‘வேலைக்குச் செல்லும் 51% பெண்கள் வேலையை விடும் மனநிலையில் உள்ளனர்’ - ஆய்வு முடிவு!
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எப்படிப்பட்ட வசதிகள் கிடைத்தால் மன அழுத்தமின்றி சிறப்பாக வேலை செய்து பணி வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதைத் தெரிந்துகொள்ள 8000 அம்மாக்களிடம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது JobsForHer
கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து நம் வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டது. ஒரே மன அழுத்தம். பதட்டம். யாருக்கு என்ன நேர்ந்துவிடுமோ என்கிற கவலை. எங்கோ ஒருவருக்கு கொரோனா தொற்று என்று கேட்க ஆரம்பித்து நெருங்கிய வட்டத்தில் பலருக்கு தொற்று பாதித்ததைப் பார்த்தோம்.
கடந்த 24 மணி நேரத்தில் எத்தனை பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம் காட்டினோம். எதற்காக? கொரோனா தாக்கத்தின் வீரியம் குறைகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளத்தானே? இதில் தவறென்ன என்கிறீர்களா?
தவறே இல்லை. ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிந்துகொண்ட நாம் நம்மைச் சுற்றியுள்ள வேலைக்கு செல்லும் பெண்கள் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை சந்தித்தார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோமா?
கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் வீடே அலுவலகமாகவும் பள்ளியாகவும் மாறிப்போனது. இதனால் பெண்களுக்கு எத்தனை பெரிய சுமை.
பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டு வேலைகளில் உதவ ஆட்களை நியமித்திருப்பார்கள். ஆனால், ஊரடங்கு சமயத்தில் இந்த பணியாட்கள் யாரும் வரமுடியாமல் போனது. அந்த வேலைகளையும் பெண்களே சுமக்கவேண்டியிருந்தது.
சமையல், வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகளை கவனிப்பது, குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதை உறுதி செய்வது, ஹோம்வொர்க் செய்ய வைப்பது என அவர்களது அன்றாட வேலை நீண்டுகொண்டே போனது.
அதிகரித்த இந்த வேளைப்பளுவை பெண்கள் எப்படிக் கையாள்கிறார்கள்? அவர்கள் என்னென்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்? அலுவலகம் எந்த மாதிரியான ஏற்பாட்டை செய்து கொடுத்தால் அவர்களின் அழுத்தம் குறையும்? இதுபோன்ற ஏராளமான கேள்விகளுடன் ஒரு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது JobsForHer. வேலைக்கு செல்லும் 8000 அம்மாக்களிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்ற 51 சதவீத அம்மாக்கள், கூடுதல் பணிச்சுமை காரணமாக வேலையை விட்டுவிடும் மனநிலைக்கு சென்றதாக தெரிவித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட பாதி பேர் இந்த மனநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அதேசமயம், இந்த கணக்கெடுப்பில் பங்கேற்ற 59 சதவீதம் பேர் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்ததாகத் தெரிவித்திருப்பது சற்றே ஆறுதலளிக்கும் செய்தியாக உள்ளது. 41 சதவீதம் பேர் எந்தவித உதவியும் கிடைக்காமல் அவதிப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
பெருந்தொற்று பரவல் குறையத் தொடங்கிய நிலையில் குழந்தைகள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். நிறுவனங்களும் ஊழியர்களை நேரடியாக அலுவலகம் வர அறிவுறுத்தி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் வேலைக்கு செல்லும் பெண்கள் சில சலுகைகளை எதிர்பார்ப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
நெகிழ்வான பணி நேரம் அவசியம். இதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என 38.6 சதவீதம் பேர் தெரிவித்திருக்கிறனர். தொலைவிலிருந்து பணி செய்யும் வசதியை வழங்கவேண்டும் என்று 32.3 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். பணியிடத்தில் குழந்தைகளை பராமரிக்கும் வசதி தேவை என்பது 17 சதவீதம் பேரின் கருத்தாக உள்ளது.
பணி வாழ்க்கையையும் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையையும் சிறப்பாக சமன்படுத்தி பணியிடங்களில் உயர் பதவிகள் வரை எட்டவேண்டுமானால் மன நலனை மேம்படுத்தும் வகையில் ஆதரவளிக்கப்படவேண்டும் என்று 12.1 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கணக்கெடுப்பு குறித்து JobsForHer நிறுவனர் மற்றும் சிஇஓ நேஹா பகாரியா கூறும்போது,
“வேலைக்குச் செல்லும் அம்மாக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்தகொள்ள வேண்டும்; இதன் மூலம் வேலைக்குs செல்லும் பெண்களுக்கு உகந்த கலாச்சாரத்தை நிறுவனங்கள் உருவாக்கிக் கொடுக்கும்; இதனால் அவர்களின் வளர்ச்சியும் பாதிக்கப்படாது. இவைதான் எங்கள் கணக்கெடுப்பின் நோக்கம்.
"நெகிழ்வான பணி நேரம், தொலை தூரத்திலிருந்து வேலை செய்யும் வசதிகளை நிறுவனங்கள் வழங்கவேண்டும். இவை ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் கூடுதல் சலுகையாக கருதப்படக்கூடாது. அப்படிப்பட்ட சூழலை அமைத்துக் கொடுத்தால் பெண்களால் கூடுதல் பொறுப்புகளையும் சிறப்பாகக் கையாள முடியும். அதேசமயம் வேலையிலும் முன்னேற முடியும்,” என்கிறார்.