சிறு கிராமத்தில் பிறந்து, சிலிக்கான் வேலியில் பணியாற்றி, சென்னை திரும்பி நிறுவனம் துவங்கி 250 ஊழியர்களுடன் பயணிக்கும் முரளி விவேகானந்தன்
திருவண்ணாமலை அருகே பிறந்து வளர்ந்து, 2008-ல் சென்னை திரும்பி துவங்கிய ‘Ideas2IT' நிறுவனத்தில் பணிபுரியும் குழுவினருக்கு சுதந்திரமான பணிச்சூழலை உருவாக்கித் தந்துள்ளார் நிறுவனர் முரளி விவேகானந்தன்.
முரளி விவேகானந்தன் ஐடியாஸ்2ஐடி (Ideas2IT) டெக்னாலஜிஸ் என்கிற ப்ராடக்ட் இன்ஜினியரிங் நிறுவனத்தை 2008-ம் ஆண்டு சென்னையில் துவங்கினார். அப்போது ஆறு நபர்கள் அடங்கிய குழுவாக செயல்படத்துவங்கியது. இன்று ஐடியாஸ்2ஐடி 250 ஊழியர்களுடன் மிகப்பெரிய க்ளையண்ட் தொகுப்பைக் கொண்டுள்ளது. வெற்றிக் கதை எப்போதும் உந்துதலளிக்கும் விதத்தில்தான் இருக்கும். இருந்தும் முரளியின் கதை குறிப்பிடத்தக்கதாகும்.
நிறுவனங்கள் பொதுவாக அதன் நடவடிக்கைகளை மக்களிடையே கொண்டு சேர்க்க ஊடகங்களையே அணுகுவார்கள். ஆனால் இவர்களது மக்கள் தொடர்புக் குழுவினர்தான் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் மென்பொருள் பொறியாளர்களில் ஒருவர் என்னை அணுகி,
”என்னுடைய முதலாளி முரளியின் கதை யுவர்ஸ்டோரியில் வெளியாக வேண்டும். ஆனால் அவர் தன்னுடைய சாதனைகள் குறித்து பிறரிடம் பெருமையாக சொல்லிக்கொள்ளமாட்டார். எனவே நீங்கள் அவருடன் பேசுவதற்கு முன்பு அவரது சாதனைகள் குறித்து சுருக்கமாக உங்களுக்குச் சொல்கிறேன்,” என்றார். முரளியுடன் பேச சம்மதித்து ஆர்வத்துடன் உரையாடலைத் துவங்கினேன்.
முதலில் முரளியின் பணி சார்ந்த சாதனைகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். ஐடியாஸ்2ஐடி மைக்ரோசாஃப்ட், எரிக்சன், சீமன்ஸ், மோட்டோரோலா போன்ற நிறுவனங்களுக்கு மேம்பட்ட மென்பொருளை வழங்குகிறது. அத்துடன் ஸ்டார்ட் அப்களுக்கான ஸ்டார்ட் அப்பாகவும் செயல்படுகிறது. திட்டத்தைத் தயாராக வைத்திருக்கும் நிறுவனர்களுடன் பணியாற்றி அவர்களது திட்டத்தை நிஜ உலகின் தொழில்நுட்பத்திற்கேற்ப மாற்ற உதவுகின்றனர்.
ஸ்ரீகாந்த் ஜகந்நாதன் மற்றும் அஷ்வின் ராமசாமி ஆகிய இணை நிறுவனர்களுடன் செயல்படும் முரளியின் மற்றொரு நிறுவனமான பைப்கேண்டி, ஐடிஜி வென்சர்ஸ் மற்றும் இதர ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து சீட் நிதியாக 1.1 மில்லியன் நிதி உயர்த்தியது. முரளி வடிவமைத்த ஐடியாமெட் (Ideamed) என்கிற மருத்துவமனை மேலாண்மை மென்பொருள் தற்போது கெம்பெகௌடா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, காமினினி மருத்துவமனை உள்ளிட்ட மிகப்பெரிய மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சொந்த மண்ணிற்கே முக்கியத்துவம்
முரளி தமிழ்நாட்டில் திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தார். புனே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பிறகு சிலிக்கான் வேலியிலுள்ள சிஸ்கோ, கூகுள் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களுடன் பணியாற்றினார். ஆனால் தனது சொந்த வென்சரைத் துவங்க இந்தியா திரும்பினார். முரளி இது குறித்து தெரிவிக்கையில்,
சிலிக்கான் வேலி தொழில்நுட்பப் பிரிவில் செயல்படுவோருக்கான மெக்காவாகும். மிகச்சிறந்த ப்ராண்ட்களுடனும் துறையில் சிறந்து விளங்குபவர்களுடனும் பணியாற்றியுள்ளேன். நிறைய கற்றுக்கொண்டேன். பணம் சம்பாதித்தேன். ஆனால் சொந்த மண்ணைவிடச் சிறந்தது எதுவுமில்லை அல்லவா? அமெரிக்காவில் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஆனால் ஸ்டார்ட் அப் துவங்க தீர்மானித்ததும் இந்தியாவிற்குத் திரும்பி திறமையானோருக்கு வாய்ப்புகளை வழங்கவேண்டும் என்று நினைத்தேன்."
முரளியும் அவரது மனைவி பவானியும் இந்தியா திரும்பியபோது அவர்களது மகன் 9 மாதக் குழந்தை. இவர்களது நலம்விரும்பிகள் பலர் இந்த முடிவு குறித்து கேள்வியெழுப்பினர். ஆனால் இந்தத் தம்பதி தங்களது முடிவில் உறுதியாக இருந்தனர். பவானி ஐடியாஸ்2ஐடி நிறுவனத்தின் சிஓஓ-வாக உள்ளார். மனிதவளத்துறையும் நிதித்துறையும் இவரது தலைமையில் செயல்படுகிறது.
முரளி புன்னகையுடன்,
“பவானியின் பங்களிப்பும் உழைப்பும் இல்லாமல் போயிருந்தால் பல காலங்களுக்கு முன்பே நிறுவனம் திவாலாகியிருக்கும். தேவையெழும்போதெல்லாம் அவர் தலையிட்டு நிறுவனம் தங்கு தடையின்றி செயல்படுவதை உறுதிசெய்தார்.”
சிறப்பான பணிக்கலாச்சாரம் என்பது நம்பிக்கை சார்ந்தது
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலிருந்தே ஐடியாஸ்2ஐடி ஊழியர்கள் பணியிலமர்த்தப்படுகின்றனர். இவர்களில் பலர் ப்ரொஃபஷனலாக தகுதி பெறாதவர்கள். முரளி விவரிக்கையில்,
கம்ப்யூட்டரில் அதுவரை பணிபுரியாத நபர்களைக்கூட நாங்கள் பணியிலமர்த்தியுள்ளோம். கூகுள் பணியிலமர்த்தும் முறையையே நாங்கள் பின்பற்றுகிறோம். இதை நான் கூகுள் லைட் என்பேன். இதில் ஏற்கெனவே திறன் பெற்றவர்கள் அல்லது மரபுவழி வந்தவர்களைக் காட்டிலும் ஆற்றல் உள்ளவர்களையே தேர்வுசெய்கிறோம்.
முரளியும் அவரது குழுவும் பணியிலமர்த்தும் முறையின்போது ஒரு சில குணங்களை எதிர்நோக்குகின்றனர். இதனால் ஊழியர்கள் பணியைவிட்டு விலகும் விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. 2008-ம் ஆண்டு இந்நிறுவனத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த ஆறு பேரில் ஐந்து பேர் இன்றும் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
ஒரு புதிய பேட்ச் பணியில் சேரும்போது மூத்த டெவலப்பர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களது வழிகாட்டுதல்களுடன் நேரடியாக பிரச்சனைகளையும் பணியையும் எதிர்கொள்வதன் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். முரளி கூறுகையில்,
”ஓராண்டு காலத்தில் என்னுடைய ஊழியர்கள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு நிகராக மாறுவார்கள்,” என்றார்.
படிப்பில் அவர்களது சாதனையை கருத்தில் கொள்ளாமல் இப்படிப்பட்ட அசாதாரண வழக்கத்தை பணியிலமர்த்தும் முறையில் பின்பற்றுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.
நான் முன்னணி கல்வி நிறுவனங்களுக்கு எதிரானவன் அல்ல. விரைவில் ஐஐடி-க்கு கேம்பஸ்காக செல்ல திட்டமிட்டுள்ளேன். ஆனால் அங்கு சிறந்த நபர்களை என்னால் பெற முடியாது. ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்களே அத்தகைய சிறந்த நபர்களைப் பெறுவார்கள். எனவே அதிக பிரபலமில்லாத கல்வி நிறுவனங்களிலிருந்து சிறந்த நபர்களையே நான் தேர்ந்தெடுக்கிறேன். இதனால் வெற்றியடைய சாத்தியமுள்ள திறமைசாலிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என்கிற திருப்தி எனக்குக் கிடைக்கும். இரண்டாவதாக ஐஐடி நபர் ஓராண்டிற்குள்ளாகவே நிறுவனத்தை விட்டுச் சென்றுவிடுவார். ஆனால் இதர கல்வி நிறுவனங்களிலிருந்து வருபவர்கள் நீண்ட காலத்திற்கு இணைந்திருப்பார்கள்.
சரியான அணுகுமுறையும் கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல. நேர்காணல் முறை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு ஐக்யூ, சிக்கல்களை தீர்த்தல், படைப்பாற்றலுடன் கூடிய சிந்தனை போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஐடியாஸ்2ஐடி நடுத்தர அளவிலான நிறுவனமாக செயல்படும்போதும் ஒரு நெருக்கமான குடும்பத்தைப் போன்ற பணிச்சூழலைக் கொண்டுள்ளது. புதிதாக பணியில் சேர்பவர்களை இணைத்துக்கொண்டு செயல்படும் குழுவினர்தான் இதற்குக் காரணம் என்கிறார் முரளி. புதிதாக அறிமுகமாகும் நபர்களுக்கு அதிக சௌகரியமான சூழலை ஏற்படுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. முரளி கூறுகையில்,
புதிதாக அறிமுகமாகும் நபர்கள் சிறப்பாக ஒன்றிணைய மிகவும் எளிதான வழி பின்பற்றப்படுகிறது. வெவ்வேறு குழுவைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைத்து டின்னர் சாப்பிடவும் திரைப்படத்திற்குச் செல்லவும் நிறுவனத்தின் செலவில் ஏற்பாடு செய்யப்படுகிறது. காஃபி அருந்தும் நேரத்தில் ஒரு நபர் தனியாக இருப்பதை கவனித்தால் அவருக்கு சௌகரியமான உணர்வை ஏற்படுத்த சகஜமாக பேசும் நபருடன் அவர் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்கிறோம்.
சுதந்திரத்துடன் பொறுப்புணர்ச்சி சேர்ந்தே இருக்கும்
ஆண்டுதோறும் நடைபெறும் மதிப்பீடுகள், போனஸ் போன்றவற்றைத் தாண்டி ஊழியர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் ரொக்கப்பரிசு வழங்குகிறார் முரளி. அவர் கூறுகையில், “ஏற்கெனவே அமைக்கப்பட்ட விதிகளை அப்படியே பின்பற்ற விரும்பவில்லை. அனுபவங்களைக் காட்டிலும் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு அதற்கு வெகுமதியளிக்கப்படவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். இந்தச் செயல்முறை நியாயமானதாக இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் வெகுமதி கிடைக்காதவர்கள் மனம் வருந்தமாட்டார்கள். இந்தச் செயல்முறை வெளிப்படையாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் தங்களை மேம்படுத்திக்கொண்டு அடுத்த முறை பரிசு பெறுவார்கள். இந்த முடிவுகளை மனிதவளத்துறையோ அல்லது உயர்மட்ட நிர்வாகமோ எடுப்பதில்லை. குறிப்பிட்ட நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட ஊழியர்கள் அடங்கிய குழு ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கும்.
காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை பணி புரியும் வழக்கமான முறையை குழு பின்பற்றுவதில்லை. ப்ராஜெக்ட்டின் தேவைகளும் அதன் நிலையும்தான் வேலை நேரத்தை தீர்மானிக்கிறது. சில சமயம் வாரத்தின் ஏழு நாட்களும் குழு பணிபுரிகிறது. மற்றொரு சமயம் வாரத்தின் நடுவில் விடுப்பு எடுத்துக்கொள்வார்கள். முரளி கூறுகையில்,
எங்களது குழுக்கள் சுயமாக நிர்வகிக்கப்படுகிறது. ’இதை எப்படி செயல்படுத்துவது என்று நாங்கள் தீர்மானிக்கிறோம். நீங்கள் தலையிடவேண்டாம்’ என்று என்னிடம் சொல்வார்கள். அதிக சுதந்திரம் இருக்கும் இடத்தில் பொறுப்புகள் தானாக வரும் - ஸ்பைடர்மேனில் வரும் இந்த வரிகள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
எந்த ஒரு நல்ல விஷயத்தையும் சிறியளவில் எளிதாகச் செயல்படுத்திவிடலாம். எனினும் தொடர்ந்து திருத்தியமைத்து கடினமான முடிவுகளை எடுத்தால்தான் நிறுவனத்தின் வளர்ச்சிக் கட்டத்திலும் அதன் பணி கலாச்சாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
"என்னைப் பொருத்தவரை சேபியண்ட், கூகுள் ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே அதன் கலாச்சாரம் வலுவிழந்துவிடாமல் நிர்வகித்து வளர்ச்சியடைந்தது. பொறியாளர்கள் எனது நிறுவனத்தை நடத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்.”
ஐடியாஸ்2ஐடி பாலின பாகுபாடின்றி இரு பாலினத்தவர்களையும் நியாயமான முறையில் நடத்தி வருகிறது. சிலிக்கான் வேலியில் முரளிக்கு மேலதிகாரியாக இருந்த பெண்கள் மீதும் உடன் பணியாற்றிய பெண்கள் மீதும் அதிக மரியாதையுடன் இருந்தார். இதுவே அவரது நிறுவனத்திலும் தொடர்கிறது. மொபைல் மற்றும் டெலிவரி பிரிவுகள் பெண்கள் தலைமையில் செயல்படுகிறது. தலைமைக் குழுவில் பல பெண்கள் உள்ளனர்.
“பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பெண்கள் வீட்டில் வேலையில் மும்முரமாக இருப்பார்கள் என்பதால் மாலை வெகு நேரம் கழித்தோ வார இறுதியிலோ அவர்களை பணிக்கு அழைப்பதற்குத் தயங்குவேன். ஆனால் அவர்களால் தங்களுக்கே உரிய கண்ணோட்டத்தையும் சக்தியையும் வழங்கமுடியும்.”
முரளியும் பவானியும் அவர்களது பணி வாழ்க்கையையும் குடும்பத்தையும் மிகவும் கவனமாக சமன்படுத்துகின்றனர். ஒருவர் மாறி அடுத்தவர் குழந்தைகளுடன் தரமான நேரம் செலவிடுகின்றனர். புத்தக வாசிப்பில் ஆர்வமுள்ள முரளி Ben Horowitz எழுதிய The Hard Thing About Hard Things : Building a Business When There Are No Easy Answers, Timothy Ferriss எழுதிய Tools of Titans : The Tactics, Routines and Habits of Billionaires, Icons, and World-Class Performers மற்றும் Mario Puzo எழுதிய The Godfather ஆகிய புத்தகங்களை பரிந்துரைக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர் : ஷரிகா நாயர்