கூகிளின் சேவைகள், நமது தேவைகள்...
நமது தேவைகளை அறிந்து கூகிள் மிகுதியான பல சேவைகளை வழங்குகிறது. நமது தேவைக்கேற்ப வேண்டியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் .
இனி கூகிள் வழங்கும் சிறப்பான சேவைகளைப் பற்றி பார்ப்போம்.
Google Keep:
குறிப்புகள் எடுத்துக்கொள்வதற்கு என கூகுளின் தனிப்பட்ட சேவை கூகிள் கீப். கூகிள் கீப்பின் மூலமாக மிக எளிமையாகவும் , பல வசதிகளுடனும் குறிப்புகளை சேமித்து வைத்துக்கொள்ளலாம் .
இவ்வாறாக குறித்து வைத்துள்ள குறிப்புகளை வேண்டிய நண்பர்களுடன் அவர்களின் ஜிமெயில் முகவரி மூலமாக பகிர முடியும். பயனாளர்களை கவரும் வகையில் வேண்டிய வண்ணங்களில் குறிப்புகளை சேமித்து வைக்கும் வசதியினை கொண்டுள்ளது .
இதில் நீண்ட நெடிய பத்திகளை கூட சேமித்து வைக்கலாம். இந்த சேவைக்கென மொபைல் செயலிகளும் இணைய தளமும் உள்ளது, இந்த காரணங்களால் கணினி அல்லது மொபைல் போன்ற எதாவது ஒன்றை பயன்படுத்திக் குறிப்புகளை சேமித்து வைக்கவும், முன்பு சேமித்தவற்றை பார்வையிடவும் முடியும் .
Google Trends:
இந்தக் கண நேரத்தில் உலக மக்கள் உற்சாகமாக எதைப்பற்றி அதிகமாக தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என தெரிய வேண்டுமா? ஆம் எனில், கூகுளின் ட்ரெண்ட்ஸ் சேவையை பார்வையிடவும். ஒவ்வொரு நாட்டிலும் தற்பொழுது பரபரப்பாக பேசப்படும் தலைப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் .
ஒவ்வொரு நேரத்திலும் மக்களின் தேடல்களை பொருத்து இங்கு தலைப்புகள் மாறிக்கொண்டே இருக்கும்.
Google Drive:
இது கூகுளின் மற்றுமொரு மகத்தான சேவை. உங்கள் பென் டிரைவில் தகவல்களை சேகரித்து வைப்பது போலவும், தேவையான இடத்தில் சேமித்த தகவல்களை பயன்படுத்தவும் முடியும்.
கூகிள் இலவசமாக 15 GB அளவிற்கு நினைவகத்தை தருகிறது.
இதை விட நினைவகம் அதிகமாக தேவைப்பட்டால் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
இங்கு சேமித்து வைத்துள்ள தகவல்களை விருப்பமான நபர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Google AdWords:
கூகிளில் எவரேனும் உங்களது இணைய தளம் தொடர்பான வார்த்தைகளில் தேடினால் , உங்கள் இணையதளம் முதலாவதாக வர வேண்டுமா ? இதற்கு கூகுளின் கட்டண சேவையான Google AdWords-ஐ பயன்படுத்தலாம்.
இந்த சேவை தான் கூகுளின் வருமானத்திற்கு முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த சேவையின் மூலமாக நமது இணையதளத்தை விளம்பரப்படுத்தி பார்வையாளர்களை அதிகரிக்க முடியும்.
Google AdSense:
நீங்கள் உங்களுக்குச் சொந்தமாக இணையதளத்தை கொண்டிருந்தால் அதில் கூகுளின் விளம்பர சேவையின் மூலமாக நீங்களும் வருவாய் ஈட்ட முடியும்.
இதற்கு முன் குறிப்பிட்ட Google AdWords சேவையில் நம்முடைய இணையதளத்தை விளம்பரப்படுத்த பணம் கொடுக்க வேண்டி இருக்கும், ஆனால் இந்த Google AdSense சேவையில் கூகிள் பல்வேறு இணையதளங்களைப் பற்றி நமது தளத்தில் இருந்து விளம்பரப்படுத்தும்.
இணைய உலகில் பலர் இந்த சேவையின் மூலமாக இலாபமான முறையில் பணம் ஈட்டுகிறார்கள்.
AdMob:
நீங்கள் android மொபைளுக்கென செயலிகளை உருவாக்கிருந்தால் அதில் மற்ற நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிட்டு பணம் ஈட்டலாம். இந்த சேவைகளில் விளம்பரங்களை பயன்படுத்த நாம் விளம்பரங்களைத் தேடி அலைய வேண்டியது இல்லை, கூகிள் தானாகவே வேண்டிய விளம்பரங்களை நமது செயலியில் வெளியிடும்.
Google for Business:
கூகிள் தேடலில் யாராவது சென்னையில் உள்ள புத்தக நிறுவனங்களை தேடினால் உங்கள் நிறுவனமும் முகவரி மட்டும் அதிகப்படியான தகவல்களுடன் மிக எளிமையாக கண்டுபிடிக்கும் வகையில் தெரிய வேண்டுமெனில் இந்த சேவையை பயன்படுத்தலாம். இது ஒரு கட்டண சேவை.
Google Sheet:
விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள Microsoft Excel போன்றதொரு சேவையை இலவசமாக இங்கு பெறலாம். அதிகப்படியான வசதிகளுடன் மிக எளிமையாக கணக்கீடுகளை செய்யலாம். பக்கங்களை விரும்பிய வடிவில் தரவிறக்கம் செய்ய முடியும். ஒரு நேரத்தில் பல நபர்களுடன் ஒரே பக்கத்தை பகிர்ந்து அனைவரும் இணைந்து பணியாற்ற முடியும். அப்படி பணியாற்றும் போது எந்தந்த திருத்தங்கள் யார் செய்தது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள முடியும்.
Google Forms:
உங்களுக்கு சர்வே எடுக்க வேண்டிய தேவை இருக்கும்போது, மக்களின் கருத்துகளை இணையம் மூலமாக கேட்டறிவதர்க்கும், நீங்கள் எதாவது ஒரு நிகழ்ச்சியினை நடத்தும்போது அதற்கு முன் பதிவு செய்ய வேண்டியது போன்ற தேவை ஏற்படும் பொழுதும் கூகுளின் Forms சேவையை தேர்ந்தெடுக்கலாம். இந்த forms-ஐ பலதரப்பட்ட பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியும் .
இந்த forms-இல் ஒருவரியில் பதில், பல வரிகளில் பதில் மற்றும் தேர்ந்தெடுக்கும் பதில் என பல முறைகளில் பதில்களை பெறலாம். இந்த forms-இன் முகவரியை (URL) மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களிடம் இருந்து தகவல்களைப் பெறமுடியும் .
Google Doc:
இந்த Doc சேவையின் மூலமாக எளிமையான முறையில் நாம் word documents உருவாக்க முடியும். இங்கு ஏற்கனவே பல்வேறு வடிவங்களில் தயார்செய்யப்பட்ட Documents இருக்கும், நமக்கு வேண்டிய வடிவத்தை தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்தும் போது நமது நேரம் சேமிக்கப்படும்.
Google Doc, Sheet போன்ற சேவைகளில் நாம் நமது கோப்புகளை மற்றவர்களுடன் பகிரும் பொழுது யார் யாருக்கு எந்த உரிமைகள் உள்ளது என நிர்ணயிக்க முடியும். உதாரணமாக நீங்கள் பக்கங்களை பகிரும்போது குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே அந்த பக்கத்தில் மாற்றங்கள் ஏற்படுத்த முடியும் வகையிலும் மற்ற நபர்கள் பார்வை மட்டுமே இடும் வசதிகளுடன் பகிர்ந்தளிக்க முடியும்.
Google Drawing:
இணையத்தில் படங்கள் வரைவதற்கென கூகிள் வழங்கும் சேவை தான் Google Drawing. இந்த சேவையின் மூலம் நம் விருப்பப்படி எங்கு இருந்து வேண்டுமானாலும் படம் வரைந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Google Slides:
விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள Microsoft PowerPoint Presentation போன்ற பதிவுகளை வேறு எந்த மென்பொருளின் உதவியும் இல்லாமல் உருவாக்க முடியும், இதற்கு இணைய வசதியும், உலவியும் மட்டும் போதும்.
Google Contacts:
நீங்கள் உங்கள் மொபைலில் நண்பர்களின் தொடர்பு எண்களை சேமித்து வைப்பது போல இணையத்திலும் சேமித்து வைத்துக்கொள்ளலாம். இவ்வாறு சேமிப்பதன் மூலம் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் உங்கள் மொபைல் இல்லாமல் கூட சேமித்து வைத்த தொடர்புகளை பெற முடியும்.
நாம் மொபைலை மாற்றும் சூழ்நிலை வரும்போது இந்த சேவை தொடர்புகளை சேமித்து வைக்க மிகவும் உதவிகரமாக இருக்கும்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்