பொறியாளர்கள் திறன் வளர்த்து வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் கோவை ஸ்டார்ட் அப்!
2020 ல் துவங்கப்பட்ட கோவையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் Machenn Innovations பொறியயல் மாணவர்களுக்கான டிஜிட்டல் உற்பத்தி பயிற்சியை அளிக்கிறது.
திறன் மேம்பாட்டிற்கான தேவை அதிகரித்து வருகிறது. வேலைவாய்ப்பைப் பெற பட்டம் மட்டும் போதாது என்பதை பலரும் உணர்ந்திருக்கின்றனர்.
2017ல் பொறியியல் பட்டம் பெற்று வேலைவாய்ப்புக்கு முயற்சித்த போது 17 நிறுவனங்களால் நிராகரிக்கப்பட்ட விஷ்னு, இதை நன்றாக உணர்ந்திருக்கிறார். பயோமெடிக்கல் பொறியாளரான விஷ்ணு, ஜூனியர் விற்பனையாளராக வேலை பெற்றாலும், தனது பொறியியல் படிப்பு அங்கு பயன்படாது என்பதை தெரிந்து கொண்டார்.
எனவே, கடந்த ஆண்டு தனது கல்லூரி ஜூனியர் நிவேதிதாவுடன் இணைந்து, பொறியியல் மாணவர்களுக்கு டிஜிட்டல் உற்பத்தி பயிற்சி அளிக்க மக்கேன் இன்னவேஷன்ஸ் (Machenn Innovations) நிறுவனத்தை துவக்கினார்.
“என்னைப்பொருத்தவரை, உயர்கல்வி என்பது தனிப்பட்ட தன்மை கொண்டதாக, தொழில்துறை சார்ந்ததாக இருக்க வேண்டும். பொறியியல் மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த பயிற்சி அளிக்க விரும்புகிறோம் மற்றும் திறன்மிக்கவர்களை பயிற்சி ஊழியர் அல்லது வேலைவாய்ப்புடன் இணைக்க விரும்புகிறோம்,” என்கிறார் விஷ்ணு.
திறன்மேம்பாடு
இந்த ஸ்டார்ட் அப் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மீது கவனம் செலுத்துவதாகக் கூறுகிறார். மருத்துவச் சாதனங்கள், இம்பிளேண்ட் வடிவமைப்பு, சர்ஜிகல் மாடலிங், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி அளிக்கின்றனர் இவர்கள்.
“பதிவு செய்யப்பட்ட பாடங்கள் மற்றும் நேரடி பயிற்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. தொழில்துறையை அணுகி தற்போதையை தேவையை தெரிந்து கொண்ட பிறகு பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. திறன் மிக்க மாணவர்கள், தொழில்துறை வாய்ப்புகளை பெற வைப்பது எங்கள் நோக்கம். வேலைவாய்ப்புக்கு உதவினாலும், பயிற்சி ஊழியர் வாய்ப்பில் தான் கவனம் செலுத்துகிறோம்,” என்கிறார்.
மாணவர் சேர்க்கையாக கல்லூரிகளில் இந்த ஸ்டார்ட் அப் கவனம் செலுத்துகிறது. அதிகார்ப்பூர்வ இணையதளம் மூலம் மாணவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
காசிபூர் ஐஐஎம்.எம்- FIED ல் உருவாக்கப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் இந்தியா முழுவதும் 15 கல்லூரிகளுடன் இணைந்து செயல்படுவதாக தெரிவிக்கிறது.
மேலும், டிஜிட்டல் உற்பத்தி பயிற்சிக்காக 3டி பிரிண்டிங் லேப் வசதியும் அளிக்கிறது.
வர்த்தகம்
சேவைக்கேற்ற கட்டணம் மாதிரியில் ஸ்டார்ட் அப் இயங்குகிறது. இதுவரை 3,000 மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. 60 சதவீதம் பேருக்கு பயிற்சி ஊழியர் வாய்ப்பு பெற்றுத்தந்துள்ளது.
சொந்த நிதியில் செயல்படும் இந்த ஸ்டார்ட் அப் ரூ.16 லட்சம் முதலீடு செய்துள்ளது. IIM உதய்பூர் கீழ் இயங்கும் லாஞ்ச் அண்ட் ழூம் 3.0 திட்டம் கிழ் தேர்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் நிதி பெற்றுள்ளது. Wadhwani Foundation ஆதர்வு பெற்றுள்ளது.
எதிர்கால பணிச்சூழல் தேவை குறித்த மெக்கென்சி குலோபல் சர்வே, நிறுவனங்கள் ஏற்கனவே திறன் இடைவெளியை உணர்கின்றன அல்லது அடுத்த ஐந்தாண்டுகளில் உணரும் நிலை உள்ளதாகத் தெரிவிக்கிறது.
திறன் வளர்ச்சி பயிற்சியில் இந்த ஸ்டார்ட் அப், Coursera, Udemy, Skill-Lync, உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது.
“முதலீட்டாளர்கள் மற்றும் அரசு மாணியம் மூலம் துவக்க நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதாக,” விஷ்ணு கூறுகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: ஸ்ரேயா கங்குலி | தமிழில்: சைபர் சிம்மன்