5ரூபாய் ஸ்னாக்ஸ்; 10ரூபாய்க்கு குளிர் பானங்கள்: எளிய மக்களை சென்றடையும் கோவை ப்ராண்ட்!
TABP Snacks and Beverages ஸ்நாக்ஸ் வகைகளை 5 ரூபாய் என்கிற விலையிலும் பானங்களை 10 ரூபாய் என்கிற விலையிலும் விற்பனை செய்கிறது.
பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆலோசகராக வேலை செய்து வந்தார். பல ஆண்டு கால அனுபவம் இவருக்கு உண்டு. இவரது குடும்பத்தினர் மெட்டல் கேஸ்டிங் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த வணிகத்தில் இணைந்துகொள்ள 2012ம் ஆண்டு பிரபு இந்தியா திரும்பினார். ஆனால் ஏனோ அவருக்கு இந்த வேலையில் அதிக ஈடுபாடு இல்லாமல் போனது.
“அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 15-16 மணி நேரம் வேலை செய்வேன். இந்தியா திரும்பியதும் பரபரப்பான வாழ்க்கையின் வேகம் வெகுவாகக் குறைந்துபோனது. ஒரு ஃபவுண்டரி தொடங்கினேன். எதிர்பார்த்த அளவிற்கு இந்த முயற்சியும் சவால் நிறைந்ததாக இருக்கவில்லை,” என்கிறார் பிரபு.
2016ம் ஆண்டு தொழில்முனைவு வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்தார். கிராமப்புற மக்கள் லஸ்ஸி, ஜீரா மசாலா மாதிரியான பானங்களை அடிக்கடி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இவை என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது? எந்த மாதிரியான மக்கள் இவற்றை வாங்குகிறார்கள்? மக்களால் இதற்கு செலவிட முடிகிறதா?
இந்தக் கேள்விகளுக்கு விடை தேடினார். பெப்சி, கோக்கோ கோலா போன்ற பிரபல பிராண்டுகளே இந்தப் பிரிவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 300 மி.லி கோக்கோ கோலா 20-35 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. கிராமப்புற மக்களால் இந்தத் தொகையை செலவிட முடியாது.
பிரபு ஆய்வு முடிவுகளை ஆராய்ந்தார். பானங்களுக்கான தேவை இருக்கிறது. ஆனால் இதன் விலை ஏழை மக்களின் கைகளை எட்டி அவர்களது வயிரை குளிர வைக்கும் வகையில் இல்லை என்பதை உணர்ந்தார். இந்த இடைவெளியை நிரப்பத் தீர்மானித்தார்.
இந்த முயற்சியின் பலனாக உருவானதுதான் தன்வி ஃபுட்ஸ் (Tanvi Foods). 2016ம் ஆண்டு பிரபு தனது மனைவி பிருந்தா விஜயகுமார் உடன் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினார்.
மாம்பழம், ஆப்பிள் என இரண்டு வகையான சுவைகளில் 10 ரூபாய் விலை நிர்ணயித்து சந்தையில் அறிமுகப்படுத்தினார்.
2018-ம் ஆண்டு நிறுவனத்தின் பெயர் TABP Snacks and Beverages என பெயர் மாற்றப்பட்டது. கிராமப்புற மக்களுக்கு பானங்களைக் கொண்டு சேர்க்கும் TABP 200 மி.லி அளவில் விற்பனையாகிறது. இந்நிறுவனம் 6 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.
விரிவான சந்தை ஆய்வு
தரமான பானங்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு சந்தையை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியிருந்தது என்கிறார் பிரபு.
”எங்கள் சந்தை ஆய்வுக் குழுவில் முக்கியமாக இடம்பெற்றவர்கள் எங்கள் விநியோகஸ்தர்கள். இவர்களிடம் சாம்பிள் தயாரிப்பைக் கொடுத்தோம். இவர்கள் மக்களின் பிரதிநிதிகளாக செயல்பட்டு அவர்களின் கருத்துக்களை எங்களிடம் கொண்டு சேர்த்தார்கள்,” என்றார்.
இவர்களது கருத்துக்களின் அடிப்படையிலேயே Plunge என்கிற பிராண்ட் பெயரின்கீழ் ஆப்பிள், மாம்பழம் ஆகிய சுவைகளில் இந்நிறுவனம் பானங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தயாரிப்பு மற்றும் விற்பனை
இந்நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை கோவையில் உள்ளது. இங்குதான் முக்கிய கான்செண்ட்ரேட் தயாரிக்கப்படுகிறது. முழுமையான தயாரிப்பிற்கு கோவை, பாண்டிச்சேரி, மைசூரு, ஔரங்காபாத் ஆகிய பகுதிகளில் மூன்றாம் தரப்பு யூனிட்களுடன் இணைந்துள்ளது.
இந்நிறுவனம் Plunge, Gulp ஆகிய இரண்டு பிராண்டின்கீழ் ஜீரா மசாலா, பனீர் சோடா என வெவ்வேறு வகையான பானங்கள் விற்பனை செய்கிறது. Thirsty Owl என்கிற பெயரில் ஆல்கஹால் இல்லாத பீர் 50 ரூபாய் விலையில் விற்பனை செய்கிறது.
தமிழ்நாடு, ஒடிசா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என ஐந்து மாநிலங்களில் TABP செயல்படுகிறது. படிப்படியாக வளர்ச்சியடைந்து உள்ளூர் பேக்கரி, கிரானா ஸ்டோர், விற்பனையாளர்கள் என 1.2 லட்சம் டச்பாயிண்ட்ஸ் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 20,000-க்கும் மேற்பட்ட விநியோக நெட்வொர்க் கொண்டுள்ளது.
தரவுகள் சார்ந்த அணுகுமுறை
குறைவான வளங்களுடன் செயல்பட்டதால் ஆரம்பத்திலேயே இந்நிறுவனம் ERP Genie என்கிற சொந்த க்ளௌட் சார்ந்த ஈஆர்பி அமைப்பை உருவாக்கியது. இது ஆர்டர்கள் எடுப்பது, தேவைகளை மதிப்பிடுவது, தயாரிப்புகளை அனுப்புவது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவியது.
இதுதவிர முக்கியத் தரவுகளைத் தொகுக்கவும் இந்த அமைப்பு உதவுகிறது. திருமணங்கள் நடக்கும் சீசனில் தேவை பன்மடங்கு அதிகரிப்பதை கவனித்த இந்நிறுவனம் அதற்கேற்ப விநியோகத்தை ஏற்பாடு செய்ய ஆரம்பித்தது.
இந்தியாவின் டயல் கோட் 91. TABP Snacks இந்த அடிப்படையில் Snacks-91 என்கிற பிராண்டின் கீழ் ஸ்நாக்ஸ் அறிமுகப்படுத்தியது. தென்னிந்திய மக்களின் சுவை விருப்பங்களுக்கு ஏற்ப பல்வேறு சுவைகளில் ஸ்நாக்ஸ் வகைகளை அறிமுகப்படுத்தியது. 10 கிராம் அளவு கொண்ட ஸ்நாக்ஸ் 5 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.
வருங்காலத் திட்டங்கள்
இன்றைய கொரோனா சூழல் வணிகத்தை பாதித்திருந்தாலும் வரும் நாட்களில் டி2சி முறையில் சிறு தானிய தயாரிப்புகளை வழங்க விரும்புகிறார் பிரபு. அமேசான் போன்ற மின்வணிக தளங்களில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இவைதவிர நோய் எதிர்பாற்றலை மேம்படுத்தும் பானங்கள், க்ரீன் டீ, எனர்ஜி பானங்கள் போன்றவற்றை 200 மி.லி அளவுகளில் 15 முதல் 20 ரூபாய் வரையில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா