பயிற்சி வகுப்பு செல்லாமல் யூடியூப்பில் படித்தே நீட்டில் 687 மதிப்பெண் - சாதித்து காட்டிய தமிழக மாணவன் சஞ்சய்!
தனியாக பயிற்சி வகுப்புகள் செல்லாமல் பாடப்புத்தகம் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் படித்து நீட் தேர்வில் 720க்கு 687 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் சஞ்சய்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தேர்வு முகமை மூலம் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே கட்டமாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக கடந்த மே 5-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் 4,750 தேர்வு மையங்களில் எழுதி இருந்தனர்.
ஜூன் 14-ஆம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருந்த நேரத்தில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 23 லட்சத்து 30 ஆயிரத்து 225 மாணவர்களில் 13 லட்சத்து 14 ஆயிரத்து 160 பேர் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்த 1122 தேர்வு பேர் எழுதியதில் 694 பேரும், 1214 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தேர்வு எழுதியதில் 798 பேரும், ஓசிஐயை சேர்ந்தவர்கள் 736 பேரில் 616 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து தேர்வு எழுதிய 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தேர்வில் 89 ஆயிரத்து 426 பேர் எம்பிபிஎஸ் படிக்க தகுதி பெற்றுள்ளனர். 99.997129 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ள 67 பேரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் இடம் பிடித்துள்ளனர்.
நாமக்கல் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற ஜெயந்திபூர்வஜா, ரோகித், ரஜனீஷ், சபரீசன் ஆகிய 4 பேரும் 720க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். 20 பெண் டாப்பர் பட்டியலிலும் சைலஜா மற்றும் ஜெயதிபூர்வஜா இடம்பிடித்துள்ளனர். மாணவர்களுக்கான டாப்பர் லிஸ்டில் சையத் ஆரிபின்யூசுப், ஆதித்ய குமார் பாண்டா, ஸ்ரீராம் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இடஒதுக்கீடு இல்லாத பிரிவின் கீழ் முதலிடம் பெற்றுள்ள 10 பேரில் தமிழ்நாட்டிச் சேர்ந்த சையத்ஆரிபின் யூசுப், மாணவி சைலஜா இடம் பெற்றுள்ளனர். இதே போன்று ஓபிசி டாப்பர் லிஸ்டில் இடம்பிடித்துளள 10 பேரில் மாணவர் ஸ்ரீராம் உள்ளார். எஸ்சி பிரிவில் டாப்பர் லிஸ்டில் உள்ள 10 பேரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ரஜினீஷ் இரண்டாம் இடத்தில் உ்ள்ளார்.
இது தவிர மாநில அளவிலான டாப்பர் லிஸ்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சையத் ஆரிபின் யூசுப், சைலஜா, ஆதித்யகுமார் பாண்டா, ஸ்ரீராம், ரஜினீஷ், ஜெயதிபூர்வஜா, ரோகித், சபரீசன், ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் குள்ளப்பாளையம் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தவர் சஞ்சய். +1, +2 படிக்கும் போதே யூடியூப் மூலம் நீட் தேர்வு தொடர்பான வீடியோக்களைப் பார்த்து தேர்வுக்கு தயாராகி வந்திருக்கிறார். முதல் முயற்சியிலேயே 720 மதிப்பெண்களுக்கு 687 மதிப்பெண் பெற்று சாதித்து காட்டியுள்ள சஞ்சய்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
“நான் 11 மற்றும் 12ம் வகுப்புகளை சாந்தி நிகேதன் பள்ளியில் படித்தேன், பொதுத்தேர்வோடு சேர்த்து நீட் தேர்வுக்கும் தயாராகி வந்தேன். நானே முயற்சித்து தான் படித்தேன், நீட் தேர்வு தொடர்பான வீடியோக்களைப் பார்த்து பயின்றேன், மேலும் என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு முழுவதுமாக ஆதரவு அளித்ததால் என்னால் அதிக மதிப்பெண்களை பெற முடிந்தது” என்று கூறியுள்ளார் சஞ்சய்.
சஞ்சயின் இந்த வெற்றியால் அவரது பெற்றோர் ரமேஷ் மற்றும் காஞ்சனா மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். சஞ்சய் விடாமுயற்சியோடு படித்ததன் விளைவாகவே அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறார். அவருக்குத் தேவையான வசதிகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்தோம், பள்ளியில் இருந்தும் சஞ்சய்க்கு தேவையான உதவிகளை செய்தனர். எல்லோருடைய ஆதரவும் இருந்ததால் சஞ்சயால் சாதிக்க முடிந்தது என்கிறார் அவரின் தந்தை ரமேஷ்.
10ம் வகுப்பிலேயே மருத்துவம் படிக்க வேண்டும் என்பதை இலக்காக நிர்ணயித்துக் கொண்டார் சஞ்சய். எனக்குத் தேவையானவற்றை மட்டும் செய்து கொடுத்துவிடுங்கள் நான் வீட்டில் இருந்தே படித்துக் கொள்கிறேன் என்று சஞ்சய் கூறி இருந்தார். அதனால் அரசு உதவி பெறும் பள்ளியில் +1, +2 சேர்த்துவிட்டோம். தினந்தோறும் பள்ளிக்கு சென்று படித்து வந்தார், வீட்டில் இருக்கும் போது கூட எப்போதும் படித்துக் கொண்டிருப்பார்.
“நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் படித்துக் கொண்டே தான் இருப்பார். விடாமுயற்சியோடு தினசரி படித்ததன் விளைவாகவே பயிற்சி வகுப்புகள் எதற்கும் செல்லாமல் வீட்டில் இருந்து படித்தே நீட் தேர்வில் 720க்கு 687 மதிப்பெண் பெற்றிருக்கிறார். மற்ற மாணவர்களும் இதே மன உறுதியுடன் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்,” என்று அவரின் தாயார் காஞ்சனா கூறியுள்ளார்.
நடுத்தரக் குடும்பத்தினராலும் மருத்துவ கனவை நினைவாக்க வேண்டும். நீட் தேர்வை கண்டு பயப்பட வேண்டாம், கடின உழைப்போடும் விடா முயற்சியோடும் படித்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும், என்று சஞ்சய் நிரூபித்துள்ளார்.
தகவல் மற்றும் பட உதவி: தந்தி டிவி
லத்தி பிடித்த கையில் ஸ்டெதஸ்கோப் - நீட் தேர்வு மூலம் டாக்டர் கனவை நனவாக்கிய தர்மபுரி கான்ஸ்டபிள்!