வானளவு உயர்ந்த சம்பளம்; ‘ஆகாசா ஏர்’ பைலட்களுக்கு அடித்த ஜாக்பாட்!
புதிதாக தொடங்கப்பட்ட விமான சேவை நிறுவனமாக இருந்தாலும், விமானிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கியதில் ஆகாசா ஏர் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கிய ஆகாசா விமானம் ஒரே மாதத்தில் விமானிகளுக்கு சுமார் 60% வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், மலிவு விலை விமான சேவையை வழங்குவதாக ஆகாசா ஏர் நிறுவனத்தை மறைந்த பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி முதல் ஆகாசா ஏர் நிறுவனம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையிலான சேவையையும், ஆகஸ்ட் 13ம் தேதி பெங்களூரு-கொச்சி விமான சேவையும் தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி முதல் சென்னை - மும்பை இடையே விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 26ம் தேதி முதல் சென்னை - கொச்சி இடையிலான சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளது. சேவை தொடர்பாக ‘ஆகாசா ஏர்’ நிறுவனம் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ஊழியர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட விமான சேவை நிறுவனமாக இருந்தாலும், விமானிகளுக்கு ஊதிய உயர்வு வழங்கியதில் ஆகாசா ஏர் நிறுவனம் முன்னணியில் உள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கிய ஆகாசா விமானம் ஒரே மாதத்தில் விமானிகளுக்கு சுமார் 60% வரை சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானிகளுக்கான சம்பளம் எவ்வளவு?
விமான கேப்டன்களுக்கு மாதம் ரூ.4.5 லட்சம் மற்றும் முதல் அதிகாரிகளுக்கு ரூ 1.8 லட்சமும் வரும் அக்டோபர் முதல் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் கேப்டன்கள் மற்றும் முதல் அதிகாரிகள் முறையே ரூ.2.79 லட்சம் மற்றும் ரூ.1.11 லட்சம் சம்பளம் பெற்று வந்தனர்.
அனுபவம் மற்றும் பறக்கும் நேரத்தைப் பொறுத்து, சம்பளத்தில் மாற்றம் இருக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 70 மணிநேரம் என்ற வரம்பில், ஒரு கேப்டன் ரூ.8 லட்சம் சம்பாதிக்கலாம். இந்த தொகையானது இப்போது கேப்டன்கள் பெற்று வரும் ரூ.6.25 லட்சத்தை விட 28 சதவீதம் அதிகம் ஆகும்.
ஊதிய உயர்வுக்கான காரணம்:
தற்போது நான்கு போயிங் 737 மேக்ஸ்கள் விமானங்களை இயக்கி வரும் ஆகாசா ஏர் நிறுவனம் மார்ச் 2023க்குள் மேலும் 18 விமானங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. விரைவான விரிவாக்கத்தை திட்டமிடுவதால், விமான நிறுவனத்திற்கு அதிக விமானிகள் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு விமானிகளின் சம்பளத்தை முன்கூட்டியே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
டாடாவின் ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் மத்திய கிழக்கு விமான நிறுவனங்கள் ஏராளமான விமானிகளை பணியமர்த்தி வருவதால், ஆகாசா ஏர் நிறுவனத்திற்கு அதிக விமானிகளை ஈர்க்க ஊதியத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமான நிறுவனங்களுக்கு இடையே ஆரம்பித்துள்ள சம்பள உயர்வை சமாளிக்கும் விதமாக ஏர் இந்தியா நிறுவனம் வார இறுதியில் ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது. அதில், பங்கேற்ற ஊழியர்களிடம் விரைவில் ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் விமான சேவையில் முன்னணியில் உள்ள இண்டிகோ நிறுவனம் அதன் கேப்டன்களுக்கு செலுத்தும் தொகையை விட, ஆகாசா ஏர் நிறுவனம் வழங்கும் ஊதிய உயர்வு 8 முதல் 10 சதவீதம் வரை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு - கனிமொழி