600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உருவாக்கியுள்ள ’ட்ரோன் விஞ்ஞானி'
எல்லைப் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல், மனிதர்கள் மீட்பு போன்ற பல முக்கிய விஷயங்களுக்கு ட்ரோன் உருவாக்கி சாதனைப் படைத்துள்ளார்.
இயற்கை பேரிடர்கள் சமயங்கள், எல்லைப் பாதுகாப்பு, விவசாயத்தில் விவசாயிகளுக்கு உதவுதல் என பல்வேறு பகுதிகளில் இன்று புதுமையான கண்டுபிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ட்ரோன் தொழில்நுட்பம்.
தெற்கு கர்நாடகாவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் தனித்து விடப்பட்டனர். அந்த சமயத்தில் 22 வயதான என்.எம் பிரதாப் தனது ட்ரோன்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் இதர நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார். மைசூருவின் ஜேஎஸ்எஸ் கலை, வணிகம் மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.எஸ்சி பட்டதாரியான பிரதாப் ’ட்ரோன் விஞ்ஞானி’ என்றே பாராட்டப்படுகிறார்.
பிரதாப் தனது 14 வயது முதலே ட்ரோன்களை கையாளத் தொடங்கியுள்ளார். அடுத்த இரண்டாண்டுகளில் தனது 16வது வயதில் முழுமையாக இயங்கக்கூடிய ட்ரோன் ஒன்றை உருவாக்கினார். இந்தியாவின் முன்னணி விஞ்ஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமைக் கண்டு உந்துதல் பெற்றார். பிரதாப் முதலில் உருவாக்கிய ட்ரோன் பறந்து செல்லமுடியாமல் போனாலும் சிலவற்றைப் படம்பிடித்தது.
பிரதாப் அடுத்த சில ஆண்டுகளில் தாமாகவே 600 ட்ரோன்களை உருவாக்கியுள்ளார். இதுவரை எல்லைப் பாதுகாப்பில் தகவல்தொடர்பு, போக்குவரத்து நெரிசல் மேலாண்மையில் ட்ரோன்கள், மனிதர்களை மீட்பதற்கான யூஏவி, தானியங்கி ட்ரோன்கள், ட்ரோன் நெட்வொர்க்கிங்கில் க்ரிப்டோகிராஃபி உள்ளிட்ட ஆறு முக்கிய பிராஜெக்டுகளை நிறைவு செய்துள்ளார்.
பிரதாப்பின் ட்ரோன்கள் குறுகிய நேரத்தில் மருந்துகளை விநியோகித்து ஆப்ரிக்காவில் உள்ள பழங்குடியின மக்களின் உயிரைக் காப்பாற்றுகிறது.
பிரதாப் உருவாக்கிய வெவ்வேறு வகையான ட்ரோன்களைக் காட்சிப்படுத்த 87-க்கும் அதிகமான நாடுகள் அவருக்கு அழைப்பு விடுத்தது. ஜெர்மனியின் ஹானோவரில் நடைபெற்ற சர்வதேச ட்ரோன் எக்ஸ்போ 2018ல் பிரதாப்பிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இன்னோவேஷன் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
அதேபோல் ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச ட்ரோன் எக்ஸ்போவில் மற்றுமொரு தங்கப்பதக்கம் வென்றார். இவ்வாறு பல்வேறு பதக்கங்களை பிரதாப் வென்றுள்ளார் என ’டெக்கான் ஹெரால்ட்’ தெரிவித்துள்ளது. அவசரகாலத்தில் ட்ரோன்களை பயன்படுத்துவது தொடர்பாக உரையாற்ற சமீபத்தில் ஐஐடி மும்பை இவருக்கு அழைப்பு விடுத்தது.
Edex Live உடனான உரையாடலில் தனது திறன் குறித்து பிரதாப் தெரிவித்தபோது,
“நான் ட்ரோன் உருவாக்கக் குறைவான பணத்தையே செலவிடுவேன். அதிக மின்கழிவுகளைப் பயன்படுத்தினேன். நான் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும்போது எனக்குக் கிடைக்கும் ரொக்கப் பரிசுத் தொகையை சேமித்து வைப்பேன். மின்கழிவுகளைப் பொறுத்தவரை மைசூரு, விசாகப்பட்டனம், மும்பை போன்ற நகரங்களில் உள்ள எலக்ட்ரிக்கல் கடைகளில் இருந்து வாங்கிக்கொள்வேன்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது,
”உதாரணத்திற்கு பழுதடைந்த மிக்சியில் இருந்து மோட்டாரை எடுத்து ட்ரோன் உருவாக்க பயன்படுத்திக்கொள்வேன். அதேபோல் உடைந்த டிவியில் இருந்து சிப் மற்றும் ரெசிஸ்டார்களைப் பயன்படுத்தி ட்ரோன் உருவாக்குவேன். முன்வடிவம் எப்படி காட்சியளிக்கிறது என்பது பற்றி கவலைப்படுவதில்லை. தொழில்நுட்ப ரீதியாக சிறப்பாக இயங்கவேண்டும் என்பதுதான் முக்கியம்,” என்றார்.
கட்டுரை: THINK CHANGE INDIA | தகவ: எடெக்ஸ் லைவ், தி பெட்டர் இந்தியா