5 லட்சம் முதலீடு; 5 கோடி வருவாய் – ‘வேர்கடலை’ வைத்து வளர்ச்சி அடைந்த நண்பர்கள்!

சூரத் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஆறு பேர் ஒன்றிணைந்து தொடங்கிய Alpino என்கிற ஸ்டார்ட் அப் பீனட் பட்டர் விற்பனையைத் தொடங்கி மின்வணிக தளங்களில் பிரபலமடைந்துள்ளது.
27 CLAPS
0

பிரியங்க் வோரா, மிலன் கோபானி, ஹிரண் ஷேத்தா, மகத்வா ஷேத்தா, உமேஷ் கஜேரா, சேத்தன் கனானி ஆகிய ஆறு பேரும் சிறு வயது நண்பர்கள். சூரத் பகுதியைச் சேர்ந்த இவர்கள் வெவ்வேறு வணிகப் பின்னணி கொண்டவர்கள். பாதை வெவ்வேறாக இருந்தபோதும் அனைவருமே தொடர்ந்து இணைப்பில் இருந்துள்ளனர்.

பள்ளிப்படிப்பை முடித்த இவர்கள் 2012-ம் ஆண்டு ஒன்றாக சேர்ந்து தொழில் ஆரம்பிப்பது குறித்து கலந்து பேசினார்கள். 2015-ம் ஆண்டு கல்லூரிப் படிப்பையும் முடித்தார்கள்.

அனைவரும் பல நேரங்களில் ஒன்றுகூடி விவாதிப்பதுண்டு. ஒன்றாகப் பல வர்த்தகக் கண்காட்சிகளுக்குச் சென்றுள்ளார்கள்.

இந்தியாவில் கிடைக்ககூடிய புரோட்டீன் சப்ளிமெண்ட் குறித்தும் ஆரோக்கியமான வாழ்க்கை சார்ந்த பிரிவு குறித்தும் ஆராய்ந்தனர். புரோட்டின் வடிவிலான வே சப்ஸ்டிட்யூட், பீனட் பட்டர் போன்ற ஆரோக்கியமான கொழுப்புப் பொருட்கள் இவையெல்லாம் இந்தியாவில் பிரபலமடையாமல் இருப்பதை இவர்கள் கவனித்தனர்.

”வேர்கடலை நம் நாட்டிலேயே விளையும்போது நாமே ஏன் பீனட் பட்டர் தயாரிக்கக்கூடாது என யோசித்தோம்,” என்கிறார் சேத்தன்.

இந்த நண்பர்கள் சந்தையை ஆய்வு செய்தனர். பீனட் பட்டர் தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்கள். பீனட் பட்டர் பெட்டிகளில் அடுக்கப்பட்டிருக்கும். விற்பனை செய்ய விரும்புவதால் ஒரு சில பெட்டிகள் கொடுக்குமாறு தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளனர்.

குறைந்தபட்சம் 500 பெட்டிகள் வாங்கவேண்டும் என்று தயாரிப்பாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

“நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். எப்படியோ 100 பெட்டிகள் தர தயாரிப்பாளர் சம்மதித்தார்,” என்று சேத்தன் நினைவுகூர்ந்தார்.

ஆரம்பகட்ட சவால்கள்

நண்பர்கள் ஆறு பேரும் Alpino என்கிற பெயரை ஏற்கெனவே தேர்வு செய்து பதிவு செய்திருந்தனர். பீனட் பட்டரை லேபிள் செய்து அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் தளங்களில் விற்பனை செய்யத் தொடங்கினார்கள். ஆனால் 100 பெட்டிகளை விற்பனை செய்ய மூன்று மாதங்கள் ஆனது.

அடுத்த முறை தயாரிப்பாளரை சந்தித்தபோது எந்த வகையான பீனட் பட்டர் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிற விவரங்களைக் கேட்டுள்ளனர். அப்போது மொறுமொறுப்பாக இருக்கும் (crunchier) பீனட் பட்டர் வகை பற்றி தெரியவந்துள்ளது.

இந்த வகையை ஆர்டர் செய்து அமேசானில் சந்தைப்படுத்தத் தொடங்கினார்கள். 2016-17 ஆண்டில் 25 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர்.  

இந்த வகை பீனட் பட்டரை மக்கள் விரும்பி வாங்குவது புரிந்தது. எந்தப் பகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இவர்கள் வாடிக்கையாளர்களின் அஞ்சல் குறியீட்டு எண்ணை கவனித்துள்ளனர். ஹரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய இடங்களில் இருந்து அதிகம் வாங்குவது தெரிந்தது.

Alpino தயாரிப்புகள் மேலும், பலரைச் சென்றடைய விநியோகஸ்தர்களை இணைத்துக்கொள்ள முடிவு செய்தார்கள். விரைவில் வடக்குப் பகுதியில் 15 விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த விநியோகஸ்தர்கள் பிரத்யேக ஒப்பந்த அடிப்படையில் பீனட் பட்டர் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

2017ம் ஆண்டு மொறுமொறுப்பான பீனட் பட்டர் வகை ஒரு மாதத்திற்கு 50 பெட்டிகள் வரை விற்பனை செய்யப்பட்டது.

“பீனட் பட்டர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பாடிபில்டர்களுக்கு விளக்கினோம். சர்வதேச ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னெஸ் ஃபவுண்டேஷனிலும் சமர்ப்பித்தோம். பலர் முயற்சி செய்து பார்க்க ஆரம்பித்தனர்,” என்கிறார் சேத்தன்.

மூன்றாண்டுகளில் 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டது. அமேசானில் அதிகம் விற்பனையாகும் பிராண்டாக அறியப்பட்டது. மற்ற தயாரிப்புகளையும் Alpino இணைத்துக் கொண்டது. அதேபோல், மற்ற மின்வணிக தளங்களிலும் விற்பனையை விரிவடையச் செய்தது.

சந்தையில் பீனட் பட்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. பல்வேறு சுவைகளில் கிடைப்பது, நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்திருப்பது, ஊட்டச்சத்து நிறைந்த தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்திருப்பது போன்றவையே பீனட் பட்டர் தேவை அதிகரித்திருப்பதற்கான காரணிகள்.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: ஸ்ரீவித்யா

Latest

Updates from around the world