Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

1 லட்சம் மூங்கில் டூத்பிரஷ் விற்பனை; 50 லட்சம் வருவாய்: சுற்றுச்சூழலைக் காக்கும் சென்னை நண்பர்கள்!

டூத்பிரஷ் கழிவுகள் அதிகளவில் இருப்பதைக் கவனித்த கார்த்திக் சோலை, அர்ஜுன், ஹரீஷ் கந்தன் ஆகிய நண்பர்கள் மூவரும் Terra நிறுவனத்தை நிறுவி மூங்கில் டூத்பிரஷ் மட்டுமல்லாது சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகிறார்கள்.

1 லட்சம் மூங்கில் டூத்பிரஷ் விற்பனை; 50 லட்சம் வருவாய்: சுற்றுச்சூழலைக் காக்கும் சென்னை நண்பர்கள்!

Wednesday September 01, 2021 , 2 min Read

கார்த்திக் சோலை, அர்ஜுன், ஹரீஷ் கந்தன் மூவரும் சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள். தொழில் தொடங்கி மில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டவேண்டும் என்பதே இவர்களது கனவாக இருந்தது.


2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற வகையில் உதவினார்கள். இந்த நண்பர்கள் மூவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்கள்.

1

அத்தகைய நலப்பணிகளில் ஒரு பகுதியாக இவர்கள் நகரைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள். அந்த சமயத்தில்தான் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், கப் என பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதை கவனித்தார்கள்.


அதிலும், குறிப்பாக டூத்பிரஷ் அதிகளவில் கழிவுகளாகக் கொட்டப்படுவதைக் கண்ட இவர்கள் இதற்குத் தீர்வுகாணவேண்டும் என யோசித்தார்கள்.

“பிளாஸ்டிக் டூத்பிரஷ் பயன்பாடு அதிகரித்து வருவதால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாணவேண்டும் என முடிவு செய்தோம்,” என்கிறார் Terra சிஇஓ கார்த்திக்.

இந்த நண்பர்கள் ஒன்றிணைந்து 2018-ம் ஆண்டு Terrabrush தொடங்கினார்கள். இதன் மூலம் மூங்கில் டூத்பிரஷ் விற்பனை செய்யத் தொடங்கினார்கள்.


தற்போது Terra என்றழைக்கப்படும் இந்த ஸ்டார்ட் அப் மறுசுழற்சிக்கும் மறுபயன்பாட்டிற்கும் உகந்த பொருட்களை விற்பனை செய்து வருகிறது. சென்னையைத் தலைமையகமாகக் கொண்டுள்ள இந்த ஸ்டார்ட் அப் 24 ஊழியர்கள் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள்

டூத்பிரஷ் தயாரிப்புடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் விரைவில் பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்ய ஆரம்பித்தது.

“நாங்கள் மூங்கில் டூத்பிரஷ் விற்பனையை முதலில் தொடங்கினோம். பின்னர் நாக்கை சுத்தம் செய்யும் கிளீனர், டூத் பவுடர், டூத்பேஸ்ட் போன்றவற்றை அறிமுகப்படுத்தினோம். இதுதவிர சீப்பு, பைகள், செம்பு பாட்டில் போன்ற தயாரிப்புகளை இணைத்துக்கொண்டோம்,” என்கிறார் Terra சிஓஓ ஹரீஷ்.

பேக்கேஜ் செய்யும்போதும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை. பேப்பர் கொண்டே பேக்கேஜ் செய்யப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். டூத்பேஸ்ட், டூத் பவுடர் போன்றவை கண்ணாடி ஜார்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

வாய் சுத்தப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இவர்களது தயாரிப்பு ஒன்றின் விலை 299 ரூபாயாக உள்ளது. 4 டூத்பிரஷ், ஆக்டிவேடட் சார்கோல் பவுடர், நாக்கை சுத்தப்படுத்துவதற்கான செம்பு கிளீனர், மூலிகை டூத்பேஸ்ட் போன்றவை அடங்கிய காம்போ தொகுப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவைதவிர சீப்பு, செம்பு பாட்டில்கள், மரத்தால் ஆன காட்டன் ஸ்வாப், மறுபயன்பாட்டிற்கு உகந்த மெட்டல் ஸ்ட்ரா, காட்டன் பைகள், ஏப்ரான் போன்ற தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

Terra டூத்பிரஷ் தயாரிப்புகள் வலைதளம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பெங்களூருவில் உள்ள 300 சில்லறை வர்த்தக ஸ்டோர் மூலமாகவும் அமேசான் தளம் மூலமாகவும் விற்பனையாகின்றன.

ஆஃப்லைன் விற்பனையைக் காட்டிலும் வலைதளம் மற்றும் அமேசான் மூலமாக ஆன்லைனில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக அர்ஜுன் பகிர்ந்துகொண்டார்.


வட இந்தியாவில் உள்ள மூன்று விற்பனையாளர்களிடமிருந்து Terra சில பொருட்களை வாங்குகிறது. இவற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படுகிறது.

”ஒவ்வொரு காலாண்டிலும் நாங்கள் ஒன்று முதல் இரண்டு லட்சம் டூத்பிரஷ் வரை விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு காலாண்டிலும் 50 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுகிறோம்,” என்கிறார் அர்ஜுன்.

தற்போது சுயநிதியில் இயங்கி வரும் இந்நிறுவனம் 2021-ம் ஆண்டின் இறுதியில் சீட் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

2

சவால்கள்

நண்பர்கள் மூவருக்கும் நிதி மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துள்ளது.

”கல்லூரிப் படிப்பை முடித்த கையோட வணிக முயற்சியில் இறங்கியதால் யாரும் எங்களுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை. எங்கள் முயற்சி ஏற்படுத்த இருக்கும் தாக்கத்தை எடுத்துச் சொல்லி மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பது மிகப்பெரிய சிக்கலாக இருந்தது,” என்கிறார் ஹரீஷ்.

சமூக வலைதள விளம்பரங்கள் மூலம் சரியான வாடிக்கையாளர்களைச் சென்றடைவதும் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.

வருங்காலத் திட்டங்கள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை எத்தனையோ பிராண்டுகள் வழங்கினாலும் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே வெற்றியடைகின்றன.

“ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு மில்லியன் டாலர் டர்ன்ஓவர் கொண்டிருக்கும் நிறுவனமாக Terra வெற்றிகரமாக செயல்படவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்று  கார்த்திக் குறிப்பிடுகிறார்.

ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா