ஏகோபித்த பாராட்டையும், கைத்தட்டலையும் பெற்றுள்ள அவுரங்காபாத்தை சேர்ந்த இந்த இளம் தொழில்துறை உரிமையாளர் சாதித்தது என்ன ?
கிளியர் கார் ரெண்டல் (Clear Car Rental) அமைப்பின் நிறுவனர் சச்சின் கேட். 28 வயதான இவர் முதல்முறையாக எங்கள்YourStory.inஅலுவலகத்தினுள் நுழைந்தபோது இவர் எத்தகைய சாதனைக்கு சொந்தக்காரர் என்பது சிறிதும் புலப்படவில்லை. ஆம், கிளியர் கார், இந்தியாவிலுள்ள எல்லா வாடகை கார் நிறுவனங்களையும் போன்றதுதான். ஆனால் அவை எல்லாவற்றையும் தாண்டி, அவரை ஏன் பாராட்ட வேண்டும் என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
இந்த சாதனையாளரின் கதை
மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு சிறிய நகரமான அவுரங்காபாதில் பிறந்தவர் சச்சின் கேட். சுயதொழில் தொடங்குவது என்பது அந்த சமூகத்தில் அன்னியமாகவே கருதப்பட்டது. (ஒரு கடை தொடங்குவது கூட சுயதொழில்தான், ஆனால் நாம் இங்கு முறையான ஸ்டார்ட் அப் அதாவது தொழில் தொடங்குவது பற்றி பேசுகிறோம்). சச்சினின் குடும்பம் வாழ்ந்த பகுதியில் போதிய கல்வி வசதி இல்லை. அவர் சென்று வந்த பள்ளியில் நான்காம் வகுப்புவரை மட்டுமே இருந்தது. இத்தகைய தடைகளை பொருட்படுத்தாமல் சச்சினின் பெற்றோர் அவருக்கு தகுந்த கல்வி அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். எனவே வேறு ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள தங்கள் நண்பரின் வீட்டில் சச்சினை தங்க வைத்து படிக்க வைத்தனர். கேட் குடும்பத்தின் வருமானம் சச்சினின் தேவைகளை பூர்த்தி செய்ய போதாத காரணத்தால் அவர் படிக்கும்போதே செய்தித்தாள்களை விற்று சம்பாதிக்கத் தொடங்கினார். அதிர்ஷ்டவசமாக பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே சச்சினுக்கு ஒரு கணினி நிறுவனத்தில் அலுவலக பணிப்பையனாக வேலை கிடைத்தது.
கம்ப்யூட்டர்கள் மீதான அதீத ஆர்வத்தினால் சச்சின் இந்த வேலையில் படிப்படியாக முன்னேறி ஓராண்டிலேயே அந்த நிறுவனத்தில் கணினி பயிற்சியாளராக வளர்ந்தார். 12ஆம் வகுப்பு படிப்பை முடித்து உயர்கல்விக்காக அவுரங்காபாத் சென்ற சச்சின் படித்துக்கொண்டே அங்கு உள்ள டிராவல் ஏஜென்சி ஒன்றில் பகுதிநேர பணியாளராக சேர்ந்தார். “இந்த வேலை அனுபவம் தான் சுற்றுலாத்துறையை பற்றி அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது. பகுதி நேர சம்பளத்துக்கே முழுநேர வேலையையும் செய்தேன். காரணம், மெல்ல மெல்ல கணினித்துறையில் பணி புரிய வாய்ப்பு கிடைத்தது, அதைக் கொண்டு எனது திறன்களை வெளிப்படுத்த முடியும் என்று நினைத்தேன்” என்கிறார் சச்சின். பி.எஸ்சி கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்துக் கொண்டிருந்த சச்சினுக்குSEO எனப்படும்சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன் மீதான ஈடுபாடு அதிகரித்தது. வலைதள தேடலில் ஒரு நிறுவனத்தின் பெயர் சர்ச்சில் தட்டுப்படும் வாய்ப்பை அதிகப்படுத்தும் இந்த முறை, அவர் பணியாற்றிய டிராவல் ஏஜென்சி நிறுவனத்துக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
அலுவலக மேலாளர்களின் நம்பிக்கையை பெற்ற சச்சின், வேறு ஊருக்கு இடம்பெயர முடிவு செய்தார். ஆனால் குடும்ப நெருக்கடி காரணமாக சொந்த ஊரிலேயே பணியை தொடர முடிவு எடுத்தார். அதன்பின் வலைதள வடிவமைப்பாளராக உருவெடுத்த சச்சின், குறிப்பாக சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தன் குழுவினருடன் சேர்ந்து இந்த துறையில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வலைதளங்களை வடிவமைத்திருக்கிறார். அவற்றில் இன்ஃபோகிர்ட் (InfoGird) மற்றும் நெட்மான்டில் (NetMantle)ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இந்நிலையில்தான் சச்சின் வாழ்கையில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது.
சச்சின் எப்போதுமே சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையுடன் தொடர்பில் இருந்ததால், அந்த துறையின் தேவைகளை நன்கு அறிந்திருந்தார். “விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுகளுக்கு உதவ புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், சுற்றுலா துறையில் ஒரு இடத்தை கடைசியாக சென்றடைய உதவும் சாலை போக்குவரத்து ஒருவகையில் புறக்கணிப்பட்டு வந்தது என்றே சொல்ல வேண்டும்” என்கிறார் சச்சின். இந்த இடைவெளியை ஈடுகட்டத்தான் கிளியர் கார் ரெண்டல் (Clear car Rental) நிறுவனத்தை 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் துவங்கினார். இந்த சமயத்தில் தான் மேரு ரேடியோ கேப் போன்ற ஒருசில நிறுவனங்கள் பிரபலமாகிக் கொண்டிருந்தன.
கிளியர் கார் ரெண்டலில், உள்ளூர் மற்றும் (முழு நாள், அரை நாள் மற்றும் டிரான்ஸ்பர் பேக்கேஜ்கள்) வெளியூர் பயணங்களுக்கான (சென்று திரும்ப, ஒரு வழி செல்ல, பல நகரங்களுக்கு செல்வதற்கான பேக்கேஜுகள்) வசதிகள் இருந்தன. இந்தியா முழுவதும் 150க்கும் மேற்பட்ட நகரங்களில் சேவை வழங்கும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை கவனித்துக் கொள்ள சுமார் 100 பேர் கொண்ட குழு இயங்கி வருகிறது.
ஒரு பைசா முதலீட்டு நிதி உதவி இல்லாமல் தொடங்கிய நிறுவனம்
பல வாடகை கார் நிறுவனங்கள் பெரிதளவில் நிதிஉதவி பெற்று தங்களது தொழிலை விரிவு செய்து வருவதை நாம் பார்த்திருப்போம். இந்த தொழிலில் ஏற்படக்கூடும் பலதரப்பட்ட செலவுகளே இதற்கு காரணம். வியக்கத்தக்க வகையில், இத்தகைய முறையான நிதி உதவி எதுவும் பெறாமலேயே சச்சின் 150+ நகரங்களுக்கு தனது நிறுவன சேவையை விஸ்தரித்திருக்கிறார். கிளியர் கார் ரெண்டல் (Clear Car Rental) நிறுவனம்14000க்கும் மேற்பட்ட கார்களையும், 1000க்கும் மேற்பட்ட வர்த்தகர்களையும் தன்வசம் வைத்திருக்கிறது. இந்நிறுவனம் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமின்றி பிரபல இணையதள டூரிஸ்ட் ஏஜெண்ட்களான மேக்மைட்ரிப் (Makemytrip), காக்ஸ்&கிங்ஸ் (Cox & Kings), தாமஸ் குக் (Thomas Cook)ஆகிய டிராவல் நிறுவனங்களுட்ன் கூட்டு வைத்துள்ளது. “2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்கள் மீதுதான் நாங்கள் அதிக கவனம் செலுத்தினோம். மக்களின் சராசரி வாங்கும் சக்தி உயர்ந்திருக்கிறது. சிறிய நகரங்களிலும் மக்கள் இப்போது வாடகை கார்களை பயன்படுத்துகிறார்கள்” என்கிறார் சச்சின். அதேசமயம் மெட்ரோ நகரங்களிலும் அவர்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. ஆனால் வளர்ச்சிக்காக அவர்கள் சிறிய நகரங்களை குறிவைக்கிறார்கள்.
அவுரங்காபாதில் இருந்து ஒரு வெற்றிகரமான நிறுவனம்
தர்மசாலா, புவனேஸ்வர் ஆகிய சிறு நகரங்களில் இருந்து வெற்றிகரமாக துவங்கப்பட்ட நிறுவனங்கள் பார்த்திருக்கிறோம். இதுவும் அப்படி எதிர்பாராத ஒரு சிறிய நகரத்தில் – அவுரங்காபாதில் - தொடங்கப்பட்ட மற்றுமொரு வெற்றி கதைதான். வழக்கம்போல இதிலும் சில சாதக, பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பாதகம் – குறைவான ஆதரவு, பக்குவமற்ற சந்தை, மோசமான உள்கட்டமைப்பு, மூலதனமின்மை.
சாதகம் - குறைந்த ஊதியத்துக்கு ஊழியர்கள் கிடைப்பது (ஆனால் அவர்களை சரியாக தேர்ந்தெடுத்து, பயிற்சி அளிக்க உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்), வெற்றி பெற வேண்டும் என்ற கூடுதல் வேட்கை.
சச்சின் தனது செயல் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். அத்தோடு வெற்றி பெறுவதில் அவருக்கு இருந்த தாகமே அவருக்கான வாசல்களை திறந்துவிட்டது. உள்ளூர் செய்தித்தாள்கள் இந்த வெற்றிக்கதை பற்றி எழுதின. “அவுரங்காபாத் காலிங்” என்ற தலைப்பில் அவர் தனது வலைப்பதிவில் எழுதிய கட்டுரை, தன் நகரத்தை விட்டு வெளியே சென்று படித்துக் கொண்டிருக்கும் பல இளைஞர்களை மீண்டும் தம் சொந்த நகரத்திற்கு திரும்பி பணி புரிய தூண்டுதலாக அமைந்திருந்தது.
அவுரங்காபாதின் கதாநாயகனாக வாழும் சச்சின் கேட், வெளிஉலகில் இன்னும் போதிய வெளிச்சம் பெறவில்லை. அவருக்கு அந்த பெருமையை தேடித்தரும் முயற்சியாக இந்த பதிப்பு விளங்கும் என்று நம்புகிறோம்.
வலைத்தளம் முகவரி : Clear Car Rental