Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சருமத்திற்கு இதமான இயற்கைப் பொருட்கள்: ரசாயனமில்லா ப்ராண்ட் தொடங்கிய அர்ச்சனா கார்த்திகேயன்!

கரூரைச் சேர்ந்த அர்ச்சனா கார்த்திகேயன் Thaai Herbals என்கிற பிராண்ட் அறிமுகப்படுத்தி ரசாயனங்கள் இல்லாத இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களை விற்பனை செய்து 5 லட்ச ரூபாய் வரை ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளார்.

சருமத்திற்கு இதமான இயற்கைப் பொருட்கள்: ரசாயனமில்லா ப்ராண்ட் தொடங்கிய அர்ச்சனா கார்த்திகேயன்!

Friday July 09, 2021 , 5 min Read

இன்றைய இணைய உலகத்தில் மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பது எளிதாகிவிட்டது. மக்களின் மனதில் இடத்தைப் பிடிக்க பிரபல பிராண்டுகள் நான், நீ என போட்டாபோட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. மக்களைச் சென்றடையும் மார்கம் எளிதாக எளிதாக போட்டியும் அதிகரித்துக்கொண்டே போகிறது.


நாம் உட்கொள்ளும் உணவாகட்டும், வீட்டிற்குப் பயன்படுத்தும் பொருட்கள் ஆகட்டும், ரசாயனங்கள் என்பது தவிர்க்கமுடியாதாகிவிட்டது. காலையில் எழுந்ததும் கையில் எடுக்கும் பேஸ்ட் தொடங்கி நாள் முழுவதும் நாம் பயன்படுத்தும் அனைத்திலும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது பெரும்பாலானோருக்குத் தெரியும். இருந்தாலும் என்ன செய்வது? மாற்றுப் பொருட்கள் எளிதாகக் கிடைப்பதில்லையே?


நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது. தேவையும் அதிகம் உள்ளது. ஆனால் அசலான, நம்பகமான இயற்கைத் தயாரிப்புகள் அதிகரித்துள்ள தேவையைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு இல்லை.

1

இதில் முரண் என்னவென்றால் ரசாயனங்கள் கலந்த பிரபல பிராண்டுகளை சர்வ சாதாரணமாக வாங்கிப் பழகிப்போன நுகர்வோர், இயற்கைப் பொருட்களைத் தயாரிப்பவர்களிடம் எத்தனை கேள்விகள் கேட்பார்கள்.


உண்மையிலேயே இதில் ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை? இயற்கையானதுதானா? இத்தனை வருடங்களாக ரசாயனங்கள் கலக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தியும் எந்தப் பிரச்சனையும் வரவில்லை, நான் ஏன் மாறவேண்டும்? புதிதாக இதைப் பயன்படுத்துவதால் எனக்கு எந்தப் பிரச்சனையும் வராதா?


நம்மைச் சுற்றி அதிகளவில் இருக்கும் இயற்கைப் பொருட்களை வீணாக்கிவிட்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருட்களை தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்திப் பழகிவிட்டோம். ஆனால் விவசாயப் பின்னணி கொண்ட அர்ச்சனா இயற்கைப் பொருட்களைக் கண்ணெதிரே வைத்துக்கொண்டு ரசாயனங்கள் கலக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துகிறோமே என்று ஆதங்கப்பட்டுள்ளார்.


இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடாக முதல் கட்டமாக தனிப்பட்ட முறையில் அவர் இயற்கைப் பொருட்களுக்கு மாறியுள்ளார். உணவுப் பொருட்களை இயற்கையாக விளைவித்து சாப்பிடுவதுபோன்றே சருமத்திற்கும் வீட்டு உபயோகத்திற்கும் முற்றிலும் இயற்கைப் பொருட்களையே பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். இந்த மாற்றம் அவருக்குப் பிடித்திருந்தது.


பின்னர், இதன் நன்மைகளை நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் புரியவைத்துள்ளார். ஒரு கட்டத்தில் இதையே வணிகமாவும் மாற்றியுள்ளார். அர்ச்சனா Thaai Herbals என்கிற பிராண்ட் அறிமுகப்படுத்தி ரசாயனங்களில்லாத இயற்கையான சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

ஆரம்ப நாட்கள்

கரூரில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ச்சனா கார்த்திகேயன். எம்.காம் முடித்துள்ளார். சிஏ இன்டர் படிப்பை இடைநிறுத்தம் செய்து விட்டார்.

இவருக்குத் திருமணம் முடிந்தது. குழந்தை பிறந்து 46 நாட்களில் தொழில் தொடங்கியுள்ளார் அர்ச்சனா.

“குழந்தை பிறந்து ஒரு மாசம் இருக்கும். எங்கப்பா திடீர்ன்னு இறந்துட்டாரு. எங்கம்மாவும் என்கூட பிறந்த சகோதரிக்கும் ஆதரவில்லாம போச்சு. பணம் இல்லாம கஷ்டப்பட்டோம். இந்த நெருக்கடியான சூழல்ல பிறந்ததுதான் தொழில் யோசனை,” என்று பகிர்ந்துகொண்டார் அர்ச்சனா.

இயற்கைப் பாதைக்கு இட்டுச் சென்ற சம்பவம்

2017-ல் பெங்களூருல ரசாயனங்கள் கலந்ததால பெல்லந்தூர் ஏரியில தீப்பிடிச்ச சம்பவம் என்னை ரொம்பவே பாதிச்சுது. இப்பவும் என்கிட்ட அந்த பேப்பர் கட்டிங் இருக்கு. இந்த சம்பவத்துக்கு அப்புறம்தான் கிச்சன் கழிவுகள் வெச்சு பயோஎன்சைம் ஸ்டார்ட் பண்ணேன். முதல்ல என்னோட வாழ்க்கை முறையில மாற்றத்தை கொண்டு வந்தேன். ஆர்கானிக் மேல அப்பதான் ஆசை வந்துது,” என்கிறார்.

thaai products

வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் தயாரிப்பில் என்னென்ன மூலப்பொருட்கள் இருக்கின்றன என்பதை இணையம் மூலம் ஆராய்ந்துள்ளார்.

“நாங்க அரிசி, காய்கறி என எல்லாமே எங்க நிலத்துல விளையறதையே சாப்பிடறோம்.  சாப்பிடற உணவுல இவ்ளோ கவனமா இருக்கும்போது மத்த பொருட்களையும் கவனமா பயன்படுத்தணும்னு யோசிச்சேன். ஸ்கின் கேர் பத்தி நிறைய தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்,” என்றார்.

Thaai Herbals தயாரிப்புகளுக்குத் தேவையான பெரும்பாலான மூலப்பொருட்கள் இவர்களது நிலத்தில் இருந்தே பெறப்படுகின்றன. சமையலறைக் கழிவுகள் கொண்டு இவர் தயாரிக்கும் பயோ என்சைம் பொருட்களை தற்போது காஸ்மெடிக் தயாரிப்புகளான பிரசர்வேடிவாகப் பயன்படுத்தி வருகிறார்.


அர்ச்சனா தனது செயல்பாடுகளை வர்த்தக முயற்சியாக எடுத்துச்செல்ல, ‘ஸ்கில் இந்தியா’ என்கிற திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின் மூலம் சருமப் பராமரிப்பு குறித்து முறையாகப் படித்துள்ளார்.

இப்படி ரசாயனங்கள் இல்லாத இயற்கைப் பொருட்களுக்கான ஒரு தனிநபரின் தேடல் வணிகமாக மாறியுள்ளது. அதன் காரணமாக இந்த மாற்றம் தனிநபருடன் நின்றுவிடாமல் பலரைச் சென்றடைந்துள்ளது.

பிரிவைத் தேர்வு செய்யக் காரணம்?

அர்ச்சனாவிற்கு சொந்தமான நிலத்தில் டன் கணக்கில் மஞ்சள் விளைவிக்கிக்கப்படுகிறது. இவற்றை அப்படியே விற்பனை செய்வதைக் காட்டிலும் சிறியளவில் மதிப்பு கூட்டி தயாரித்தால் லாபம் கிடைக்கும் என யோசித்துள்ளார்.

“நம்மளால என்ன பண்ண முடியும்? எதை வெச்சு தொழில் பண்ணமுடியும்? இப்படி யோசிச்சப்ப அக்ரி பிராடக்ஸ்தான் கையில இருந்தது. அதை அப்படியே விற்பனை செய்யறதால பெரிசா லாபம் கிடைக்கலை. அதுல மதிப்பு கூட்டினா லாபம் கிடைக்கும்னு யோசிச்சேன்,” என்கிறார் அர்ச்சனா.

விலை, முதலீடு மற்றும் லாபம்

Thaai Herbals தயாரிப்புகள் 100 ரூபாய் முதல் 600 என்கிற விலை வரம்பில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தியா முழுவதும் ஷிப்பிங் செய்யப்படுகிறது.

அர்ச்சனா 70,000 ரூபாய் முதலீட்டில் இந்த வணிகத்தைத் தொடங்கியுள்ளார். இன்றளவும் Thaai Herbals சுயநிதியில் இயங்கி வருகிறது. ஆண்டு விற்பனை அளவு 10 லட்ச ரூபாயாக உள்ளது. ஆண்டு வருவாய் 5 லட்ச ரூபாய் வரை ஈட்டியுள்ளார்.

பிராண்ட் அறிமுகம் மற்றும் முன்னேற்பாடுகள்

வழக்கமாக ஓரு பிராண்ட் பெயர் புதிதாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு அதைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தப்படும். ஆனால் அர்ச்சனா எல்லா விதமான முன்னேற்பாடுகளையும் செய்த பிறகே Thaai Herbals பிராண்டை முறையாக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

”பிராண்ட் அறிமுகப்படுத்தற அன்னிக்கே நிறைய வாடிக்கையாளர் வரணும். அதிக விற்பனை இருக்கணும். இதுதான் என்னோட ஆசை. ஏன்னா முதல் நாள் கிடைக்கற இந்த உற்சாகம்தான் தொடர்ந்து செயல்பட ஊக்குவிக்கும் அப்படிங்கறது என்னோட நம்பிக்கை,” என்று நினைவுகூர்ந்தார்.

இதனால் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே லோகோ டிசைன், ட்ரேட்மார்க், ஜிஎஸ்டி தொடர்பான முன்னேற்பாடுகள் என அனைத்தையும் முறையாக செய்து முடித்திருந்தார். அதேபோல் அறிமுகப்படுத்துவதற்கு முன்பே விளம்பரப்படுத்தியுள்ளார்.


இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சோஷியல் மீடியாக்களில் 2020-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி Thaai Herbals அறிமுகப்படுத்தியுள்ளார். நலங்கு மாவு, எண்ணெய் போன்ற இரண்டு மூன்று தயாரிப்புகளை மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளார். அன்றைய தினம் இலவசமாக டோர் டெலிவரி செய்துள்ளார்.

முதல் நாள் 100 வாடிக்கையாளர்கள் அர்ச்சனாவின் தயாரிப்புகளை வாங்கியுள்ளனர். 10,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
3

தயாரிப்பு மற்றும் விரிவாக்கம்

Thaai Herbals தயாரிப்புகள் குழந்தைகள், பெரியவர்கள், ஆண், பெண் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. வெவ்வேறு சருமத்திற்கு ஏற்றவாறு தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ற தயாரிப்புகளும் வழங்கப்படுகின்றன.


அர்ச்சனா தனது தயாரிப்புகளில் பயோ என்சைம் பயன்படுத்துவதால் அது பிரசர்வேடிவாக செயல்படுகிறது. இதனால் தயாரிப்புகள் ஒரு வருடம் வரை கெட்டுப்போவதில்லை.

“ஹேர் ஆயில் கொடுக்கும்போது பொடுகு பிரச்சனை இருக்குன்னு சொன்னாங்க. சிலர் இளநரைக்கு தீர்வு வேணும்னு கேட்டாங்க. எண்ணெய் யூஸ் பண்ணமாட்டோம்னு சொன்ன சிலருக்கு சீரம் தயாரிச்சு கொடுத்தோம். இப்படி வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து கேட்கும்போது அதுகுறித்து தேடலும் ஆய்வும் தொடங்கிச்சு. இப்படியே இன்னிக்கு 80-க்கும் மேல தயாரிப்புகளை விற்பனை செய்யறோம்,” என்கிறார்.

குழந்தைகளுக்கான பராமரிப்புப் பொருட்கள், கைகளால் தயாரிக்கப்படும் சோப்பு, ஷாம்பூ, ஆர்கானிக் ஃபேஷியல் கிட் என நீள்கிறது இவரது தயாரிப்புப் பட்டியல்.


ஸ்டோர் மூலம் விற்பனை செய்யவில்லை என்பதால் வருவாயை அதிகரிக்கச் செய்ய ரீசெல்லர்ஸ், ரீபிராண்டிங், டிஸ்ட்ரிபியூடர்ஸ் என கவனம் செலுத்தியுள்ளார்.

“ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் பெண்களை ரொம்பவே கவர்ந்துது. நிறைய பெண்கள் முதலீடு இல்லாத ரீசெல்லிங் முறையில ஆர்வம் காட்டினாங்க. என்னோட பிராண்டை அவங்க புரோமோட் செய்வாங்க. இதனால என் பிராண்ட் நல்லா ரீச் ஆச்சு. விற்பனை அதிகரிச்சுது. இந்தப் பெண்களோட வருமானமும் அதிகரிச்சுது,” என்கிறார் அர்ச்சனா.

இதுதவிர பல மாவட்டங்களில் ஸ்டால் அமைத்து விற்பனை செய்கிறார். ஒரு மாதத்திற்கு குறைந்தது 2-3 ஸ்டால்கள் ஏற்பாடு செய்கிறார். கோவை, திருச்சி, ஈரோடு போன்ற பகுதிகளில் ஸ்டால் அமைத்து விற்பனை செய்துள்ளார்.


7-8 மாதங்களுக்கு முன்பு சொந்த வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அமேசானிலும் பதிவு செய்துள்ளார். அர்ச்சனாவின் Thaai Herbals தயாரிப்புகள் ஆரம்பத்தில் நட்பு வட்டத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தரமான தயாரிப்புகளாக இருப்பதால் திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் மேலும் பலருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இப்படியே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

2

தொழில் விரிவடைந்து வரும் நிலையில் தற்போது அர்ச்சனாவின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வணிக செயல்பாடுகளில் பங்களித்து வருகிறார்கள். டிசைனிங், டிஜிட்டல் மார்கெட்டிங் போன்ற செயல்பாடுகள் அவுட்சோர்ஸ் செய்யப்படுகின்றன.

சவால்கள்

“குழந்தை குறைப்பிரசவத்தில் எட்டு மாசத்துல பிறந்தான். அவன் பிறந்த ஒரு மாசத்துல எங்கப்பா இறந்துட்டாரு. கையிருப்பு பணம் எதுவும் இல்லை. இப்படி தொழில் தொடங்கியதே சவாலான சூழல்லதான்,” என்று பகிர்ந்துகொண்டார் அர்ச்சனா.

கொரோனா சமயத்தில் கூரியர் சேவை இல்லாததால் டெலிவரி தடைபட்டது. ஆனால் இதை சமாளிக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவது தெரிந்ததும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்ள பரிந்துரைத்துள்ளார். தள்ளுபடியும் அறிவித்துள்ளார். இதனால் ஊரடங்கு சமயத்தில் நடக்கவேண்டிய டெலிவரிகள் முன்னரே திட்டமிடப்பட்டுள்ளது.

வருங்காலத் திட்டங்கள்

அர்ச்சனா அடுத்தடுத்த தயாரிப்புகளை திட்டமிட்டு வருகிறார். டால்க்-ஃப்ரீ பவுடர் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். காட்டன் சானிட்டரி நாப்கின் தயாரிப்பை அறிமுகப்படுத்த பருத்தி விளைவிக்கிறார்.


மஞ்சள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுவதால் இதைக் கொண்டு சருமப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்கக்கூடிய எசென்ஷியல் ஆயில் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

வரும் நாட்களில் உணவுப் பொருட்களிலும் கவனம் செலுத்தவும் ஏற்றுமதியில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளார்.


கரூரில் கடை திறக்கவேண்டும் என்பதும் தொழிற்சாலை அமைக்கவேண்டும் என்பதும் இவரது கனவாக உள்ளது. தொழில்முனைவு, ரசாயனங்களற்ற வாழ்க்கை முறை, கழிவு மேலாண்மை, தற்சார்பு போன்றவை குறித்து கல்லூரிகளில் உரையாற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த்தி வருகிறார் அர்ச்சனா.

”வருங்காலம் ஆர்கானிக் சார்ந்ததாகதான் இருக்கும். ஆர்கானிக் பிரிவுல செயல்பட்டா நிச்சயம் சஸ்டெயின் பண்ணலாம்,” என்கிற நம்பிக்கை வரிகளை உதிர்க்கிறார் அர்ச்சனா.