குறைந்த விலையில் துணி பேட்களை தயார் செய்யும் மருத்துவர்!
பெண்களின் சுகாதாரத்தின் மீது அக்கறைக் கொண்டு குறைந்த விலையில் தரமான துணி பேட்களை தயாரிக்கிறார் மருத்துவர் அபிராமி பிரகாஷ்.
பெண்களின் சுகாதாரம் மிகவும் முக்கியமான ஒன்று. தொழில்நுட்பம் மற்றும் நாகரிகம் வளர்ந்தாலும் இன்றும் இந்தியாவின் பல இடங்களில் மாதவிடாய் காலங்களில் பின்பற்றக்கூடிய சுகாதாரங்களைப் பற்றி பெண்கள் அறியவில்லை. அப்படியே தெரிந்தாலும் சானிட்டரி பேட்களை வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலையில் பலர் இல்லை. இதற்கு தீர்வுக்கானும் விதமாக துணி பேட்களை அறிமுகப்படுத்தியுள்ளார் மருத்துவர் அபிராமி பிரகாஷ்.
மாதவிடாயின்போது துணிகளை பயன்படுத்துவதை விட்டு இப்பொழுது தான் சானிட்டரி பேட்களை பயன்படுத்துகிறோம், மீண்டும் ஆதிகாலத்து துணிகளுக்கே செல்ல வேண்டுமா? இது எந்த அளவிற்கு சுத்தமானதா? போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் அபிராமி...
’பிறை’ என்னும் துணி பேட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் அபிராமி. இயற்கை மருத்துவரான இவர் நான்கு வருடங்களாக மார்பக புற்று நோய், கருப்பை வாய் புற்று நோய் பொன்றவற்றை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வந்தார். மேலும் பள்ளி கல்லூரியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்தும் கற்பித்து வந்தார்.
“நான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்த போது, பெண்கள் தங்கள் வாழ்நாளில் 130 மாதவிடாய் கழிவுகளை ஏற்படுத்துகிறார்கள். அதிலும் சானிட்டரி பேட்கள் மக்குவதற்கு 800 ஆண்டுகள் ஆகுகிறது என்று தெரிந்து கொண்டேன்,” என்கிறார்.
இது சுற்றுச்சூழலை பாதிக்கிறது அடுத்து சானிட்டரி பேட்களில் பயன்படுத்தப்படும் நீரை உறுஞ்சும் ஜெல் உடலுக்கு கெடுதலானது. சூற்றுச்சூழல் மற்றும் உடலை பாதிக்கும் சானிட்டரி பேட்களுக்கு மாறாக ஒன்றை பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்ததாக குறிப்பிடுகிறார் அபிராமி. இதனால் 4 வருடத்திற்கு முன்பே துணி பேட்களுக்கு மாறிய இவர் துணி பேட்கள் எந்த பாதிப்பையும் தராமல் பயன்படுத்தவும் எளிமையாக இருப்பதாக உணர்ந்தார்.
“இதனால் எனது பிரச்சாரத்தின் போது துணி பேட்களை பற்றி பேசினேன், பெண்கள் அதை பயன்படுத்த தயாரானாலும் எப்படி, எந்த துணிகளை பயன்படுத்துவது எனத் தயங்கினர். அதன் பின் தோன்றியதே பிறை துணி பேட்கள் தயாரிப்பு,” என்கிறார்.
கடந்த ஜூலை மாதம் தனது சொந்த ஊரான சிவகாசியில் துணி பேட்களை தயாரிக்க முடிவு செய்தார். கேரளா கோட்டயம் பகுதியில் வசிக்கும் இவர் தனது அம்மா மற்றும் சகோதரியின் உதவியோடு பேட்களை தயாரித்தார். பிரத்தியேகமாக நிறுவனம் அமைக்காமல், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் பேட்களுக்கான துணிகள் மற்றும் வடிவமைப்பை கொடுத்து தைத்து தரச் சொல்கிறார்கள். ஊரக பெண்கள் தயார் செய்யும் பேட்களில் மாதம் 300 பேட்கள் வரை தற்போது விற்பனை ஆகின்றது.
“துணிகள் பயன்படுத்துவது சுகாதாரமற்றது என முன்பு கூறியதற்குக் காரணம் பழைய துணிகளை யாருக்கும் தெரியாத வகையில் சரியாக சுத்தம் செய்யாமல் மற்றும் வெளிப்புறத்தில் உலர வைக்காமல் மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்தினர். ஆனால் தற்போது வரும் துணி பேட்கள் எளிமையாக சுத்தம் செய்யக்கூடியவை...”
அதாவது நல்ல காட்டன் துணியில் பல அடுக்குகளை கொண்டு நீர் உட்புகாதவண்ணம் தயார் செய்யப்படுகிறது. நீரால் சாதாரண துணிகளை துவைப்பது போல சுலபமாக துவைத்து, சுத்தம் செய்து 2 வருடம் வரை இதை பயன்படுத்தலாம் என்கிறார் அபிராமி.
மேலும் 5 துணி பேட்களின் விலை 1200 ரூபாய் ஆகும், இரண்டு வருடங்களுக்கு பயன்படுத்தக் கூடியது என்பதால் பிராண்டட் சானிட்டரி பேட் விலையில் பாதிக்கு பாதி மிச்சம் பிடிக்கலாம்.
“இது வணிகம் போன்றது அல்ல, இதில் இருக்கும் உள்கருத்தையே பெண்களுக்கு கொண்டு செல்ல முயல்கிறேன். இப்பொழுது இருக்கும் இளம் பெண்கள் இதில் இருக்கும் நல்லதை இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை. வேலைக்குச் செல்லும் பெண்ணாய் துணி பேட்களால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை,” என்றார்.
இன்னும் மாதவிடாய் பற்றி பேசுவதை தவறாக பலர் பார்க்கின்றனர் அந்த எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். பெண்கள் தங்கள் உடலை பற்றி முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார் அபிராமி. இதற்கு அடுத்தக்கட்டமாக குழந்தைகளுக்கான துணி டைப்பர்களை தயார் செய்யப் போவதாக தெரிவிக்கிறார்.
“சானிட்டரி பேட்களில் இருக்கும் அதே கெமிக்கல் ஜெல் தான் டைப்பர்களிலும் இருக்கிறது. பெண்கள் மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே அதை பயன்படுத்துகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு தினமும் அணிவிக்கின்றோம். அதுவும் ஆபத்தானது தான்.”
இதனால் துணி டைப்பர்கள் நிச்சயம் தேவை என்கிறார். ஆனால் மக்களுக்கு இதை எடுத்து செல்வது சற்று சவாலாக இருக்கிறது என்கிறார். இதைப்பற்றி பேசுவதை தவிர்க்காமல் ஆண் பெண் பேதம் இன்றி இந்த சிக்கல்களை முன்னிறுத்தி தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கிறார் இவர். சானிட்டரி பாட்கள் வாங்க வசதியில்லா பெண்களுக்கு இந்த துணி பேட்கள் நிச்சயம் பெரும் பயனை தரும் என முடிக்கிறார்.
வலைதளம்: Pirai.in