சிங்கப் பெண்களே 5000 ரூபாய் இருந்தால் இந்த 8 தொழில்களை துவங்கலாம்...
உங்கள் மனதில் தைரியம் இருந்தால், வெற்றி பெற வேண்டும் என்ற வெறி இருந்தால், கையில் 5000 இருந்தால் போதும், லாபம் பார்க்க வழிகள் உள்ளது இந்த கதையில்.
ஒரு தொழிலைத் துவங்கி, அதனை வெற்றிகரமாக நடத்த முதலீடு என்பது அவசியம் மட்டுமன்றி முதல் 3 வருடங்களுக்கு லாபம் இல்லாவிட்டாலும் அதனை எடுத்து நடத்தி செயல் படுத்த அதிக ஈடுபாடு வேண்டும். இதற்கு மேல் முதலீடு இல்லை என்ற காரணம் சொல்லி பெண்கள் எவரும் தொழில் துவங்காது இருக்கக்கூடாது.
பல தொழில்கள் சிறிதாகத் துவங்கப்பட்டு, பின்னர் மெதுவாக கிளைகள் பரப்பும். நமது முயற்சி மற்றும் ஈடுபாடு பொறுத்து தொழிலின் வளர்ச்சி இருக்கும். பிடித்தத் தொழிலை செய்யும் தொழில்முனைவோருக்கு நேரம் என்பது ஒரு பொருட்டு அல்ல.
மேலும் நோக்கத்தில் உறுதியாக இருந்தால், வெறும் 5000 ரூபாயில் ஒரு தொழிலை நீங்கள் துவங்கலாம். அதில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி மட்டும் போதும்.
இன்றைய சூழலில் ஒரு தொழிலை துவங்குதல் என்பதற்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தும் கிடைக்கின்றன. இணைய வசதி அனைவருக்கும் உள்ளது. மலிவான விலையில் கிடைக்கிறது. தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. தேவையான நேரத்தில் தேவையான துறை நிபுணர்களிடம் பயிற்சி பெரும் வசதியும் உள்ளது. முனைபவர்கள் முன்பை விட அதிவேகமாக முன்னேற முடியும்.
எனவே கையில் 5000 ரூபாய் கொண்டு என்ன தொழில்கள் துவங்கலாம்?
பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் கடை :
அண்ணன் பயன்படுத்திய துணிகள் பொம்மைகள், புத்தகங்கள் அனைத்தும் அவனுக்கு அடுத்து உள்ள குழந்தைக்கு என்று காலம் காலமாக நம்மவர்கள் செய்யும் விஷயம் தான் இன்று வேறு வடிவில் மேற்கில் இருந்து மீண்டும் நம்மிடம் வந்து சேர்ந்துள்ளது.
முதலில் ஒரு நோக்கத்திற்கு பணம் சேர்ப்பதற்காக நடத்தப்பட்ட கடைகள் இன்று பலரும் விரும்பி வந்து வாங்கும் கடைகளாக உருவாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் பழக்கத்தில் உள்ள உடுத்திய துணிகள் அங்காடிகள் இந்தியாவிலும் மெதவாக பரவ ஆரம்பித்துள்ளன. இதைத் துவங்க, உங்கள் இல்லத்தில் நீங்கள் ஒரு முறை அல்லது சில முறை மட்டுமே அணிந்து விட்டு, பின்னர் தூசிக்கு இரையாக்கி வைத்துள்ள துணிகள், உங்கள் நண்பர்களும் உங்களுக்கு போட்டியாக இதே தகுதிகள் கொண்டு அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் துணிகள் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவேண்டும். அவற்றை நன்றாக துவைத்து, இஸ்திரி செய்து, விற்பனை செய்யலாம்.
இவற்றை விற்க உங்களுக்கு கடைகள் தேவை இல்லை. இணையம் தற்பொழுது அனைவரிடம் உள்ளதால், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற அனைத்து வழிகள் மூலமாக நீங்கள் விற்பனை செய்யலாம். நண்பர்கள் வட்டம் பெரிதாக இருப்பது இதற்கு மேலும் உதவியாக இருக்கும்.
இகோ பேப்பர் பைகள் :
மாநில அரசுகள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்துள்ளதை அடுத்து, சூழலுக்கு உகந்த பேப்பர் பைகள் மற்றும் துணிப் பைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது.
எனவே தேவை அதிகரித்துள்ள நிலையில் வெறும் 5000 ரூபாய் கொண்டு இவற்றை உற்பத்தி செய்து நீங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடியும்.
உங்கள் பகுதியில் உள்ள கடைகள், அக்கம் பக்கம் வீடுகள் ஆகியவற்றில் இருந்து துவங்குங்கள். வெற்றி நிச்சயம்.
இஸ்திரி சேவை :
இன்று அனைவருக்கு தாங்கள் உடுத்தும் துணி கசங்காது வேலை செய்வது எப்படி என்பது தெரியும். ஆனால் கசங்கிய துணியை மீண்டும் சலவை செய்து மிடுக்காக மாற்றுவது எப்படி என்பது தெரியவில்லை. தெரிந்தாலும், அதற்கான நேரம் இல்லை.
இப்படிப்பட்டச் சூழலில் நீங்கள் உங்கள் வீட்டிலேயே இஸ்திரி செய்து கொடுக்கும் கடை நடத்தலாம். பல வீடுகள் உள்ள பகுதியில் நீங்கள் வசித்தால், வாடிக்கையாளர்கள் எளிதாக உங்களுக்குக் கிடைப்பார்கள்.
தரமுள்ள இஸ்திரி பெட்டி, அதிகத் துணிகள் எடுக்க முடியும் என்றால் துணைக்கு ஒரு பணியாள் என நீங்கள் தொழிலை துவங்கலாம்.
ஓவியம் இசை நடனம் வகுப்புகள் :
தலைப்பில் உள்ள மூன்றில் எது உங்களுக்கு நன்றாக தெரிந்தாலும், அற்புதம். காரணம் இன்றைய சூழலில் தங்கள் குழந்தைகள் அனைத்திலும் அற்புதமாக விளங்கவேண்டும் என்பது அனைத்து பெற்றோரும் விரும்பும் விஷயம்.
எனவே அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்கள் குழந்தைக்கு மட்டும் கற்றுத்தருவதும் செய்யலாம். அல்லது உங்கள் வீட்டிற்கு அவர்களை வரவழைத்து மொத்தமாக கற்றுத்தருவதும் செய்யலாம். அதிக செலவுகள் இன்றி, உங்கள் முதலீட்டுக்கு மேலே நீங்கள் லாபம் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாக இது அமையும்.
பகுதிநேர எழுத்தாளர் அல்லது பதிப்பாசிரியர் :
இன்றைய தொழில் சூழலில், எந்த விஷயத்தையும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வண்ணம் எழுதும் எவருக்கும் அதிக வரவேற்பு உள்ளது. ஒரு நிறுவனத்திற்கு சென்று நீங்கள் வேலை செய்வதை விடவும், இவ்வாறு எழுதுவதை நீங்கள் ஒரு நிறுவனமாக நிறுவி ஒரு நேரத்தில் பல நிறுவனங்களுக்கு உங்கள் சேவையை வழங்கலாம்.
அதற்கு ஏற்றவாறு விளம்பர நிறுவனங்கள், பதிப்பகங்கள் இவர்களோடு தொடர்பும் ஒரு நல்ல கணினியும் இருந்தால் போதும். உங்கள் நேரத்தில் உங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் சம்பாதிக்கலாம்.
வீட்டு அலங்காரம் :
எனது வீடு நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர்க்கும் உள்ளது. ஆனால் அதனை அவ்வாறு அமைத்துக்கொள்ள அவர்களுக்கு நேரம் தான் இருப்பதில்லை. அப்படி நேரம் இருந்தாலும் அதனை சுத்தம் செய்ய அவர்கள் செலவு செய்வதில்லை. எனவே இதனை நீங்கள் உங்களுக்கான ஒரு சவாலாகக் கொண்டு, அவர்கள் வீடுகளை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றித்தரும் ஒரு தொழிலை துவங்கலாம்.
உள்ளலங்காரம் செய்வதையும் இதில் நீங்கள் சேர்க்கலாம். இதன்மூலம் சிறிது சிறிதாக வளர்ந்து பின்னர் பெரிய அளவு பணிகளை மேற்கொள்ளலாம்.
வாடகை விருந்தினர் :
என்னிடம் பெரிய வீடு உள்ளது. நான் தங்கியுள்ள பகுதி அதிக மக்கள் வந்து செல்லும் பகுதி. இங்கு என்ன செய்ய முடியும் என்று கேட்கும் ஒருவருக்கு இது ஏற்ற தொழில். வீட்டில் உள்ள ஒரு அறையை விருதினருக்கு வாடகைக்குக் கொடுக்கலாம். நீங்கள் இருக்கும் நகரம் சுற்றுலாவிற்கு ஏற்ற நகரம் என்றால், இதற்கென உள்ள செயலிகள் மூலம் நீங்கள் பல வாடிக்கையாளர்களை பெற முடியும்.
செயலிகளில் நீங்கள் இணைவதாக இருந்தால் உங்களுக்கு விளம்பரம் செய்யும் வேலையும் இல்லை. இந்தத் தொழிலில் சிறப்பான உபசரிப்பு மிகவும் முக்கியம்.
செல்லப்பிராணிள் பராமரிப்பு :
வீட்டில் அதிக செல்லப்பிராணிகள் இருக்கும் பொழுது சுற்றுலா செல்வது மட்டுமல்ல, கடைகளுக்குச் செல்வதே பெரும் சவாலாக இருக்கும். அந்நேரத்தில் செல்லப் பிராணிகளை பார்த்துக்கொள்ளும் வசதி இருந்தால் அவர்கள் அதனை கட்டாயம் பயன்படுத்துவர்.
நீங்கள் செய்யவேண்டியது முதலில் செல்லப் பிராணிகளை பற்றி அறிந்து கொள்ளவேண்டும். பின்னர் எவ்வாறு அவற்றைப் பராமரிப்பது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பின்னர் சிறிய முதலீட்டில் இதனை ஒரு தொழிலாக நீங்கள் துவங்கலாம்.
எழுதியவர் : நிரந்தி கௌதமன் | தமிழில் : கெளதம் தவமணி