Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

கார்த்திக் புகழேந்தி என்ற கதைசொல்லியின் கதை!

கார்த்திக் புகழேந்தி என்ற கதைசொல்லியின் கதை!

Monday January 18, 2016 , 5 min Read

“மகிழ்ச்சியாக இருக்கிறேன். சென்னைக்கு வந்த போது, எனக்கு இங்கு யாருமே அறிமுகமில்லை. ஆனால், இன்று உறவு சொல்லி அழைக்கும் ஆயிரம் உயிர்களை இந்த நகரம் எனக்கு அளித்திருக்கிறது. கரிசல் இலக்கியத்தின் ‘முன்னத்தி ஏர்’ கி.ரா-வின் வழிகாட்டுதலின்படி ‘கதைசொல்லி’ சிற்றிதழின் முக்கியப் பொறுப்பை ஏற்று, செய்துக் கொண்டிருக்கிறேன். ஞாயிற்றுக் கிழமையானால், எனக்கென இருக்கும் கேமராவையும், பைக்கையும் எடுத்துக் கொண்டு ஊர் பல சுற்றுகிறேன். யதார்த்தமாக, தன்னிறைவாக இருக்கிறேன். ”

கார்த்திக் புகழேந்தியின் கதையை மகிழ்ச்சியோடு மட்டும் தான் தொடங்க விரும்புகிறேன்.

வட்டார வழக்கில், மனதில் தைக்கும் சிறுகதைகள் தான் கார்த்திக் புகழேந்தியின் அடையாளம். ‘வற்றா நதி’- சிறுகதை தொகுப்பு, இவருடைய முதல் புத்தகம். இரண்டாவதாய், ‘ஆரஞ்சு மிட்டாய்’ அண்மையில் வெளியிடப்பட்டது. இளம் எழுத்தாளர்கள் வரிசையில், நிச்சயமாக ஒரு சிறப்பு இடம், கார்த்திக் புகழேந்திக்கு உண்டு.

image


தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய நேர்காணல்...

“எனக்கு சொந்த ஊர் பாளையங்கோட்டை, திருநெல்வேலி. கல்விக்கு ‘ஆக்ஸ்ஃபோர்டு நகரம்’ எனப் பெயரெடுத்த ஊர். அதே ஊரிலேயே, கதீட்ரல் மேல்நிலைப் பள்ளியில் உயர்கல்வியோடு, பள்ளிப்படிப்பென்பது முடிந்துப் போனது. அதற்கு வீட்டின் பொருளாதாரம் முக்கியமானக் காரணம். அப்பா இளம் வயதிலேயே தவறியதால், வளர்ப்புத் தந்தையின் அனுகிரகத்தாலும், அம்மாவின் உழைப்பினாலும் தான் வளர்ந்தேன். படிக்கும் போதே வேலைக்குச் சென்று, அந்த வருமானத்தை வீட்டுச் செலவிற்கு உபயோகிக்க வேண்டிய சூழல் இருந்தது.

படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் சேட்டை தாங்காமல், ஹாஸ்டலில் சேர்த்து விட்டார்கள். அந்த விடுதி நாட்களில் தான் நூலகத்தில் தஞ்சம் புகுந்தேன். அங்கிருந்த புத்தகங்கள் வழியாக கற்பனை விரியும் போது, தனியே உட்கார்ந்து எழுதத் தொடங்கினேன். என் கையெழுத்து அழகாக இருக்கும் என்றொரு பிரம்மை. அதனால், பக்கம் பக்கமாய் எழுத தொடங்கினேன்.

"சில காலம் கழித்து, சென்னை நோக்கி வந்தேன். பகலில் பல வேலைகள் செய்தேன். இரவில், சிட்டி யூனியன் பேங்க் ஏ.டி.எம் -ல் செக்யூரிட்டி வேலை. அந்த பேங்க் ஏ.டி.எம் எனக்கு ஒரு போதி மரம். என்னுடைய பலக் கதைகள் எழுதப்பட்டது அங்கே தான்”, என்கிறார்.

image


அங்கு தொடங்கிய எழுத்துப் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

2009, 2010 களில் எல்லாம் ஃபேஸ்புக்கில் தமிழில் எழுதுபவர்கள் அதிகம் இல்லை. புலம் பெயர்ந்த தமிழர்கள், அரபு நாடுகளுக்கு வேலைக்குப் போனவர்கள் தான் அதிகமாக தமிழில் எழுதுவார்கள். இந்த நண்பர்களுக்கென கூட்டமைப்பாய் சில குழுக்கள் இருந்தது. அதில் தினம் ஏதேனும் ஒன்றைப் பற்றி விவாதிப்போம், கருத்துக்களை பகிர்ந்துக் கொள்வோம். அப்போது நண்பர் ஒருவர், காதல் கவிதைகள் எழுத பல பேர் இருக்கிறார்கள், சமூகம் சார்ந்து எழுதுங்களேன் என்று சாதாரணமாய் சொன்னதை நான் கொஞ்சம் தீவிரமாய் எடுத்துக் கொண்டேன். அப்படித்தான், நான் முதல் கதை எழுதிய போது நண்பர்கள் கொண்டாடினார்கள்.

பிரகாஷ் என் நண்பன், கதைகளை புத்தகமாய் வெளியிடு என்றான். நான் அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. சோம்பேறித்தனம். அதனால் அவன் என்னுடன் சண்டைப் போட்டு ஆறு மாதங்கள் பேசவே இல்லை. ‘வற்றாநதி’ உருவானதற்கு அவர் ஒரு முக்கியக் காரணம். 

தென் இந்தியாவில், கோடைக்காலத்திலும் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஜீவ நதி தாமிரபரணி. அதன் காரணமாய் தான் ‘வற்றாநதி’ எனப் பெயரிட்டேன். புத்தகத்தின் உள்ளடக்கம் சிறுகதைகள். அந்த ஊர் மக்களின் காதல், சண்டைகள், கோபம், விழாக்கள், கொண்டாட்டங்கள், நம்பிக்கைகள் என பால்யம் சார்ந்த கதைகள் தான் அவை. 2014ல் அகநாழிகை பதிப்பகம் வெளியிட்டது. அதில் ஒரு பதிப்புக் கூட இப்போது என் கையில் இல்லை.
image


இரண்டாவது புத்தகம் ‘ஆரஞ்சு மிட்டாய்’ எனப் பெயர் வைக்கக் காரணம் என்ன?

அது ஒரு வேடிக்கையான விஷயம். சுதந்திர தினத்தின் போது, ‘ஆரஞ்சு மிட்டாய் கூட வாங்கித் தர மாட்ட’னு நண்பர்கள் பலர் விளையாட்டாய் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனால், ஆரஞ்சு மிட்டாய் தானே வேண்டும், பிடியுங்கள், அடுத்த புத்தகத்தின் பெயரே ஆரஞ்சு மிட்டாய் தான் என்று பதில் சொன்னேன். அதையும் கடந்த உண்மை என்னவென்றால், எண்பதுகள், தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு ஆரஞ்சு மிட்டாய், தம் பால்ய காலத்தை நினைவு படுத்தும். ஓட்டை காலணா, ஆரஞ்சு மிட்டாய் என்றெல்லாம் சொல்லும் போது உங்களுக்கு எதுவும் தோன்றாது ஆனால் எங்கள் தலைமுறைக்குத் தான் அந்த உணர்வு தெரியும், புரியும்.

ஆரஞ்சு மிட்டாய், சிறுகதை தொகுப்பு தான். ஆயிரத்து எண்ணூறுகளில் உள்ள கதைகளும் இருக்கும், ஆயிரத்து தொன்னூறுகளில் உள்ள கதைகளும் இருக்கும். இதற்காக பெரிய பெரிய புத்தகங்களை படித்து ஆய்வு செய்ய எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்தது எல்லாம் மனிதர்கள் தான். மனிதர்களுடம் இயல்பாக, எளிதாக பழகுவதனால் பல யதார்த்தமான கதைகளை எல்லாம் கேட்கிறேன். அது தான் நான் செய்யும் ஆய்வுப் பணி.

image


எழுத்துத் துறையில் கிடைக்கும் வருமானம் வாழ்க்கை நடத்தப் போதுமானதாக இருக்கிறதா?

இதை நாம் இரண்டு விதமாக பார்க்கலாம். முழு நேரமாக படித்துப் படித்து எழுதிக் கொண்டே இருந்தால் அதன் மூலமாக வருமானத்திற்கு வழி உண்டு. மறுபுறம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகத்தை, பல ஆய்வுகள் செய்து எழுதும் எழுத்தாளர், அந்த புத்தகத்தின் மூலமாக வரும் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது. அது, பதிப்பகத்தை சார்ந்தது. பதிப்பகங்கள், தமக்கு பெரு நஷ்டம் ஏற்படாதவாறு செயல்படுகின்றன. அவ்வளவு தான்.

மேலும், இங்கு வாசிக்கப்பட வேண்டிய, இன்னும் பலரை சென்றடைய வேண்டிய எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றனர். ஸ்ரீவில்லிப்புதூர்க்காரரான பாரத தேவி, மிக யதார்த்தமாக, அங்குள்ள வாழ்க்கையை கதைகளாக்கியிருப்பார். பிரம்மாண்டமான அடையாளத்தை உருவாக்கியிருக்கும் எழுத்தாளர் ஒருவரின் கதைகளை எல்லாம் அடித்துத் தூக்குகிற கதைகள் இவரிடம் கிடைக்கும். சூரங்குடி முத்தானந்தமிடம் போனால், நீங்கள் எல்லாம் கேட்டே இராத பல கிராமத்துக் கதைகளால் அப்படியே நொறுக்கித் தள்ளுவார்.

ஒரு கல்லூரிப் பெண்ணிடம் மாடுகளை ஜல்லிக்கட்டில் பயன்படுத்தாமல் வேறெப்படி பயன்படுத்தலாம் என்றால்,‘ பால் கறக்கலாம்’னு பதில் வருது. காளை மாட்டில் எப்படிப் பால் கறக்க முடியும்? இப்படி மாடுகள் பற்றி அவர் ஒரு கதை எழுதியிருப்பார்.

உங்கள் நிலத்தில் நெல் விளைகிறதெனில், அதில் அரசிற்கு கொடுக்க வேண்டிய வரிப் பணம் என ஒரு தொகையை நிர்ணயிப்பார்கள். அந்தத் தொகையை செலுத்தாவிட்டால், உங்கள் நிலத்தை, மாடுகளை எல்லாம் ‘ஜப்தி’ பண்ணுவார்கள். அப்படி ‘ஜப்தி’ செய்யப்பட்ட மாடுகளை கொண்டு அடைக்க, கம்புகளை வைத்து வேலி கட்டி, தகரங்களால் மறைத்து வைத்திருக்கும் ‘பவுண்டு’ என்றொரு இடம் இருக்கும்.

குறிப்பிட்ட நபர் பணம் கொடுத்து மாடுகளை மீட்கும் வரை, அந்த மாடுகள் பவுண்டிலேயே தான் இருக்கும். அந்த இரும்புத் திரைக்கு நடுவில் எங்கேயாவது ஓட்டைப் போட்டு, தன் மாடுகள் உணவில்லாமல் நோஞ்சானாக இருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுவான் விவசாயி. பழமையை அறிய ஆர்வமில்லாமல், அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடக்கும் நமக்கு இதைப் போன்ற கதைகள் எல்லாம் எப்போது தெரியும்?

image


அதற்கு, எழுத்தாளர்கள் தங்களை ‘விளம்பரப்படுத்தாமல்’ இருப்பதும் ஒரு காரணம் தானே?

பாரதியார், தன் இருபத்து ஒன்பது வயதில், ‘என்னுடைய படைப்புகளைத் தொகுத்து புத்தகமாக்க வேண்டும். பண உதவி தேவை’யென நண்பர்களுக்கு கடிதம் எழுதினார். அவருக்கு மொத்தம் சேர்ந்ததே நானூறு ரூபாய் தான். அவர் இறந்த பிறகு செல்லம்மாள், கடன் வாங்கி ‘சுதேச கீதங்களை’ வெளியிட்டார். அதை விற்கவும் முடியவில்லை. நமக்கு, நன்றாகத் தெரிந்த ஒரு படைப்பாளியின் நிலையே இவ்வளவு மோசமாக இருந்தது எனும் போது, நமக்கு தெரியாத இடத்தில் இருக்கும் திறமையான எழுத்தாளர்களின் நிலை எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்? நிச்சயம் அவர்கள் தங்களை ‘விளம்பரப்படுத்த’ மாட்டார்கள். நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பம் அவர்களுக்கு பரிச்சயமில்லாதது. நாம் தான் அவர்களுடைய எழுத்துக்களை வெளிச்சப்படுத்த வேண்டும்.

கார்த்திக் புகழேந்தியுடன் பேசி முடிக்கும் கணம், உங்கள் வரலாற்றை தெரிந்துக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் தினம் கடக்கும் ஒரு தெருவின் பெயர்க்காரணம் பற்றி ஆய்வு செய்யவும் முடிவெடுக்கலாம். எனக்கு, பள்ளியில் வரலாறு பயிற்றுவித்த ஆசிரியை தான் நினைவிற்கு வந்தார்.

‘வற்றா நதி’யின் இரண்டாவது கதையில், தென்னை மரங்களும், வண்டை உண்ணும் ஆந்தைகளுமாய் அழகான வேளாண் வாழ்க்கையை விவரித்திருப்பார் கார்த்திக் புகழேந்தி. பல படைப்பாளிகளின் கனவு, இயற்கை விவசாயமாய் தான் இருக்கிறது. இயற்கை விவசாயத்தின் மேல் அவ்வளவு காதல். சில வருட நகர வாழ்க்கைக்குப் பிறகு, திருநெல்வேலிக்கு சென்று விவசாயம் செய்யவிருக்கிறார்.

எழுத்து வாழ்க்கையில் மேன்மேலும் வளரவும் , விளை நிலம் உம் மனம் போல் செழிக்கவும், வாழ்த்துக்கள், தோழா!