சென்னை வெள்ளம் - களத்தில் இறங்கிய பிரபலங்கள்!
சென்னை கடுமையான வெள்ள பாதிப்பினால் தத்தளித்துவரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகிறார்கள். சிலர் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பிக் எஃப் எம் ஆர்ஜேபாலாஜி மற்றும் நடிகர் சித்தார்த் தங்கள் ட்விட்டர் பக்கம் மூலமாக வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவிச் சேவைகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இருவரும் சமூக வலைதளத்தில் சூறாவளி போல செயல்பட்டு வருகிறார்கள். சித்தார்த் தன்னிடம் ஐந்து கார்கள் இருப்பதாகவும் அதை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க பயன்படுத்த போவதாகவும் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் பல இளைஞர்களை உதவிக்கு வாலன்டியர் செய்யவும் அழைத்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவே #chennaimicro என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பலரையும் ஒருங்கிணைத்தார்கள். ஆர்ஜேபாலாஜியும் சித்தார்த்தும் பல பகுதிகளுக்கு நேரடியாக சென்று மீட்புபணிகளில் பங்கேற்று வருகிறார்கள்.
பாடகி சின்மயியும் தனது ட்விட்டர் பக்கத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். உதவுபவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் ட்வீட்டுகளை தன் பக்கத்தில் மறுபகிர்வு செய்கிறார். தானே சில பகுதிகளுக்கு சென்று உதவியும் வருகிறார்.
நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு பட்டினம்பாக்கம் பகுதியில் சென்று உதவினார். கோட்டூர்கனல் ரோட்டில் பார்வையிட்ட படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
விஷால் மற்றும் மனோபாலாவும் குஷ்புவின் குழுவில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
நடிகர் அஜீத் வெள்ளம் பாதித்த மக்களுக்கு 60 லட்சம் ரூபாய் நிதியாக வழங்கியுள்ளார். அவரது மனைவி ஷாலினி மந்தைவெளி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்று அங்கிருப்பவர்களுக்கு உதவினார்.
நடிகர் பாபிசிம்ஹா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வலசரவாக்கம் பகுதியில் இருப்பவர்களுக்கு தன்னால் முடிந்த மீட்புப்பணியை செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார். அதே போல சில உதவிகளின் தேவைகளை பற்றிய தகவல்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதிஷ் பாதிக்கப்பட்டவர்களை தன் குழுக்கள் உதவியுடன் படகு மூலம் மீட்க உதவி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகிப்பதிலும் ஈடுபட்டுவருகிறார்.
நேரடியாக மக்களை சந்தித்து உதவ முடியாத நடிகர்கள் சிலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவியை பணமாக வழங்கி வருகிறார்கள். நடிகர் ராகவா லாரன்ஸ் வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்து லட்சம் ரூபாயும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.
மலையாள நடிகர் மம்முட்டி அடையாறு, வில்லிவாக்கம், வலசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட சென்னையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் செயல்படும் மீட்பு குழுவின் தொடர்பு எண்ணை தன் முகநூல், ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார். மேலும் அவர்கள் தங்குவதற்கான இடங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
மக்களுக்கு ஒன்றென்றென்றால் காப்பாற்ற ஹீரோக்கள் வருவார்கள் என்பது சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் என்று இந்த சென்னை வெள்ளத்தில் நிரூபணமாகி இருக்கிறது.