12 வயதில் வார்த்தை உலகின் சூறாவளியான அனிகா ஷர்மா!
வார்த்தைகள் என்னிடம் நிரம்பி வழிகின்றன… என்று தொடங்குகிறது பீஸ் கீஸ்-ன் பாடல் வரி, நம்மில் எத்தனை பேருக்கு வார்த்தையை கொண்டு நம் செயல்கள், கனவு மற்றும் உணர்வுகளுக்கு வடிவமும், அர்த்தமும் கொடுக்க முடியும்.
செல்போன் மற்றும் செயலிகள் இருக்கும் இந்த காலத்திலும், நம்மில் பலர் இதழ் அல்லது நாட்குறிப்பை பராமரிக்கிறோம். இன்றைய அளவில் நம்முடைய உணர்வுகளையும் ஆழ்மன சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ள ப்ளாக்குகள் உள்ளன. நம்மை மீட்டெடுக்க எப்போதும் உதவுவது வார்த்தைகளே.
12 வயது அனிகா ஷர்மாவின் விஷயத்திலும் கூட அது தான் நடந்திருக்கிறது. தன்னுடைய எண்ணங்களுக்கு வண்ணம்தீட்டும் அவளுடைய ஆசை, அவரை ஒரு கவிதை எழுத வைத்துள்ளது. தன்னுடைய எளிமையின் வெளிப்பாடுகளே அவளின் கவிதைகளாக இருந்தன- அவளுடைய மூளையில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறதோ அதை காகிதத்தில் எழுதி உயிர் கொடுப்பார்.
துபாயை சேர்ந்த இந்த 12 வயது பெண்ணின் புகழுக்கு அவரின் கவிதை தொகுப்பே காரணம். அவர் தன்னுடைய முதல் நாவலை எழுதுகிறார். அவருக்கு இருக்கும் சிறந்த ஞானத்தை அவருடைய பெற்றோர், இளம் சிறார்கள் மற்றும் தன் வயதை ஒத்த பெண்களுடன் பகிர்ந்துகொள்கிறார். எழுத்து மீதான அனிகாவின் காதல் பற்றியும், அவரை எது ஆச்சரியப்படுத்தி, உந்துதல் அளிக்கிறது என்பது குறித்தும் ஹர்ஸ்டோரி அவருடன் கலந்துரையாடியது.
ரிப்பில்ஸ் (Ripples)
அனிகாவின் பெற்றோர் பொறியாளர்கள். தங்களுடைய இளைய மகளுக்கு எழுத்து ஒரு வரப்பிரசாதமாக கிடைத்திருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள், அந்த வரம் அவரை விட்டு விலகி விடக் கூடாது என்றும் கருதினார்கள். அவர்கள் அனிகாவின் கவிதைகளை ரிப்பில்ஸ் என்ற புத்தகத்தின் பெயரில் வெளியிட்டனர். கடந்த ஆண்டு குழந்தைகள் தினத்தின் போது அது வெளியிடப்பட்டது, அனிகாவின் ஒரு கவிதை அவருக்கு பிடித்த காதல்பறவைகள் பற்றியது, அவை எப்படி கூண்டை விட்டு வெளியே சென்று மேலே பறக்க ஆசைப்படுகின்றன என்பதை அந்த கவிதை கூறுகிறது. இழப்பை எதிர்கொள்ள, அனிகா தன்னுடைய இழப்பை கவிதையின் ஊடே வெளிப்படுத்துகிறார்.
“என்னுடைய கவிதைகள் நான் 11 வயதாக இருக்கும் போது வெளியிடப்பட்டது, நான் எழுதிய பெரும்பாலான கவிதைகள் என் சிந்தனையில் அவ்வப்போது உதித்தவை. அந்த நேரத்தில் எழுத்து எனக்கு உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த வடிவம் தந்தது. என்னுடைய புத்தகம் வெளியான பின்பு, அனைவரும் என்னைப் பாராட்டினர், அப்போது தான் நான் ‘எழுத்தை’ தீவிரமாக எடுத்துக் கொண்டேன், இப்போது ஒவ்வொரு நாளையும் எழுத்தை தீவிரமாக்குவதற்கான திறன்களை கற்று கொள்வதற்காக நான் செலவிடுகிறேன்,” என்று கூறுகிறார் துபாயில் இருந்து தொலைபேசியில் என்னிடம் பேசிய அந்த இளம்பெண்.
அனிகாவின் பெற்றோர் அவருடைய இளம் வயது முதலே மிகவும் ஆதரவாகவும், ஊக்குவிப்பவர்களாகவும் இருந்தனர். “என் பெற்றோர் என்னுடைய எழுத்துத்திறமையை அடையாளம் கண்டு அதற்காக எனக்கு ஆதரவும், ஊக்கமும் தந்தனர். என்னுடைய கற்பனைத் திறனுக்கு வடிவம் தந்து அவற்றை மேம்படுத்துவதற்கான விஷயங்களை எனக்கு அளித்தார். அவர்கள் எனக்கு நல்ல அறிவை வளர்த்துக் கொள்வதற்கான பழக்கத்தை ஏற்படுத்தினர். நிறைய புத்தகங்கள் படித்தது மற்றும் என்னுடைய குடும்பத்தாருடன் நடத்திய ஆரோக்கியமான விவாதங்களும் என்னுடைய சிந்தனைக்கு வடிவம் தர உதவின” என்று கூறுகிறார் இந்த வாசிப்பாளர். இவருக்கு பிடித்த எழுத்தாளர்கள் எநைட் ப்ளைடன், ஜே.கே. ரௌலிங், சி.எஸ்.லெவிஸ், லெவிஸ் கெரோல் மற்றும் டோல்கியென். வெவ்வேறு விதமான வகைகளைச் சேர்ந்த புத்தகங்களை படிக்க எனக்கு விருப்பம் என்றாலும் கற்பனைக் கதைகள் என்றால் உயிர். “எனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் கற்பனைக் கதைகளை மகிழ்ச்சியோடு படிப்பேன், அவர்களின் எழுத்து வாசகர்களின் மனதை எளிதில் கவர்ந்து, அவர்களை முற்றிலும் மாறுபட்ட வேறொரு கற்பனை உலகில் பயணிக்க வைக்கும்,” என்கிறார் அவர்.
சமன்படுத்தும் செயல்
துபாயில் உள்ள ஜெம்ஸ் சர்வதேச பள்ளி மாணவியான அனிகா, ஸ்பானிஷ், அரபிக், பிரெஞ்ச் மற்றும் ஹிந்தியை இரண்டாம் மொழியாக கற்றுக் கொள்கிறார். அவருக்கு விலங்குகளைப் பிடிக்கும், தன்னுடைய தாயார் ரோலி ஷர்மாவை போல அவர் பழைய காலத்து பியானோ வாசிப்பார்.
அனிகாவிற்கு இசைக்கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் உள்ளது, அவற்றில் சிலவற்றை வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறார் அவர். இதைத் தவிர அவர் நீச்சல், உடற்கட்டுப்பாடு, நடனம், நாடகம், இசைக் கச்சேரிகள், தொழில்நுட்ப சாதனங்கள், இன்னும்பலவற்றை தெரிந்து வைத்திருக்கிறார். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அவருக்கு பயங்கர ஆர்வம் இருப்பதாக கூறுகிறார்.
எல்லா குழந்தைகளைப் போலவே அனிகாவிற்கும் கான்பூரில் இருக்கும் அவருடைய தாத்தா பாட்டியை மிகவும் பிடிக்கும். அவர் பள்ளியில் இருந்து திரும்பியதும் அன்றைய தினத்தின் விவரங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்ள அனிகாவிற்கு மிகவும் பிடிக்கும்.
பள்ளிப்பாடங்களுக்கு அதிக தேவை இருந்தபோதும், அவர் தனக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தும் வகையில் நேரத்தை வகுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தார், அதே சமயம் ஓய்வு நேரங்களிலும் பயண நேரங்களிலும் கதை புத்தகங்களை வாசித்தார். “நான் பல்வேறு விதமான எழுத்து வகைகளை கற்றுக்கொண்டிருக்கிறேன் ஏனெனில் அவை என் பள்ளிப் படிப்பின் ஒரு அங்கமாக இருக்கின்றன சில நேரங்களில் நான் அதை தனியாகவும் செய்வேன்.”
ஜர்னி டூ அக்ரோபாலிஸ்
அனிகா தற்போது தன்னுடைய கற்பனை நாவல் ‘ஜர்னி டூ அக்ரோபாலிஸ்’ க்கான வேலைகளில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். நான்கு ஏழை குழந்தைகள் முழுவதும் சாகசம் நிறைந்த உலகிற்கு ஒரு அதிசய பயணம் மேற்கொள்வதைப் பற்றிக் கூறுகிறது இந்த கதை. அனிகாவின் நாவல் நல்ல வடிவம் பெற்று வருகிறது.
அந்தக் கதையின் முதல் அத்தியாயத்தை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அனிகா எவ்வளவு அழகாக தன் குழந்தைப் பருவ நிகழ்வுகளை அந்தக் கதையோடு பின்னி எழுதியுள்ளார் என்பதை என்னால் உணர முடிந்தது. அவர் அனீக்கா ஷர்ர்மா என்ற பெயரில் எழுதுகிறார்.
ஞானத்திற்கான வார்த்தைகள்
இந்த இளம் பெண் மிகவும் உணர்ச்சிவசப்படுபவள், முதிர்ச்சியடைந்தவர், மேலும் நட்பாக பழகுபவர். அவர் மற்றவர்களைப் போல சாதாரண 12 வயது பெண் அல்ல ஆனால் மிகவும் யோசிப்பவர், நண்பர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதை கடினமாகக் கருதுபவர்கள மத்தியில் தனித்து செயல்பட விரும்புபவர். அவர்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய ஆர்வத்தை மாற்றியமைத்துக் கொள்பவர். தன் வயதுடையவர்களுக்கு அனிகா சொல்லும் வார்த்தை, “எல்லா குழந்தைகளுக்கும் புதுப்புது எண்ணங்கள் இருக்கும், அவர்கள் தாங்கள் விரும்பியதை செய்ய வேண்டும், ஆனால் மற்றவர்களுக்காக ஒரு வேலையை தயவு செய்து செய்யாதீர்கள். உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள்; நாள்தோறும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுவதில் குறிக்கோளாக இருங்கள். உங்களுடைய படிப்பை அனைத்திற்கும் மேலே வைத்துக் கொள்ளுங்கள், உங்களுடைய மொத்த சக்தியையும் நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் சரியான திசையில் செலுத்துங்கள். கடின உழைப்புக்கு இரண்டாம் பட்சமாக இருக்காதீர்கள். நான் எப்போதும் நம்புவது: ‘எப்போதும் குரலாக இருங்கள் எதிரொலியாக அல்ல’.”
பெற்றோருக்கு அவர் கூறும் அறிவுரைகள், “பெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வழியில் ஒரு தனித்திறன் இருக்கும். குழந்தைகள் அவர்களுடைய விருப்பத்தை கண்டுபிடிக்கட்டும். அவர்கள் பல வகையிலும் சிந்தித்து, எந்த சூழலிலும் சுயமாக கருத்து தெரிவிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள அனுமதி அளியுங்கள். பெற்றோரின் நிறைவேராத குறிக்கோள்கள் மற்றும் வெறுப்புகளை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள். குழந்தைகளை ஒரு தனிநபராக அவர்களுடைய விருப்பம் மற்றும் தேர்வுக்கு மதிப்பளிப்பவர்களாக இருங்கள்.”
இந்த இளம்பெண் மூளையில் பகிர்ந்து கொள்ள பல்வேறு விஷயங்கள் உள்ளன. அவரைப் பொருத்த வரையில் இந்த உலகம் பயணிக்கும் திசை அடுத்த தலைமுறையினருக்கு மிகவும் சாதகமாக இருக்காது என்கிறார். “இந்த எண்ணம் என்னைத் தொந்தரவு செய்தது அதனால் நான் யுவர்ஸ்டோரி வாசகர்களுக்காக குறிப்பாக இந்த வரிகளை எழுதுகிறேன்:
“தி மெசேஜ்”
மக்களுக்கு இருக்கிறது விருப்பம்
ஆனால்,
உலகில் இல்லை இரக்கம்.
மனிதர்களில் உள்ளனர் இளமை, முதுமை
வெளியே மகிழ்ச்சி, உள்ளே வன்மம் என்று நடிப்பு
உலகம் அழைக்கிறது,
இருந்தும் மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்பஅறிஞர்களோடு முடிகிறது;
ஏழை, பணக்காரன் என்ற பெரிய வித்தியாசம்,
ஆனால் என்னைப் பொருத்த வரை அவை அநாவசியம்;
நாம் அனைவரும் பிறப்பால் ஒன்றுபட்டவர்கள்,
சிலர் சிரிக்கின்றனர், சிலர் அழுகின்றனர் ஏன் இந்த நிலை?
எப்படி மக்கள் கனவு காண முடியும் பகலவனைத் தொட
அவர்கள் மனதில் மற்றொருவனை வன்மம் சுட
எங்கேனும் மக்கள் பாதிப்பு மற்றும் தனிமையை உணர்ந்தால்,
பிறகெப்படி சான்றோர் தங்களை மட்டும் நினைத்து மகிழ்தல் சாத்தியம்?
உண்மையில் நாம் கூறலாமா பூமியை பசுமை...
மக்கள் மனதிலும், செயலிலும் இருக்கிறது கருமை
அனைவருக்கும் எதிர்காலத்தின் மீது இருக்கிறது அச்சம்,
பிறகு ஏன் அவர்கள் செய்கிறார்கள் இயற்கையை துவம்சம்?
நாம் அனைவரும் இயற்கையின் படைப்பு, நம்மில் எப்படி இருக்கும் தேசத்திற்கு பாரபட்சம்?
இருப்பினும் நம்பிக்கை இருக்கிறது மிச்சம்;
புரிந்துணர்வு, பராமரிப்போடு பிரச்னைக்கு உண்டு தீர்வு;
அனைவரும் சமம், அதுவே உலகம் உணர்த்தும் தெளிவு.
ஆக்கம்: தன்வி துபே | தமிழில் : கஜலட்சுமி மகாலிங்கம்