இரண்டே ஆண்டுகளில் 55 விண்வெளி ஸ்டார்ட்-அப்கள் இஸ்ரோவில் பதிவு!
இரண்டே ஆண்டுகளில் 55 விண்வெளி ஸ்டார்ட்அப்கள் இஸ்ரோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரோ நிறுவனம் பல்வேறு விண்வெளி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி முன்னோக்கி எடுத்து வருகிறது. அதன்படி, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இஸ்ரோவின் பிரதான திட்டமாக இருக்கிறது. சமீபத்தில் ககன்யான் திட்டத்துக்கான விண்கல பூஸ்டர் சோதனை வெற்றி அடைந்தது.
இந்த நிலையில், அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான கூட்டுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு பேசினார். அதில், 2022-23 ஆம் ஆண்டில் குறைந்தது ஒன்பது முன்மொழிவுகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 55 பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, சேவைகள் மற்றும் கூட்டாண்மைகளில் தனியாருக்கும் வாய்ப்பளிப்பதில் இஸ்ரோ முடிவு வெற்றி அடைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமைச்சர் கூறுகையில், அங்கீகரிக்கப்பட்ட 55 திட்டங்களானது இஸ்ரோவால் நடத்தப்படும் பல்வேறு விண்வெளி தொடர்பான செயல்பாடுகளில் பங்காற்றி கொண்டிருக்கிறது.
இந்த 55 திட்டங்களில் 29 செயற்கைக்கோள் தொடர்பானது, 10 விண்வெளி பயன்பாடுகள் மற்றும் தயாரிப்புகளுக்கானது, 8 ஏவுகணைகள் தொடர்பானது மற்றும் 8 தரை அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பானது என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.
அதோடு மட்டுமின்றி, இந்தியாவின் 75 ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விதமாக ஆசாதி கா அம்ரித் மஹோத்வச் திட்டத்துடன் இணைந்து இந்த ஆண்டு மட்டும் 75 மாணவர்களின் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
விண்வெளி துறையில் தனித்து செயல்படும் வரலாற்றை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி வலுவான பொது-தனியார் உறவுக்கான சிறந்த மற்றும் வழிகாட்டலுக்கான முன்னேற்றத்தை இது குறிக்கிறது என அவர் கூறினார்.
இவை அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விண்வெளி துறையின் "Unlocking" என்ற திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.