பேப்பர் போட்டு மாதம் ரூ.250 சம்பாதித்த சித் இன்று பேஷன் தொழிலில் சாதித்தது எப்படி?
அலுவலக உதவியாளராக துவங்கி, பேஷன் தயாரிப்பு நிறுவனம் நடத்தும் அளவுக்கு முன்னேறிய பெங்களூரு இளைஞரின் ஊக்கம் அளிக்கும் வெற்றிக்கதை.
பெங்களூருவைச் சேர்ந்த சித் நாயுடு, 2007ல் தந்தையை இழந்தார். இதனையடுத்து குடும்பத்திற்கு உதவுவதற்காக பள்ளிக்கு செல்லும் முன் நாளிதழ்கள் போடும் பணியை மேற்கொண்டார். மாதம் ரூ.250 கிடைத்தது. ஆனால், அவரது குடும்ப சூழல் மோசமாக இருந்தது.
இந்த நிலையில் பேஷன் துறையில் நுழைந்து மாடலாக வேண்டும் எனும் ஆசை தொலைதூர கனவாக இருந்தது, கல்லூரிக்கு சென்று படிக்க முடியா என்று கூட தெரியவில்லை. பத்தாவது படித்தவுடன் மாதம் 3,000 ரூபாய் சம்பளத்தில் அலுவலக உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
ஆனால், பேஷன் துறையில் அவருக்கு ஈடுபாடு நீடித்தது. வேறு வேலைகளுக்கு மாறிய நிலையிலும், பேஷன் துறையில் தனக்கான வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டார்.
பத்தாண்டுகள் கழித்து 2017ல் இந்த தொடர்புகளைக் கொண்டு அவர் தொழில்முனைவோர் ஆனார்.
பேஷன் படப்பிடிப்பு, மாடல் உருவாக்கம், கலை இயக்கம், தொலைக்காட்சி விளம்பரங்கள் ஆகியவற்றுக்கான ’Sid Productions' நிறுவனத்தைத் துவக்கினார். ஓராண்டில் அவரது வர்த்தகம் செழித்து ரூ.1.3 கோடி விற்றுமுதல் ஈட்டினார். இப்போது ரூ.3 கோடி விற்றுமுதலை இலக்காகக் கொண்டுள்ளார்.
“பத்தாவது முடித்த பிறகு, என் பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்லும் அதே பேருந்தில் நான் வேலைக்குச் செல்வேன். அவர்கள் என்னை தரக்குறைவாக நடத்தியதால் வேதனை அடைந்தேன். இப்போது அவர்களே என்னை வியப்புடன் பார்க்கின்றனர்,” என்கிறார் 27 வயதான் சித்.
எஸ்.எம்.பிஸ்டோரி உடனான நேர்காணலில் சித் தனது வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்கிறார்.
எஸ்.எம்.பிஸ்டோரி: அலுவலக உதவியாளர் என்பதில் இருந்து முன்னேறியது எப்படி?
சித்: என் அம்மா தொழிற்சாலை ஒன்றில் குமாஸ்த்தாவாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நான் பத்தாவது முடித்ததும் வேலைக்கு சேர்ந்தேன். பெங்களூருவில் இருந்த தணிக்கையாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகச் சேர்ந்தேன். 15 வயதில் என்னை யாரும் பணிக்கு அமர்த்திக்கொள்ளத் தயாராக இல்லை என்பதால், வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. ஒரு சில மாதங்களில் வேலையை விட்டுவிட்டேன். அடுத்த வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. காலப்போக்கில் அலுவலக உதவியாளர் என்பதில் இருந்து முழு கடையையும் பார்த்துக்கொள்ளும் நிலைக்கு முன்னேறினேன்.
நியூ கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த போது சுவாரஸ்யமான விஷயம் நிகழ்ந்தது. மார்க்கெட்டிங் துறையில் இருந்தவர்களுடன் நட்பு உண்டானது. உல்லாஸ் எனும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நண்பரானார். உல்லாஸ் வேலையை விட்டு செல்ல இருப்பதாகவும் அவரது இடத்திற்கு என்னை வருமாறும் கேட்டுக்கொண்டார். நானும் அந்த வேலையில் சேர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிக்கத்துவங்கினேன்.
எஸ்.எம்.பிஸ்டோரி: நிகழ்ச்சி ஏற்பாட்டி இருந்து பேஷன் நிறுவனம் துவங்கியது எப்படி?
சித்: அந்த வேலையை விட்டு விலக விரும்பினேன். மாதம் ரூ.15,000 சம்பளம் கிடைத்தது. ஆனால் ரயிலில் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியிருந்தது. எனது நண்பர் உல்லாஸ் தனியே நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் நடத்திக்கொண்டிருப்பதை அறிந்தேன். மாலில் வேலை செய்ய விரும்பவில்லை என அவரிடம் கூறினேன்.
அப்போதும் உல்லாஸ் வேலையை விட இருப்பதாகக் கூறினார். நான் அவரது இடத்தில் சேர்ந்தேன். ஸ்கொயர் ஒன் எனும் அந்த நிறுவனம் பேஷன் துறை பின்னணியை கொண்டிருந்தது. இந்நிறுவனத்தில் பணியாற்றியது எனக்கு உதவியாக இருந்தது. பேஷன் துறையில் தொடர்புகளை வளர்த்துக்கொண்டேன். பேஷன் நிகழ்ச்சிகள், வாடிக்கையாளர் கையாளுதல் தொடர்பாகவும் அனுபவம் உண்டானது. கம்ப்யூட்டர் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டேன்.
அங்கு பணியாற்றியபடி, பிரிலான்சாகவும் வேலை செய்தேன். 2017ல் வாக் பேஷன் இதழுக்காக பணியாற்றினேன். அதன் முகப்பு அட்டைக்கு பங்களித்தேன். அந்த படம் வைரலானது. மேலும், பல பத்திரிகைகளுக்கு பணியாற்றினேன். மேலும் பணிகள், குவிந்த போது சொந்தமாக தொழில் துவங்க விரும்பினேன். அதன்படி வேலையை விட்டு விலகி, ’சித் புரடக்ஷன்’ நிறுவனத்தை பதிவு செய்தேன்.
எஸ்.எம்.பிஸ்டோரி: சிட் புரடக்ஷன்ஸ் நிறுவனம் வளர்ந்தது எப்படி?
சித்: துவங்கிய போது ஒரு வாடிக்கையாளரும் இருக்கவில்லை. சமூக ஊடகங்களில் எனது பணிகளை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தேன். மிந்த்ரா இணையதளம் மூலம் திருப்பு முனை உண்டானது. அவர்கள் என்னை அணுகி ரூ.15 லட்சம் மதிப்பிலான விளம்பரப் படப்பிடிப்பை அளித்தனர். அப்போது இந்தத் தொகை மலைப்பாக இருந்தது.
எனினும் படப்பிடிப்பை நடத்த முதலீடு தேவைப்பட்டது. என் கையில் ஒரு லட்சம் தான் இருந்தது. உறவினர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி ரூ.7 லட்சம் திரட்டி, ஸ்டூடியோ, மாடல் போன்றவற்றுக்கான ஏற்பாடுகளை செய்தேன்.
எல்லோரும் தங்கள் முடிந்த வகையில் உதவினர். படப்பிடிப்பை முடித்துவிட்டாலும், மொத்த செலவு 15 லட்சம் ஆனதால் லாபம் கிடைக்கவில்லை. எனினும், அந்நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. பெரிய ஏஜென்சிகள் இருந்த போதிலும் என்னை நம்பினர். இப்போது எனது இருப்பிற்காக மட்டும் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பெறுகிறேன்.
எஸ்.எம்.பிஸ்டோரி: உங்களது மற்ற பெரிய திட்டங்கள்?
சித்: மிந்தரா பெரிய வாடிக்கையாளர். மேலும், ஸ்கல்லர்ஸ், ஜெலஸ்21, இண்டொகோநேஷன் போன்ற நிறுவனங்களுக்காக பணியாற்றுகிறேன். பைல்ஸ்டைல் மற்றும் மேக்ஸ் போன்ற நிறுவனங்களுடனும் பணியாற்றுகிறேன். என் விரிவான வலைப்பின்னல் தொடர்புகள் காரணமாக வாடிக்கையாளர்கள் திருப்தி அடைகின்றனர்.
இருப்பினும் எனது கவனம் பேஷம் மற்றும் மதிப்பை உருவாக்குவதில் தான். பல ஏஜென்சிகள் இருந்தாலும் அவை பணத்திற்காக செயல்படுகின்றன. எனது ஈடுபாடு தனித்தன்மையாக அமைகிறது. நான் வீட்டில் இருந்தே செயல்பட்டு எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறேன். என்னிடம் பத்து பேர் கொண்ட குழு இருக்கிறது. படப்பிடிப்பின் போது மற்றவர்களை அமர்த்திக்கொள்கிறோம். பேஷன் புகைப்படக் கலைஞரான என் சகோதரர் கிரணும் எங்களுடம் செயல்படுகிறார்.
எஸ்.எம்.பிஸ்டோரி: உங்கள் வர்த்தகத்தில் உள்ள சவால்கள் என்ன?
சித்: படப்பிடிப்புகள் சில நேரத்தில் திட்டமிட்டதை விட நீளலாம். கலைஞர்கள், மாடல்களை கையாள்வதும் சிக்கலானது. ஒரு முறை படப்பிடிப்பின் போது எல்லா அனுமதி பெற்ற நிலையிலும் காவல்துறையினருக்கு பதில் சொல்ல வேண்டியிருந்தது. சில நேரங்களில் மாடல்கள் கடைசி நேரத்தில் பின்வாங்கிவிடலாம். குறுகிய காலத்தில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
வாடிக்கையாளர் பணம் தருவதும் ஒரு சிக்கல். 30 நாட்களுக்குள் வராமல் 90 நாட்கள் வரை தாமதமாகலாம். இவை எல்லாவற்றையும் கவனித்து செயல்பட வேண்டும். பல வேலைகளை செய்யத்தெரிய வேண்டும்.
எஸ்.எம்.பிஸ்டோரி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
சித்: இந்த பேஷன் துறையின் என்னுடைய பிராண்டை வளர்க்க விரும்புகிறேன். அதிக வாய்ப்புகள் வருவதால் தாய்லாந்து, சைபிரியா போன்ற இடங்களுக்கு சென்று படப்பிடிப்பை நடத்த விரும்புகிறேன். ஒரு கோடி மதிப்பில் ஒற்றை திட்டத்தை செய்ய விரும்புகிறேன்.
என்னுடைய பணிகளை சமூக ஊடகத்தில் வெளியிடுகிறேன்.
மும்பை மற்றும் தில்லியில் அலுவலகம் திறக்க விரும்புகிறேன். திரைப்பட இயக்கம் பயிலும் ஆர்வமும் இருக்கிறது. சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற வேண்டும் என்பதும் பாலிவுட்டில் நுழைந்து இயக்கம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்பது என் கனவு.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்