70 ஆண்டு பிரபல தமிழக லக்கேஜ் ப்ராண்ட் ‘Witco' செயல்பாடுகளை மூடுவதாக அறிவிப்பு!
கோவிட்-19 தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட லாக்டவுனால் முடங்கிய வெளிநாட்டுப் பயணங்களின் தாக்கத்தால் இந்த முடிவை எடுத்திருப்பதாக விட்கோ அறிவித்துள்ளது.
”நாங்கள் எங்கள் பிசினசை முற்றிலும் மூடுகிறோம் என்று சொல்வதில் வருத்தமடைகிறோம். கோவிட்-19 தொற்று மற்றும் அதனால் ஏற்பட்ட லாக்டவுனால் முடங்கிய வெளிநாட்டுப் பயணங்களின் தாக்கத்தால் இந்த முடிவை எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, ஆனால் எங்களால் இந்த தாக்கத்தை சமாளிக்க இயலாததால் எடுக்கப்பட்டது. 70 ஆண்டுகளாக எங்களின் ப்ராண்டுக்கு முழு ஆதரவு கொடுத்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.” - விட்கோ குடும்பம்
கடந்த ஆண்டு கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைக்க ஆரம்பித்ததால், பல நாடுகள் கடும் ஊரடங்கை போட்டது. அதே போல், இந்தியாவும் தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் முழு ஊடங்கை தொடங்கியது. அதில், அத்தியாவசியப் பொருட்களின் விற்பனைத் தவிர மற்ற அனைத்து கடைகளும், மால்கள், சினிமா தியேட்டர்கள், சலூன்கள் என எல்லாவற்றும் செயல்படமுடியாது போனது. குறிப்பாக உலகமெங்கும் லாக்டவுன் அமலில் இருந்ததால், பயணம் சார்ந்த தொழில்கள் பெரும் முடக்கத்துக்கு ஆளாகின.
வெளிநாட்டு பயணங்கள், உள்ளூர் சுற்றுலாக்கள் அனைத்தும் தடைப்பட்டுப் போனதாலும், ஊரடங்கு தளர்வுகள் ஏற்பட்டு பயணங்கள் தொடங்கினாலும், மக்கள் தொற்றின் அச்சத்தால் சுற்றுலா பயணங்களை பெரிதும் தவிர்த்தனர். இதனால், டூர்ஸ்ட் இடங்கள், ஹோட்டல்கள், ட்ராவல் ஏஜெண்ட் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. அதில் சில நிறுவனங்கள் மீண்டும் தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
பயணம் என்றால் அதற்கு முக்கியத் தேவையான லக்கேஜ்கள் மற்றும் பெரிய அளவு பெட்டிகள், பைகளை ப்ரீமியம் வகையில் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமான ‘விட்கோ’ இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது.
70 ஆண்டு காலமாக இப்பிரிவில் கோலோச்சிய தமிழகத்தைச் சேர்ந்த Witco வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வோர், கல்விக்காக செல்லும் மாணவர்கள், உள்ளூரில் பயணம் மேற்கொள்வோரின் லக்கேஜ் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விருப்ப நிறுவனமாகும். இவர்களின் லக்கேஜ்கள் விலை சற்று அதிகமாக இருந்தாலும், தரத்தில் ஒரு தனியிடத்தை வைத்திருந்ததே விட்கோ-வை தேடி மக்கள் செல்லக் காரணமாக இருந்துள்ளது.
இத்தனை நன்மதிப்பை கொண்டிருந்தாலும், கொரோனா தொற்றின் தாக்கம் இவர்களின் பிசினசை முடக்கியது. மீண்டும் இந்த ஆண்டும் கொரோனா இரண்டாம் அலையால் லாக்டவுன் அமலில் இருப்பதால், பயணங்கள் ரத்தாயின. அதனால் அதையே நம்பி இருந்த விட்கோ போன்ற நிறுவனங்கள் இனி எப்போது இயல்பு நிலை திரும்பும் என தெரியாத சூழலில் நஷ்டத்துக்கு ஈடு கொடுக்கமுடியாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையான விஷயம்.
விட்கோ வரலாறு என்ன?
1951 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுனில் 500 சதுரடியில் தொடங்கியது ‘விட்கோ’-வின் பிசினஸ் பயணம். அதன்பின், ஒரு ப்ராண்டாக வளர்ந்து சென்னை, கொச்சின், பெங்களுரு என பல கிளைகளுடன், பிரீமியம் லக்கேஜ் மற்றும் பயணம் சார்ந்த உபகரணங்கள் பிரிவில் தென்னிந்தியாவில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றது.
சென்னையின் லக்கேஜ் பிரிவில் சுமார் 60% சந்தையைக் கொண்டிருந்த ‘விட்கோ’ பலரின் அபிமான பயண ப்ராண்டாக இருந்துள்ளது. எம்.பி.சி.மொஹமத் அவர்களால் சுய முதலீட்டில் West India Plastic Trading Co என்ற பெயரில் தொடங்கப்பட்டது விட்கோ. அவருக்கு பின்னர், மொஹமத்தின் மகன் வி.பி.ஹாரிஸ் நிர்வாக இயக்குனராக பிசினஸ் செயல்பாடுகளை கவனித்து வந்தார்.
வேகமாக வளர்ச்சி அடைந்த விட்கோ, 70-களில் 2000 சதுரடி ஷோருமாக ஆனது. சென்னையைத் தாண்டி காலிகட், கொச்சின் மற்றும் கோவையில் தனது கிளைகளை திறந்தது. லாபத்தை பகிர்ந்து கொள்ளும் முறையில் பல இடங்களில் கடைகளைத் திறந்து விரிவடைந்தது விட்கோ.
1975ல் ஹாரிஸின் தந்தை ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். அப்போது தான் திருச்சி, சேலம் மற்றும் ஊட்டியில் கிளைகளை தொடங்கியிருந்தது விட்கோ. பின்னர் பல சவால்களைத் தாண்டி மக்களின் நம்பிக்கைக்குரிய ப்ராண்டாக மாறிவரத்தொடங்கியது.
உலக தாராளமயமாக்கலுக்குப் பின் பல சர்வதேச ப்ராண்ட்கள் லக்கேஜ் பிரிவில் நுழைந்தது. அதுவரை விட்கோ-வில் விலை அதிகமென நினைத்த மக்களுக்கு லக்கேஜ் பிரிவில் ப்ரீமியம் ப்ராண்டுக்கான மதிப்பு புரியத்தொடங்கியது. அதேபோல், விட்கோ தனது சொந்த தயாரிப்பு ப்ராண்டுடன், சர்வதேச ப்ராண்ட்களையும் தங்களது ஷோரூமில் விற்பனை செய்ததால், பயணம் செல்வோரின் உகந்த இடமாக விட்கோ மாறியது.
இப்படி வேகமாக தென்னிந்தியா முழுவதும் விரிவடைந்த விட்கோ, டெல்லி, மும்பை நகரங்களிலும் கிளைகளைத் திறந்து பிரபல இந்திய ப்ராண்டாக வளர்ந்தது. இருப்பினும், தற்போதைய சூழலில் தங்களால் தொடர்ந்து இத்துறையில் ஈடுபட முடியாது என்றும் கோவிட் தொற்று தங்கள் தொழிலில் பெரிய பின்னடைவை தந்திருப்பதால் இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்