்களிடம் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் கணக்குப்படி, இவ்வகை அடுப்புகள் மூலம் ஆண்டுக்கு 60 ஆயிரம் டன் கரியமில வாயு வெளியீடு குறைந்துள்ளது. ஒவ்வொரு நெல் உமி அடுப்பின் நெருப்பும் ஆண்டுக்கு தோராயமாக 20 மரங்கள், 730 மணி நேரம் சமையல் மற்றும் இரண்டு டன் பச்சைவீடு வாயு வெளியீட்டை சேமித்துள்ளது. இன்னும் ஒரு படி மேலே சென்று பார்த்தால் நெல்உமி அடுப்பின் சாம்பல் நல்ல மண்வள ஆதாரம். நவ்துர்கா இந்தியாவில் உள்ள மாநிலங்களை மையப்படுத்தி மேலும் பல வேளாண் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தும் பணியை செய்து வருகிறது. இந்த சமூக நிறுவனம் அண்மையில் அக்னி மதிய உணவு அடுப்புகளை நிறுவியுள்ளது. இவை தேவைக்கேற்ப கிராம அளவிலான ஆரம்பப் பள்ளிகளுக்கு ஏற்ற வகையில் பல அளவுகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. “இத் திட்டத்தை ஆண்டின் இறுதியில் நேபாளத்திற்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் விபோர்.
இந்தியா முழுவதும் 2 லட்சம் சமையல் அடுப்புகைளை 2016க்குள் தயாரித்து விநியோகம் செய்வதே நவ்துர்காவின் இலக்கு.
குறிப்பு: நவ்துர்கா "2014 சங்கல்ப் விருதின்" இறுதி போட்டியாளர்.