அமெரிக்க நிறுவனம் ’ஜெனரல் மோட்டார்ஸ்’ன் முதல் பெண் CFO ஆன சென்னை திவ்யா சூர்யதேவாரா!
சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா தனது திறமைகளால் முன்னேறி, அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் 39 வயதை எட்டிய பெண்மணி ஒருவர் நல்ல அம்மாவாக, ஓளரவு நல்ல நிறுவனத்தில் சுமாரான பொறுப்பில் இருக்கமுடியும். ஆனால், அமெரிக்காவில் இறக்கை கட்டி பறக்கிறார் சென்னையைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆட்டோமொபைல் துறையில் திவ்யா உச்சம் தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாராவை அந்த நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமித்தது உலக அளவில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் உயர் பொறுப்பு, குடும்பம் என இரண்டையும் சமன்படுத்தி உலகின் முன்மாதிரி பெண்கள் பட்டியலில் திவ்யா சூர்யதேவாரா இடம்பிடித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த திவ்யாவின் இளமைக்காலம் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. அம்மா, அப்பா 2 சகோதரிகள் என்று அழகாக நாட்கள் கடந்து கொண்டிருந்த போது தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.
திவ்யாவின் தந்தை திடீரென உயிரிழந்துவிட 3 பெண் குழந்தைகளையும் அவரின் தாயாரே வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தந்தை இல்லாத குறை தெரியாமல் கல்வி உள்ளிட்ட தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து இவர்களை வளர்த்துள்ளார் திவ்யாவின் தாயார்.
அன்னையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திவ்யா தன்னுடைய இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி பயணிக்க முடிவெடுத்தார். கடினஉழைப்பின்றி எதையுமே அடைய முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த திவ்யா, பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றார். எம்பிஏ படிப்பதற்காக அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு தன்னுடைய 22வது வயதில் சென்றார்.
தாய்நாடு, குடும்பத்தை விட்டு திவ்யா வெகுதூரம் சென்றது அதுவே முதன்முறை. புது கலாச்சாரம், உணவுமுறை, மக்கள் என முதலில் திவ்யாவிற்கு அந்தச் சூழல் கலாச்சார அதிர்ச்சியானதாகவே இருந்தது. 22 வயதில் அமெரிக்காவிற்கு படிக்க வந்த போது திவ்யாவிடம் போதுமான நிதிவசதி இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரிக்கு சென்று வந்தார். கல்விக்கடன் மூலமே படித்து வந்ததால் அதனை திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயமும் இருந்தது. பண நெருக்கடியால் வேலைக்கு செல்ல வேண்டியதும் அவசியமானது.
முதலில் யூபிஎஸ் வங்கியில் சில ஆண்டுகள் பணியாற்றியவர், 25 வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக சேர்ந்துள்ளார். ஜெனரல் மோட்டார்ஸ் அமெரிக்காவின் பழமை வாய்ந்த ஆட்டோ மொபைல் நிறுவவனமாகும், செவ்ரோலெட் கார் ரகங்களை இந்த நிறுவனமே தயாரிக்கிறது.
ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வித்தியாசமாக செய்ய என்ன பணி இருக்கிறது, தன்னுடைய திறமையை எப்படி வெளிக்காட்டுவது என்று யோசித்துள்ளார் திவ்யா. விடா முயற்சி மற்றும் நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்ற முடிவோடு கடினமாக உழைத்தார்.
ஸ்டார்ட் அப்களுக்கான ஐடியாக்கள், வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பது, நிறுவனத்தின் தர மதிப்பீடை அதிகரிப்பது என அனைத்து வகையிலும் பம்பரம் போல சுழன்று நிறுவன வளர்ச்சிக்காக பாடுபட்டார்.
இதன் பயனாக 2005ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக பணிக்கு சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து 2017ல் கார்ப்பரேட் நிதிப்பிரிவின் துணைத் தலைவராக பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்தே அதே நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நிதி அதிகாரி சக் ஸ்டீவன்ஸ் ஓய்வு பெறுவதையடுத்து திவ்யா செப்டம்பர் மாதத்தில் இந்த பொறுப்பை ஏற்கிறார். ஜிஎம் நிறுவனத்தின் நிதி தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் இனி திவ்யாவே எடுப்பார்.
திவ்யாவின் கணவரும், 10 வயது மகளும் நியூயார்க்கில் வசிக்கின்றனர். திவ்யா டெட்ராய்ட்டில் பணியாற்றுகிறார். வார நாட்களில் பணியிலேயே மூழ்கி கிடக்கும் திவ்யா, வார இறுதியில் நியூயார்க்கில் உள்ள குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார். டெட்ராய்ட்டில் இருக்கும் போது மீட்டிங், குழு ஆலோசனை என்று எப்போதும் பிசியாக, நியூயார்க் சென்றதும் மகளுக்கு நல்ல தாயாக மாறி அவருடன் நேரத்தை செலவிடுகிறார்.
குடும்பம், பணி என்று இரண்டையும் சமநிலையில் கொண்டு செல்லும் திவ்யா நியூயார்க், டெட்ராய்டுக்கும் பயணம் செய்தபடியே இருக்கிறார். தனக்கு வரும் நூற்றுக்கணக்கான மெயில்களைக் கூட விமான பயணத்தின் போதே படித்து பார்க்கும் அளவிற்கு பிசியான பெண்மணி.
இப்படித் தான் வேலை செய்ய வேண்டும், இப்படித் தான் வாழ வேண்டும் என்று எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது வாழ்வில் முன்னேற்றம் பெற எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்ந்து வருகிறார் திவ்யா. குடும்பத்தினருக்கு சமைத்து தர வேண்டும் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் நம்முடைய இலக்கின் திசை மாறிவிடும் என்பதே திவ்யா சூர்யதேவாராவின் தாரக மந்திரமாக இருக்கிறது.
“நம்முடைய பணிப்பளு என்ன என்பதை குடும்பத்தினருக்கு புரிய வைக்க வேண்டும். வார விடுமுறை மற்றும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய முழு நேரத்தையும் மகளுடன் செலவிடுவேன். அவளை பள்ளிக்கு அழைத்து செல்வது, விளையாடுவது என்று என்னுடைய உலகமே அவளாக மாறிவிடும். நான் அப்படி இருப்பதால் தான் நான் பணிக்காக டெட்ராய்ட் சென்றாலும் நியூயார்க்கில் இல்லாத குறையே என் மகளுக்கு தெரிவதில்லை.”
சொல்லப்போனால் என் மகள் என்னைப் பற்றி மீடியாக்களில் வரும் செய்திகளை கூகுளில் தேடிப் படித்து அம்மா நான் உங்களைப் பற்றி படித்தேன் என்று மகிழ்ச்சியோடு கூறுவார். அவளும் என்னை மாதிரியே சிறந்த பெண்ணாக விளங்க வேண்டும் என்றே அனைவரிடமும் சொல்லி வருவதாக திவ்யா சூர்யதேவாரா ரியல் சிம்பிள் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா சூர்யதேவாரா நியமிக்கப்பட்டுள்ளதற்கு அந்த நிறுவனத்தின் முதல் பெண் தலைமை செயல் அதிகாரியான மேரி பாராவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். திவ்யாவைப் போலவே மேரியும் ஆட்டோமொபைல் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவர்.
திவ்யாவின் அனுபவம் மற்றும் தலைமைப் பண்பு ஜிஎம் நிறுவனத்தின் நிதி செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் காரணமாகவே அவருக்கு தலைமை பொறுப்பும் கிடைத்துள்ளது, திவ்யாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய பணி தொடர வேண்டும், இதன் மூலம் திவ்யாவிற்கும் ஜிஎம் நிறுகூனத்திற்கும் நற்பெயர் பெருக வேண்டும் என்றும் பாரா, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக அளவில் வாகனத் துறையில் வேறு எந்த நிறுவனத்திலும் முதல் இரண்டு தலைமைப் பொறுப்புகளுக்கு பெண்கள் இல்லை. அமெரிக்க பங்குச்சந்தையில் இடம்பெற்றுள்ள ஹெர்ஷே, அமெரிக்கன் வாட்டர்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி பொறுப்பில் பெண்கள் உள்ளனர். ஆட்டோமொபைல் துறையில் மேரி பாராவும், திவ்யா சூர்யதேவாராவுமே நிறுவனத்தின் முக்கிய உயர் பொறுப்புகளை வகிக்கிறார்கள். திவ்யாவின் விடாமுயற்சி இன்றைய தலைமுறை பெண்களுக்கு நல்ல உதாரணம்.