இது என்ன! பொதுவாக பெண்களுக்குத்தானே சமன்படுத்துதல் பிரச்சனை தோன்றும் என்று யோசிக்கிறீர்களா??? ஆனால் இந்தத் தலைப்பை விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு முக்கியக் காரணமே பெண்கள்தான். அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆமாம். இதுதான் உண்மை!
முந்தைய காலகட்டங்களில் குடும்பத்தில் ஆண்கள் மட்டும்தான் பணிக்கு சென்றார்கள். ஒரே வருமானம்தான். பெண்கள் வீட்டில் இருப்பார்கள். குடும்பத்தை யார் பார்த்துக்கொள்வது? யார் சம்பாதிப்பது? இந்த கேள்விகளுக்கே இடமில்லை. ஏனென்றால் கணவன் மனைவி இருவரும் தனிப்பட்ட பொறுப்புகளை சுமந்தார்கள். இந்த மாதம் செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறதே? ஸ்கூல் பீஸ் கட்டவேண்டுமே? மருத்துவ செலவு இருக்கிறதே? இதுபோன்ற கேள்விகளுக்கு திட்டமிட்டு விடை காண்பது பெரும்பாலும் ஆண். அன்றாட உணவு தேவைகள், வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்துக்கொள்வது போன்ற பொறுப்புகளை பெண்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
இப்படியிருக்கையில் நிலைமை மாறத்தொடங்கியது. பெண்கள் வேலைக்கு செல்லத் தொடங்கினர். இப்போது வருமானமும் அதிகரிக்கிறது அல்லவா? மகிழ்ச்சிதானே. ஆமாம்!! ஆனால் வீட்டு வேலைகளை யார் செய்வது??? வேறு வழியில்லை எப்படி வருவாயை பெருக்க இருவரும் பகிர்ந்து உழைக்கிறார்களோ, அதேபோல் மற்ற வேலைகளையும் இருவரும் பகிர்ந்துகொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு மற்றொரு முக்கியக் காரணம் “ந்யூக்ளியர் ஃபேமலி” கான்செப்ட். கணவன் மனைவி குழந்தைகள் மட்டுமே இருக்கும் வீட்டில் இருவரும் பணிக்கு செல்லும்போது அனைத்து வேலைகளையும் இருவரும் பகிர்ந்துகொண்டுதான் ஆகவேண்டும்.
ஆகவே ஆண்களும் குடும்பப் பொறுப்புகளை அலுவலக பணியுடன் சேர்த்து சுமக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் அவ்வளவு எளிதாக எதையும் அடுத்தவருடன் பகிர்ந்துகொள்வதில்லை. பணியில் வெற்றியின் உச்சத்தை எட்டிய ஆண்கள் கூட தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவுகூர்கையில் எப்படி குடும்பத்தையும் பணியையும் சமன்படுத்தினார்கள் என்று வெளிப்படுத்துவதில்லை. இதற்கு முக்கிய காரணம் சமூகத்தின் கண்ணோட்டத்தில் இது பெண்களின் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. ஆண்கள் உரக்கச் சொல்லவில்லையென்றாலும் அவர்கள் அமைதியாக இதை சமாளித்து வருகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
விடுப்பு
பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுப்பதுபோல் ஆண்களுக்கும் பெட்டர்னிட்டி விடுப்பு எடுப்பது அவசியம். ஒரு குழந்தை பிறக்கும்போது எப்படி ஒரு பெண் உடலளவில் பாதிக்கப்படுகிறாளோ அதேபோல் ஒரு ஆணுக்கும் மனதளவிலான இமோஷனல் மாற்றங்கள் ஏற்படுவதை நாம் ஒத்துக்கொள்ளவேண்டும். மேலும் மனைவிக்கு ஆதரவு தரவும் ஒத்துழைக்கவும், குழந்தையுடன் நேரம் செலவழிக்கவும் கணவனுக்கு விடுப்பு அவசியம். பெரும்பாலான நிறுவனங்களும் அரசுத்துறைகளும் பெட்டர்னிட்டி விடுப்பு சலுகையை வழங்குகின்றனர். ஆனால் ஒரு சிலரே அந்த விடுப்பை எடுத்துக்கொள்கின்றனர். வரும்காலங்களில் அனைத்து ஆண்களும் இந்த விடுப்பை எடுத்துக்கொண்டு குடும்பத்துக்கான தனது நேரத்தை செலவிடுவது இக்காலத்தில் அவசியம் ஆகிறது.
அச்சம்
ஆண்களுக்கு விடுப்பு கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்ளலாமா என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. அதிக நாட்கள் விடுப்பு எடுத்தால் அதனால் செயல்திறன் பாதிக்கப்படும் என்றும் இந்த இடைவெளி முன்னேற்றப்பாதையை பாதிக்கும் என்றும் அஞ்சுவார்கள். இந்த அச்சத்தைப் போக்க விடுப்பு காலத்தில் ஆண்கள் வீட்டு பொறுப்புகளில் கவனம் செலுத்தலாம். குடும்பத்தில் இருவரும் பணிக்குச் செல்லும் காரணத்தினால் பல நாட்களாக முடிக்கப்படாது இருக்கும் வேலைகளை ப்ளான் செய்து முடிக்கலாம். குழந்தைகளுக்குத் தேவையானவற்றை கற்றுக்கொடுத்து விடுப்பை பயனுள்ளதாக்கலாம்.
வேலை நேரம்
ஆண்களின் வேலை நேரம் அதிகமாக இருப்பதால் அவர்களால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க முடிவதில்லை. வேலை நேரங்களில் ஃப்ளெக்ஸிபிளிட்டி பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு அதிகமாக அனுமதிக்கப்படுவதில்லை. இன்னும் நம் சமூகத்தில், “நல்ல ஊழியர்” என்ற முத்திரையின் உண்மையான அர்த்தத்தை பலர் சரிவர புரிந்துகொள்வதில்லை. ஒரு பொதுவான கருத்து என்னவென்றால் நல்ல ஊழியர் என்பவர் குடும்பத்தைப் பற்றியே சிந்திக்கக்கூடாது. அதிக நேரம் அலுவலகத்தில் செலவழிக்கவேண்டும். ஒரு நாள் கூட லீவ் எடுக்கக் கூடாது. இந்த எண்ணம் மாறவேண்டும். நாம் செய்யும் வேலையின் தரத்தை வைத்துதான் திறமை நிர்ணயிக்கப்படவேண்டுமே தவிர வேலை நேரத்தின் அடிப்படையில் அல்ல. இதை ஆண்கள் உணர்ந்தாலே, பணியிட-குடும்ப சமன்பாடு எளிதாக ஏற்படும்
அங்கீகாரம்
ஆண்களின் முக்கியப் பொறுப்பாக இருந்துவந்த வருமானம் ஈட்டுதலில் பெண்கள் நுழைந்தை அங்கீகரித்த நம் சமூகம், பெண்களின் முக்கியப் பங்காக இருந்துவந்த குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பில் ஆண்கள் நுழைவதை மட்டும் ஏன் அங்கீகரிப்பதில்லை?
சமாளிக்கும் வழிகள்
வேலைகளுக்கு முன்னுரிமை அளித்தல்
அலுவலகத்தில் ஒரு இக்கட்டான மீட்டிங். அது போன்ற நேரத்தில் நிச்சயமாக மற்ற வேலைகளை புறந்தள்ளிவிட்டு அதில் மட்டுமேதான் கவனம் செலுத்துவோம். அதேப்போல உங்கள் மனைவிக்கோ குழந்தைக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் நீங்கள் வீட்டில் இருக்கவேண்டியது அவசியம்தானே? வாழ்க்கையை எழுதி வைத்து அதன்படி வாழமுடியாது. அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு அந்தந்த வேலையின் முக்கியத்துவத்திற்கு ஏற்றவாறு முன்னுரிமை அளித்து வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
குடும்பத்துடன் வெளியே செல்லுதல்
இயந்திரங்கள் கூட ஒரு நிலைக்குமேல் இயங்கினால் பழுதடைந்துவிடும். அதேபோல் வாழ்க்கையை எப்போதும் சீரியஸான கோணத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டிருப்பது போரடித்துவிடும். வாழ்க்கை புதுப்பிக்க குடும்பத்துடன் எங்காவது வெளியில் சென்றால் மாறும் புதிய சூழல் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இந்த எனர்ஜி மேலும் சிறப்பாக பணியைத் தொடர உதவும்.
ஆண்கள் தாங்கள் சந்திக்கும் சவால்களை பகிர்ந்துகொண்டால் அதற்கான தீர்வுகள் அறியப்பட்டு பாகுபாடற்ற கலாச்சாரத்தை பணியிடங்களில் உருவாக்கலாம்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
வீடு-வேலை சமன்பாட்டை பெண்களுக்கு எளிதாக்கிய 'ஷீரோஸ்.இன்'
'சமூகம் பெண்களை பலவீனமான இனமாகவே வளர்த்தெடுக்கும் நிலை மாற வேண்டும்' - அமுதா ஐ.ஏ.எஸ்.