நம் பூமியை காக்க உதவும் 5 பசுமை பழக்கங்கள் இதோ!
பசுமையாளராக இருப்பது என்பது, நம்முடைய செயல்களின் தாக்கத்தை உணர்ந்திருப்பது, சிக்கனமாக இருப்பது மற்றும் வளங்களை முழுவதும் பயன்படுத்திக்கொள்வதாக அமைகிறது.
பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, மாசு அதிகரிப்பு ஆகியவை காரணமாக மேலும் ஆரோக்கியமான பசுமையான பூமியை உருவாக்க நம் பங்களிப்பை செய்ய வேண்டியிருக்கிறது. எளிமையான பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் இதை செய்யலாம். இந்த பழக்கங்கள் சுற்றுச்சூழல் நோக்கில் பலன் அளிப்பதோடு, பொருளாதார நோக்கிலும் பலன் அளிக்கும்.
பசுமையாளராக இருப்பது என்பது, நம்முடைய செயல்களின் தாக்கத்தை உணர்ந்திருப்பது மற்றும் சிக்கனமாக இருப்பது மற்றும் மறுசுழற்சி, மறுபயன்பாடு, மறு உருவாக்கம் மூலம் வளங்களை முழுவதும் பயன்படுத்திக்கொள்வதாக அமைகிறது.
நம் பூமியை காக்கும் செயலில் நாமும் பங்களிக்க உதவும் பழக்கங்கள்:
ஒரு முறை பிளாஸ்டிக்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் 9 சதவீதம் மட்டும் மறு சுழற்சி செய்யப்படுகின்றன. எஞ்சியவை அப்படியே வீசப்படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் பைகள் நம் சுற்றுப்புறத்தில் சிதறி, இறுதியில் கடலை அடைகின்றன. 2050 ம் ஆண்டில், கடல்களில் மீன்களை விட பிளாஸ்டிக் அதிகம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க காகிதப் பைகளை, துணிப் பைகளை பயன்படுத்தலாம்.
பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் ஸ்டிரா மற்றும் பிளாஸ்டிக் பேக்கெட்களை தவிர்ப்பது நலம்.
தண்ணீர்
மனித வாழ்க்கைக்கு தண்ணீர் மிக அவசியம் என்பதோடு, நம் பூமியில் நீர் வளம் குறைவாகவே உள்ளது. எனவே, இதை காப்பது அவசியம். நம் அன்றாட வாழ்வில் தண்ணீர் வீணாக்குவதை குறைத்துக்கொள்ளலாம். ஷவரில் குளிப்பதற்கு பதில் பக்கெட்டை பயன்படுத்தலாம்.
மேலும், ஆர்.ஓ அமைப்புகள் 70 சதவீத தண்ணீரை வீணாக்குகின்றன. எஞ்சிய தண்ணீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தலாம். மழை நீர் சேமிப்பை மேற்கொள்வதும் சிறந்த வழியாகும்.
கழிவு மேலாண்மை
கழிவுகளை தரம் பிரித்து நிர்வகிப்பது, கரியமில வாயு வெளிப்பாட்டை ஆண்டுக்கு கிலோவுக்கு 150-200 வரை குறைக்கும் எனக் கருதப்படுகிறது.
கழிவுகளை வீட்டிலேயே தரம் பிரிக்கலாம். சமூக அளவிலும் பிரிக்கலாம். மக்கக் கூடிய கழிவுகளுக்கு பச்சை நிற குப்பைத்தொட்டிகளையும், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நீல நிற குப்பைத்தொட்டி மற்றும் மக்காத குப்பைகளுக்கு மஞ்சள் நிற குப்பைத்தொட்டிகளை பயன்படுத்தலாம்.
ஒரு சில நாடுகளில் மருந்தகக் கழிவுகளுக்கு பழுப்பு நிற குப்பைத்தொட்டி மற்றும் இல்லத்தில் உள்ள ஆபத்தான கழிவுகளுக்கு கருப்பு நிற குப்பைத்தொட்டியும் பயன்படுத்தப்படுகிறது.
எரிசக்தி
வீட்டில் எல்.இ.டி பல்புகளை பயன்படுத்துவதி மின்சக்தியை சிக்கனமாக்கும். இவை வழக்கமான பல்புகளை விட 75 சதவீதம் குறைவாக மின்சக்தியை பயன்படுத்துகின்றன.
பயன்பாட்டில் இல்லாத போது மின்விசிறி மற்றும் ஏசி ஸ்விட்சை அணைக்கும் பழக்கம் கொள்ள வேண்டும். இயன்ற அளவு வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று வரலாம்.
பொது போக்குவரத்து அல்லது கூட்டு போக்குவரத்தை சேவையை பயன்படுத்தலாம். சூரிய மின்சக்தியையும் அதிகம் பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழலுக்கு நட்பான பைகள்
இன்றைய நுகர்வோர் உலகில், நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் குழப்பிக்கொள்வது இயல்பு. இயன்ற அளவு குறைவான பொருட்களை பயன்படுத்துவது நல்லது.
எந்த பொருட்களை வாங்குகிறீர்கள், எங்கிருந்து வாங்குகிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல கடைகள் மீண்டும் பயன்படுத்தும் முறையில் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றன. இது நிச்சயம் பூமியின் சுமையை குறைக்கும். இரண்டாம் முறை பயன்படுத்தும் பொருட்களையும் நாடலாம். மின் கழிவுகளையும் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஆங்கிலத்தில்: விரிந்தா கார்க் | தமிழில்: சைபர் சிம்மன்