Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உலகம் முழுவதும் பிரபலடைந்துள்ள 5 மாற்று மருத்துவ சிகிச்சைமுறைகள்!

நேச்சுரோபதி, அக்குபஞ்சர், யுனானி என பல காலங்களாகவே உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பிரபலமாக இருந்து வரும் மாற்று மருத்துவ சிகிச்சைமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் பிரபலடைந்துள்ள 5 மாற்று மருத்துவ சிகிச்சைமுறைகள்!

Tuesday May 24, 2022 , 3 min Read

நவீன மருத்துவ வசதிகள் வருவதற்கு பல காலங்களுக்கு முன்பே மாற்று மருத்துவ முறைகள் உலகம் முழுவதும் பிரபலமாகவே இருந்து வருகின்றன. இந்திய துணைக்கண்டத்தில் கண்டறியப்பட்ட ஆயுர்வேத மருத்துவ முறைகள் 3,000 வருடங்கள் பழமையானது என நம்பப்படுகிறது.

ஆயுர்வேதத்தில் மூலிகைகள், உடற்பயிற்சி, தியானம், மசாஜ், சூரிய ஒளி படுதல், மூச்சுப் பயிற்சி என முழுமையான அணுகுமுறையுடன் உடல், மனது, ஆத்மா அனைத்தையும் சமன்படுத்துகிறது.

1

நீரிழிவு நோய், இதய் நோய், நரம்பியல் கோளாறுகள் என பல வகையான நோய்களுக்கு மக்கள் இந்த சிகிச்சை முறையைப் பயன்படுத்துகிறார்கள்.

இதுபோன்ற மாற்று மருத்துவ முறைகளில் மக்கள் தயக்கம் காட்டினாலும்கூட உலகம் முழுவதும் உள்ள பலர் முழுமையாக குணமடைய பாரம்பரிய மருத்துவ முறைகளையே விரும்பிப் பின்பற்றுகின்றனர்.

அந்த வகையில் மக்களுக்கு அதிக பலனளிக்ககூடிய 5 பாரம்பரிய மருத்துவ முறைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

நேச்சுரோபதி

நேச்சுரோபதி ஐரோப்பாவைச் சேர்ந்தது. உடம்பிற்கு தானாகவே நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளும் திறன் உண்டு. அந்தத் திறனில் குறைபாடு இருப்பதை உணர்த்துவதுதான் நோய் என்கிறது நேச்சுரோபதி.

இந்த மருத்துவ முறையில் நோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன் நிறுத்திக்கொள்ளப்படுவதில்லை. உடம்பு தானாகவே குணப்படுத்திக்கொள்ளும் என்று நம்பப்படுகிறது அல்லவா? அந்த இயற்கையான செயல்முறை மீட்டெடுக்கப்படுகிறது.

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் முழுவதும் நேச்சுரோபதி முறை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வட அமெரிக்காவில் இயற்கையின் குணப்படுத்தும் சக்தி, நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பது, எந்த பாதகமும் இல்லை என்பதை உறுதிசெய்வது, மருத்துவரை ஆசானாகக் கருதுவது, தனிநபருக்கு முழுமையான சிகிச்சையளிப்பது, தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய ஆறு கோட்பாடுகளில் அடிப்படையில் நேச்சுரோபதி பின்பற்றப்படுகிறது.

2

முழுமையான சிகிச்சை என்பது ஹோமியோபதி, அக்குபஞ்சர், மூலிகை மருத்துவம் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டது. அத்துடன் பயோ ரிசோனன்ஸ், ஓசோன் தெரபி, கொலோனிக் இரிகேஷன் போன்ற நவீன நடைமுறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

அக்குபஞ்சர்

பழமையான சீன மருத்துவ முறைகளிலிருந்து வந்ததுதான் அக்குபஞ்சர் சிகிச்சை.

இதில் சிகிச்சைக்காகவும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் மெல்லிய ஊசிகள் செலுத்தப்படும். இந்த செயல்முறையால் தோலுக்கு அடியில் இருக்கக்கூடிய உணர்வு நரம்புகளும் தசைகளும் தூண்டப்படும். இதன் காரணமாக வலியை போக்கக்கூடிய எண்டார்பின்களை உடல் உற்பத்தி செய்யும்.

அக்குபஞ்சரின் பயன் என்பது ஆற்றல் அல்லது Qi (கீ) என மருத்துவர்களும் நோயாளிகளும் நம்புகின்றனர். உடலில் இந்த கீ தடையின்றி செல்லமுடியாமல் போவதுதான் நோய் ஏற்படக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

Qi வெளியானால் உடல் ஆரோக்கியம் மீட்டெடுக்கப்படும். நாள்பட்ட வலி, பதட்டம் காரணமாக ஏற்படும் மைக்ரேன், தலைவலி போன்றவற்றிற்கு அக்குபஞ்சர் மூலம் நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாது மூட்டு வலி, பல் வலி, தூக்கமின்மை, பதட்டம், மன அழுத்தம், குழந்தையின்மை போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்கவும் அக்குபஞ்சர் பயன்படுத்தப்படுகிறது.

யுனானி மருத்துவம்

யுனானி மருத்துவ முறை கிரேக்கத்தில் கண்டறியப்பட்டு அதைத் தொடர்ந்து அரபு நாடுகளுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. யுனானி மருந்துகள் உடலும் மனதும் சமன்படுத்தப்படுவதை அடிப்படையாகக் கொண்டது.

காற்று, நீர், உட்கொள்ளும் உணவு போன்ற புற காரணிகள் இந்த சிகிச்சை முறையில் சமன்படுத்தப்படும். இது பலனளிக்காமல் போனால் இயற்கை மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படும். இதில் உணவுப் பழக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

திபெத் மருத்துவம்

திபெத் மருத்துவம் பழங்கால சிகிச்சை முறையாகும். 'வாழ்க்கையின் நோக்கமே மகிழ்ச்சிதான்’ என்கிற கோட்பாடு திபெத் மருத்துவத்தின் அடிப்படை. மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எனவே, இந்த சிகிச்சை முறையில் பிரச்சனை எதனால் ஏற்பட்டது என்கிற காரணம், அதாவது ஆணிவேர் என்ன என்பது ஆராய்ந்து சரிசெய்யப்படுகிறது.

Root Tantra: நாடித்துடிப்பு, நாக்கு, சிறுநீர் ஆகியவற்றைப் பார்த்து நோய் கண்டறியப்படுகிறது.

Exegetical Tantra: உடலியல், உடற்கூறியல், கருவியல், மனநோயியல் போன்றவற்றுடன் தொடர்புடையது.

Instructional Tantra: மகிழ்ச்சிக்கான சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடிய நோய்கள் மற்றும் அவற்றிற்கான சிகிச்சை தொடர்புடையது.

Subsequent Tantra: நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைகள், மருந்துகள் தயாரிப்பு முறை, மசாஜ் மூலம் உடலை தூய்மைப்படுத்துதல், மைனர் அறுவை சிகிச்சைகள் போன்றவை தொடர்புடையது.

3

ஜப்பானிய மருத்துவம்

ஜப்பானிய மருத்துவ முறை 1500 ஆண்டு காலம் பழமையானது. இதன் வேர் சீன மருத்துவம். மூலிகை ஃபார்முலேஷன்ஸ் அடிப்படையில் கிட்டத்தட்ட 148 கேம்போ (Kampo) ஃபார்முலாக்கள்

ஜப்பானிய மருத்துவத்தில் உள்ளன. இவற்றைப் பரிந்துரைப்பதற்கு அதிகாரப்பூர்வ அனுமதியும் உள்ளது.

சில மருத்துவர்கள் புற்றுநோய் சிகிச்சையின் கீமோதெரபியுடன் இந்த கேம்போ மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். இரைப்பைக் குடல் சம்பந்தப்பட நோய்களுக்கு இந்த மருத்துவ முறை பிரபலமாகியுள்ளது.

19ம் நூற்றாண்டில் நவீனமயமாக்கல் காரணமாக இந்த மருத்துவ முறை சற்றே புழக்கத்தில் இல்லாமல் போனது. ஆனால், 2006-ம் ஆண்டு Japan Society of Oriental Medicine (JSOM) மருத்துவர்களை கேம்போ ஸ்பெஷலிஸ்டுகளாக Japanese Board of Medical Specialities நியமித்த பிறகு இது மீண்டும் பிரபலமடைந்தது.

பல பல்கலைக்கழகங்கள் கேம்போ மருத்துவத்தில் ஆராய்ச்சியைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில்: சோஷியல் ஸ்டோரி குழு | தமிழில்: ஸ்ரீவித்யா