பணியிடத்தில் புரொமோஷன் வேணுமா? - நீஙகள் அறிய வேண்டிய 5 ‘தடை’களும் தீர்வும்!
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாமே பதவி உயர்வுக்கு அவசியம் என்றாலும், 5 மறைமுக காரணங்களே உங்களின் புரொமோஷனுக்கு தடையாக இருக்கக் கூடும்.
‘நன்றாகத்தான் வேலை செய்கிறோம். ஆனால், பதவி உயர்வு மட்டும் கைகூடவில்லையே!’ என்று யோசிக்கிறீர்களா? உங்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் இந்த 5 காரணங்களைக் கண்டு கொள்ளுங்கள். அதை லாவகமாக சமாளித்துவிட்டால் உங்களுக்கும் நிச்சயம் கிடைக்கும் பதவி உயர்வு.
வேலையில் முன்னேற்றம் காண்பது போட்டாப் போட்டி உலகத்தில் மிகப் பெரிய சவால். அதில் பதவி உயர்வு என்பது குதிரைக் கொம்பு என்றாலும் மிகையல்ல.
நீங்கள், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அலுவல்கள் அனைத்தையும் நேர்த்தியாக செய்பவராக இருக்கலாம்; எல்லாவற்றையும் சரியாகச் செய்பவராக இருக்கலாம்; நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வேலைகளை முடித்தும் கொடுக்கலாம். உங்கள் பணி தரமாக இருக்கலாம். ஏன், சொல்லப்போனால் என்ன எதிர்பார்த்தார்களோ அதைவிட ஒருபடி விஞ்சி நிற்கலாம். ஆனாலும் பதவி உயர்வு என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது என வருந்துகிறீர்களா?
இதையே எண்ணி எண்ணி மூளையை கசக்குகிறீர்களா? அப்போது புலப்படும் காரணங்கள் எதுவுமே சரியானது அல்ல. உண்மையில் நீங்கள் நினைக்கும் வெளிப்படையான காரணிகள் அல்ல, உங்களுக்கான பதவி உயர்வு தட்டிப்போவதற்கான காரணம்.
கடின உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாமே பதவி உயர்வுக்கு அவசியமானது என்றாலும், சில மறைமுகக் காரணங்கள் தான் உங்களை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கும். அந்த மறைமுகக் காரணிகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப உங்களை நீங்களே தகவமைத்துக் கொள்வதே இந்த 2024-ஆம் ஆண்டு நீங்கள் பதவி உயர்வு பெறுவதற்கான சூழலை உருவாக்கித் தரும்.
அந்த வகையில், 5 முக்கியமான காரணிகளை நாங்கள் இங்கே பட்டியலிடுகிறோம். இவற்றை சரிசெய்யுங்கள். இந்த உத்திகள் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க இருந்த தடையை அப்புறப்படுத்தும்.
1. உங்கள் இருப்பை உறுதி செய்யுங்கள்
நாம் நேர்த்தியாக வேலை செய்யலாம். ஆனால், நாம் செய்யும் வேலை நமக்காக எங்கும் பேசாது. நாம்தான் நமது இருப்பை உறுதி செய்ய வேண்டும். நமது சாதனைகள் கவனிக்கப்படாவிட்டால் நமது பதவி உயர்வு பரிசீலிக்கப்படாது. ஆகையால், பணிக்கான பங்களிப்பை அவ்வப்போது மேலிடத்துக்கு முறையாக தெரிவியுங்கள். அலுவலகத்தில் முக்கிய முடிவு எடுப்பவர்கள் உங்களின் பணியைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வகையில் பணியில் உங்களின் திறன் வெளிப்பாட்டை முறையாக வெளிப்படுத்துங்கள்.
நம் இருப்பை எப்படி தெரிவிப்பது?
- சீரான அறிவிப்புகள்: உங்களது பணியில் நீங்கள் செய்யும் சாதனைகள், அதில் நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு மேம்பாடுகளையும் சீரான இடைவெளியில் மேலிடத்துக்கு தெரியப்படுத்திக் கொண்டே இருங்கள். அலுவலக ஆலோசனைக் கூட்டங்களில் உங்களைப் பற்றி பேசுங்கள். இன்னொன்று, இ-மெயில் மூலம் உங்களின் பணி மேம்பாட்டுத் திறன்களை, சாதனைகளை ஆவணப்படுத்துங்கள்.
- நெட்வொர்கிங்: உங்கள் அலுவலகத்தில் பல்வேறு துறைகள் இருக்கலாம். அனைத்து துறைகளிலும் முடிந்த வரையில் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
- களம் காணுங்கள்: அலுவலகம் சார்ந்த பொது நிகழ்வுகளில் தாமாக முன்வந்து உங்களை பிரதிநிதித்துவம் செய்யுங்கள். எப்போதெல்லாம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதை தவறாமல் செய்யுங்கள்.
2. மென்திறன் மேம்பாட்டுக்கான உத்திகள்
- பயிலரங்குகள்: அலுவல் சார்ந்த பயிலரங்குகளில் கலந்து கொள்ளுங்கள். உங்களது மென்திறனை மேம்ப்படுத்த அது உதவும். ஓர் ஆசான் இருக்கட்டும்! பணியிடத்தில் உங்களுக்கென ஒரு வழிகாட்டியை உருவாக்கிக் கொள்ளுங்கள். அது உங்களுடைய தனிப்பட்ட திறன்களை மேம்படுத்த உதவும்.
- சுய பரிசோதனை: அவ்வப்போது உங்களுடைய பலம், பலவீனங்களை சுய பரிசோதனை செய்யுங்கள். அதில் எங்கெல்லாம் மேம்பாடு தேவை என்பதை உணர்ந்து கொண்டு சுய முன்னேற்றத்துக்கு முற்படுங்கள்.
3. மாற்றத்தை எதிர்க்காதீர்கள்!
இன்றைய வேகமாக மாறும் உலகில் பணியிடத்தில் உருவாகும் சூழல்களுக்கு தேவைக்கேற்ப உங்களை தகவமைத்துக் கொள்ள தயாராகா இருங்கள். புதிய தொழில்நுட்பங்கள், நடைமுறைகள், அலுவலக கட்டமைப்பு என எதில் மாற்றம் வந்தாலும் அதில் உங்களை சுலபமாகப் பொருத்திக் கொண்டு, அதற்கேற்ப புத்தாக்க சிந்தனைகளை புகுத்தத் தயாராக இருங்கள்.
மாற்றங்களை தழுவிக் கொள்ளுதலும், சூழல்களுக்கு உங்களை ஒப்புக் கொடுப்பதும், கற்றலுக்கு தயாராக இருப்பதும் உங்களது பதவி உயர்வை உறுதி செய்யும்.
மாற்றங்களை ஸ்வீகரித்துக் கொள்வது எப்படி?
- தொடர்ச்சியான கற்றல்: தொழில் சார்ந்த மாற்றங்களை அறிந்து கொள்ளத் தவறாதீர்கள். தொழிலில் தற்போதைய போக்கு என்னவாக இருக்கிறது, புதிய தொழில்நுட்பங்கள் என்னவென்பதை அறிந்து, தேவைப்பட்டால் அது சார்ந்த சான்றிதழ் படிப்புகளைப் படியுங்கள்.
- நேர்மறை சிந்தனை: மாற்றங்களை நேர்மறை சிந்தனையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகளை அலசி ஆராய தயாராக இருங்கள்.
- கருத்துகளைப் பெறுங்கள்: பணியில் மேற்கொள்ளப்பட்ட புதிய மாற்றங்களை நீங்கள் எவ்வாறு உள்வாங்கி பங்களிப்பு செய்கிறீர்கள் என்பதற்கான கருத்துகளைக் கேட்டுப் பெறுங்கள்.
4. சுய பிம்பத்தை கட்டமையுங்கள்
சந்தை பொருட்களுக்கு பிராண்டிங் எப்படி முக்கியமோ, அதேபோல், அலுவலகத்தில் உங்களுக்கான பிராண்டிங்கை (சுய பிம்பத்தை) கட்டமையுங்கள். உங்களைப் பற்றி வலுவான பிம்பத்தை உருவாக்குங்கள். அதற்கு நீங்கள் உங்கள் திறமைகளை பட்டியலிட்டு காட்சிப்படுத்த வேண்டும். குழுவில் மற்றவர்களைவிட நீங்களே எங்கே தனித்து நிற்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டி அதுதான் உங்களுடைய அடையாளம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள்.
- பிம்ப கட்டமைப்புக்கான உத்திகள்: சமூகத்துக்கு சொல்லுங்கள்: ‘லிங்க்ட் இன்’ போன்ற உங்களுடைய தொழில் சார்ந்த ப்ரொஃபைல்களில் உங்களைப் பற்றிய அப்டேட்களைப் பகிர்ந்துகொண்டே இருங்கள்.
- சிந்தனைகளைப் பதிவு செய்யுங்கள்: உங்கள் தொழில் சார்ந்த கட்டுரைகள், ஆக்கங்களை வலைதளங்கள், பொது விவாதங்களில் முன் வையுங்கள்.
- தொழில்முறை அடையாளம்: உங்கள் தொழில் வளர்ச்சிப் பாதைக்குத் தேவையான தொழில்முறை தோற்றத்தை, பழக்கங்களை பின்பற்றுங்கள்.
5. முன்முயற்சிகள் தேவை
பதவி உயர்வு பெறுபவர்கள் தங்களின் பணி வரம்பையும் மீறி சில முன்முயற்சிகளை எடுப்பவர்களாக இருப்பார்கள். உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதை மட்டும் நீங்கள் செய்வீர்களானால் நீங்கள் தனித்து மிளிர மாட்டீர்கள். ஆகையால் எங்கெல்லாம் மேம்படுத்துதல் தேவை எனத் தெரிகிறதோ, அங்கெல்லாம் அதைச் செய்யுங்கள்.
கூடுதல் பொறுப்புகளை ஏற்றுச் செய்யுங்கள். உங்களிடம் கேட்கப்படாவிட்டாலும் கூட அதை ஏற்றுச் செய்யுங்கள். அலுவலக சிக்கல்களுக்கு நீங்கள் தீர்வுகளை முன்மொழியுங்கள்.
முன்முயற்சி எடுப்பதற்கான உத்திகள்:
- தீர்வு சொல்வதில் முந்துக்கள்: உங்கள் குழுவிலோ அல்லது உங்களது நிறுவனத்திலோ இருக்கும் சிக்கல்களைத் தீர்க்க ஆலோசனைகளை வழங்க முன்வாருங்கள்
- புதிய திட்டங்களுக்கு தன்முனைப்பு காட்டுங்கள்: புதிய திட்டங்களை கையில் எடுக்க தன்முனைப்பு காட்டுங்கள். வழக்கமான பணிகளைத் தாண்டி அதைச் செய்யுங்கள்.
- பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்: குழுவில் தலைமை தாங்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள், உங்களது தலைமைப் பண்பை வெளிப்படுத்துங்கள்.
பதவி உயர்வு பெறுதல் என்பது வெறும் பணிக்கப்பட்ட வேலைகளை திறம்படச் செய்வதைத் தாண்டியும் நாம் காட்டும் தன்முனைப்புகளால், திறமைகளாலேயே வந்து சேரும்.
ஆக, கண்ணுக்கு வெளிப்படையாக தெரியாத நம் இருப்பை உறுதி செய்தல், மென் திறன்களை வளர்த்து பறைசாற்றுதல், மாற்றங்களுக்கு நம்மை தகவமைத்துக் கொள்ளுதல், சுயபிம்பத்தை கட்டி எழுப்புதல், தன்முனைப்புடன் செயல்படுதல், பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று கையாளுதல் ஆகியனவே நம் பணியில் வளர்ச்சியை உறுதி செய்யும்.
இவற்றை அடையாளம் கண்டு நாம் நம்மை மேம்படுத்தினால் பதவி உயர்வு கைகூடும். 2024-ல் உங்கள் பணி நிமித்தமான கனவுகள் கைகூடும்.
கடின உழைப்பு மட்டுமல்ல புத்திசாலித்தனமான உழைப்புதான் உங்களை உங்கள் நிறுவனத்தில் முக்கியமான இடத்தில் கொண்டு சேர்க்கும். உங்களுக்கும் வெற்றிகளைத் தேடித் தரும்.
‘அதிக சம்பளம் வாங்கும் ‘பாஸ்’கள் பலர் புத்திசாலிகளாக இருப்பதில்லை’ - ஆய்வில் ஆச்சரிய முடிவு!
Edited by Induja Raghunathan