பணிச்சுமையால் உயிரிழந்த இளம் பெண் ஊழியர் - EY தலைவருக்கு தாய் எழுதிய கண்ணீர் கடிதம்!
கேரளாவைச் சேர்ந்த 26 வயது தணிக்கையாளர் இடைவிடாத வேலையால் உண்டான பணி அழுத்தம் காரணமாக உயிரிழக்க நேர்ந்ததாக அவரது தாயார், நிறுவன தலைமை அதிகாரிக்கு எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தை உலுக்கியிருக்கிறது.
கேரளாவைச் சேர்ந்த 26 வயது தணிக்கையாளர் இடைவிடாத வேலையால் உண்டான பணி அழுத்தம் காரணமாக உயிரிழக்க நேர்ந்ததாக அவரது தாயார் நிறுவன தலைமை அதிகாரிக்கு எழுதிய உருக்கமான கடிதம் இணையத்தை உலுக்கியிருக்கிறது.
ஆரோக்கியமான பணிச் சூழல் தொடர்பான விவாதத்தை இந்த சோக சம்பவம் உருவாக்கியுள்ளது.
சர்வதேச அளவில் முன்னணி தணிக்கை நிறுவனங்களில் ஒன்றான எர்னஸ்ட் அண்ட் யங்-கில் (Ernst & Young EY), 26 வயதான அன்னா செபஸ்டீன் பெரியல், தணிக்கையாளராக (சி.ஏ) பணியாற்றிக் கொண்டிருந்தார். கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்தவர், நான்கு மாதங்களே ஆன நிலையில், ஜூலை 20ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
பணிச் சுமை உண்டாக்கிய மன அழுத்தம் சார்ந்த உடல் சோர்வால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது சோக முடிவு ஏற்பட்டது.
தாயின் உருக்கமான கடிதம்
இளம் தணிக்கையாளர் அன்னாவின் தாய், அனிதா அகஸ்டீன், தனது மகளின் மரணத்திற்கு நிறுவனத்தின் பணிச்சுமையால் உண்டான மன அழுத்தமே காரணம் என குற்றம்சாட்டி, எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவன தலைவர் ராஜீவ் மேமனிக்கு கடிதம் எழுதிருந்தார். உருக்கமான இந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி, ஆரோக்கியமான பணிச் சூழல் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது மகளின் இறுதிச்சடங்கில் கூட நிறுவனத்தில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுவே எனது மகளின் முதல் வேலை, அவள் மிகுந்த உற்சாகத்தில் இந்த வேலையில் சேர்ந்தார். பள்ளி, கல்லூரியில் முதலிடம் பெற்றவள், பணியிடத்திலும், சிறந்து விளங்க உத்வேகம் கொண்டிருந்தார்... எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், பணிச்சுமை, புதிய சூழல், அதிக பணி நேரம் தனது மகளை மனதளவிலும், உடல் அளவிலும் மோசமாக பாதிதத்து என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பட்டமளிப்பு விழா
இடையே ஜூலை மாதம் 7ம் தேதி பூனாவில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருந்த போது, அன்னாவின் உடல்நிலை மிகவும் மோசமானது பற்றியும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு வார காலமாக நள்ளிரவு பணி முடிந்து தாமதமாக வந்தவர், மார் வலி இருப்பதாக தெரிவித்ததாகவும், பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக மருத்துவமனை சென்று பரிசோதித்தது பற்றியும் எழுதியிருந்தார்.
தனது சொந்த பணத்தில் பெற்றோரை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்து வர வேண்டும் என்பது மகளின் விருப்பம் என்றும், அதற்கேற்ப விமான டிக்கெட்டை மகளே வாங்கி கொடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ பரிசோதனை முடித்து திரும்பிய அன்று கூட, அன்னா உடனே அலுவலக வேலையில் மூழ்கியிருக்கிறார்.
பணி அழுத்தம்
அன்னா பணியாற்றிய குழுவில் அவருக்கு உண்டான பணிச்சுமை பற்றியும் அவர் எழுதியிருந்தார்:
அன்னா குறிப்பிட்ட குழுவில் இணைந்த போது, கூடுதல் பணிச் சுமை காரணமாக அவர் வேலையை விட்டு விலகி விடுவார் என சக ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். அவரது குழு தலைவரோ, 'அன்னா நீ இவர்கள் எண்ணத்தை பொய்யாக்க வேண்டும்' என கூறியிருக்கிறார்.
அவரது மேலாளர் தனது கிரிக்கெட் ஆர்வத்திற்கு ஏற்ப சந்திப்புகளின் நேரத்தை மாற்றக்கூடியவராக இருந்திருக்கிறார். பணிச்சுமை நெருக்கடி பற்றி அன்னா தனது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார். பணி நேரம் முடிந்த பிறகு வாய்மொழியாக பிறப்பிக்கப்பட்ட கட்டளைகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமும் பணி முடிந்து வேலை களைப்பால் உடை கூட மாற்றாமல் அவர் படுக்கையில் விழுந்துவிடுவார். ஒரு முறை மறுநாள் காலை முடிக்க வேண்டிய பணியை இரவில் தெரிவித்த போது அன்னா முறையிட்டிருக்கிறார். ஆனால், குழு மேலாளரோ இரவில் பணியாற்றலாம், நாங்கள் அப்படி தான் செய்கிறோம், எனக் கூறியிருக்கிறார்.
இளகிய மனது
வேலையை விட்டுவிடுமாறு பெற்றோர்கள் கூறிய நிலையிலும், அன்னா தனக்கு இந்த அனுபவம் தேவை எனக் கூறியிருக்கிறார்.
மேலாளர்கள் மீது புகார் தெரிவிக்காத அளவுக்கு மகளுக்கு இளகிய மனம் இருந்ததாகவும், ஆனால் தன்னால் இப்படி அமைதியாக இருக்க முடியாது என்றும், புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களை இரவு பகல் பாராமல் பணி செய்ய சொல்வது சரியல்ல என்றும் அன்னாவின் தாய் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நிர்வாகம் புதியவர்களுக்கு சலுகை காட்டுவதற்கு பதிலாக அவர்கள் அனுபவம் இல்லாத நிலையை சாதகமாக்கிக் கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளவர், அன்னா போன்ற புதிய ஊழியர்களுக்கு, கூடுதல் பணியை மறுக்கும் திறன் இல்லை, என வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
மகளின் ஆரோக்கியத்தியும், மன நலனையும் காக்க நினைத்தும் தன்னால் முடியவில்லை, என அவர் தெரிவித்திருக்கிறார்.
மாற்றம் தேவை
கடிதத்தின் இறுதியில் ஆரோக்கியமான பணிச் சூழல் தேவை என வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் நிறுவனத்திற்குள் பணி கலாச்சாரம் தொடர்பாக ஆய்வு செய்து, ஊழியர்கள் நலன் காக்கும் வகையில் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளவர், ஊழியர்கள் தங்கள் கவலைகளை தயக்கம் இல்லாமல் தெரிவிக்கும் சூழலாக இது அமைய வேண்டும், என கூறியுள்ளார்.
பணிச்சுமையை சமாளிக்க ஊழியர்களுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் தேவை என கூறியுள்ளார்.
இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பலியான இளம் ஊழியருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு ஆரோக்கியமான பணி சூழல் பற்றியும் விவாதித்துள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, இந்த செய்தி தனது உள்ளத்தை நொருங்கச்செய்வதாக தெரிவித்திருந்தார்.
மத்திய அரசு விசாரனை
இந்த கடிதம் வைரலானதை அடுத்து, எர்னஸ்ட் அண்ட் யுங் தலைவர், ராஜீவ் மேமனி, அன்னா தாய்க்கு எழுதிய பதில் கடிதத்தில் அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது என குறிப்பிட்டு இந்த கடித தொடர்பை நிறுவனம் முக்கியமாக கருதுவதாகவும் கூறியுள்ளார். ஊழியர்கள் நலனுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய இருப்பதாக தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பற்ற பணி சூழல் தொடர்பாக கேரள ஊழியரின் தாய் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக கவனிக்குமாறு பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் விடுத்த கோரிக்கையை அடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷோபா கரண்ட்லே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
Edited by Induja Raghunathan