74 வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஆந்திரா மூதாட்டி!
57 ஆண்டுகள் காத்திருப்பிற்கு பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி மங்கயம்மா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்ற பெண்களின் பருவங்களில் மிகவும் முக்கியமானதாகவும் பெண்கள் தெய்வங்களாக போற்றப்படுவதற்கும் காரணியாக அமைகிறது 'தாய்மை'.
எல்லாப் பெண்களுக்குள்ளும் தாய்மை பற்றிய பல்வேறு கனவுகள் இருக்கும். தன் கருவில் உருவாகி உதிரத்தில் வெளியேறும் அந்த பிஞ்சின் கைபிடித்து உலகை வலம் வர எந்தப் பெண்ணிற்குத் தான் ஆசை இருக்காது. அப்படியான சராசரி பெண்ணின் ஆசை தான் மங்கயம்மாவிற்கும்.
1962ம் ஆண்டு கணவர் ராஜா ராவின் கரம் பிடித்த மங்கயம்மாவின் குடும்ப வாழ்க்கை நடுத்தர வர்க்கத்தினருக்கே உரிய கனவுகளோடு தொடங்கியது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் நெலபர்திபாடு கிராமத்தில் ராஜாராவும், மங்கயம்மாவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இருவருடைய இல்வாழ்க்கை சுகமாக சென்ற போதும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. கோயில், குளங்கள் சுற்றியும் தவம் இருந்தும் எந்தப் பயனம் இல்லை. குழந்தையில்லாததை காரணம் காட்டி மங்கயம்மாவும், ராஜாராவும் சமுதாயத்தால் சிறுமைபடுத்தப்பட்டனர்.
குழந்தை இல்லையே என்று கலங்கியவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அந்தச் செய்தி இருந்தது. ஆந்திராவிலுள்ள மகப்பேறு மருத்துவமனை ஒன்று 55 வயது பெண் ஒருவருக்கு செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தைப் பேறு அளித்துள்ளது. இதனையறிந்த மங்கயம்மாவும், ராஜாராவும் அந்த மருத்துவமனையை நாடியுள்ளனர்.
மங்கயம்மாவிற்கு மாதவிடாய் காலம் முடிந்துவிட்ட நிலையிலும் அவருக்கு குழந்தைப்பேறு கிடைப்பதற்கான விஞ்ஞான அறிவியல் உதவியை நாடியுள்ளனர் மருத்துவர்கள்.
5 மருத்துவர்கள் கொண்ட குழுவின் கண்காணிப்பில் மங்கயம்மாவின் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு வயோதிகயம் ஆகிவிட்டாலும் நல்ல உடல் நிலையுடன் இருப்பதை உறுதி செய்த பின்னர் கருத்தரிப்பதற்கான வழிமுறைகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
மங்கயம்மாவிற்கு வேறொரு பெண்ணிடம் இருந்து கருமுட்டையை தானமாக பெற்று அதில் கணவர் ராஜாராவின் விந்தணுவை செலுத்தி கருவை உருவாக்கியுள்ளனர். அந்த கருமுட்டையானது கடந்த ஜனவரி மாதத்தில் மங்கயம்மாவிற்கு பொருத்தப்பட்டு 9 மாதங்கள் மருத்துவர்களின் முழு காண்காணிப்பில் அவர் இருந்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 5ம் தேதி காலை 10.30 மணியளவில் மங்கயம்மாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன.
"எனது வாழ்க்கையின்மிக மகிழ்ச்சியான தருணம் இது. இந்த நாளுக்காகத் தான் வலி மிகுந்த பல நாட்களை நான் கடந்து வந்திருக்கிறேன். இந்த சமுதாயத்தின் ஏளனப் பேச்சுகள் என்னை சுட்டு போட்டன. இப்போது எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்று மகிழ்ச்சியோடு," கூறுகிறார் மங்கயம்மா.
”57 ஆண்டுகளில் பல மருத்துவ சிகிச்சைகளைச் செய்திருக்கிறோம், கடைசியாக இந்த சோதனைக் குழாய் மூலம் கருத்தரிப்பதை செய்து பார்த்துவிடலாம் என்று நினைத்து இந்த மருத்துவமனை வந்த எங்களை கடவுளும், மருத்துவமும் கைவிடல்லை. குழந்தை இல்லாதவர் என்று என்னைப் பலரும் ஒதுக்கி வைத்தனர். இப்போது என் குறைகளை போக்கி கடவுள் எனக்கு இரண்டு குழந்தைகள் கொடுத்திருக்கிறார் இவர்களை நான் நன்றாக கவனித்துக் கொள்வேன்," என்று ராஜாராவ் மகிழ்ச்சியோடு கூறி இருக்கிறார்.
தாயும், சேயும் தற்போது நலமாக இருக்கின்றனர். வயோதிகத்தால் மங்கயம்மாவால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியவில்லை. எனவே மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் இருந்து குழந்தைகளுக்கு பால் புகட்டப்படுகிறது. 21 நாட்கள் இந்தக் குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவதாக மருத்துவர் உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிக வயதில் தாயானவர் என்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் மங்கயம்மா. 2016ம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 72 வயது பெண்மணி குழந்தையை பெற்றுள்ளார். 30 வயதைக் கடந்தாலே பெண்களுக்கு பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் வந்து விடுகிறது. அந்த வயதில் மகப்பேறு என்றாலே ஒர வித அச்சம் வந்துவிடும். அப்படி இருக்கையில் 74 வயதில் நம்பிக்கையுடன் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார் மங்கயம்மா.
ஒரு பக்கம் மருத்துவச் சாதனை என்றாலும் இந்த மூத்த தம்பதி இப்படி விடாப்பிடியாக குழந்தை பெற்றுக் கொள்வதில் உறுதியாக இருந்ததற்கு இந்த சமூகமும் ஒரு காரணம். குழந்தையில்லை என்பதை ஒரு குறையாக பார்க்கும் அவல நிலை எப்போது தான் மாறுமோ...