‘செயலில்’ இறங்கினால் மட்டுமே தொழிலில் வெற்றி கிடைக்கும்’ - தொடர் தொழில்முனைவர் வெங்கடேஷ்
கோவையில் பிறந்து, வளர்ந்த வெங்கடேஷ் நாராயணசாமி, தொடர் தொழில்முனைவராக தொழிலில் அனுபவம் பெற்று அதை ‘செயல்’ எனும் அமைப்பு மூலம் மற்ற தொழில்முனைவர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறார்.
கோவிட் ஒரு சில பிஸினஸ்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில பிஸினஸ்களுக்கு புதிய வாய்ப்பை கொடுத்திருக்கிறது. ஆனால் இது இரண்டுமே வெங்கடேஷுக்கு நடந்திருக்கிறது.
சிஸ்மேன்டெக் மற்றும் இன்னோவெட்டிங் ஆகிய இரு நிறுவனங்களை நடத்தி வருபவர் தொடர் தொழில்முனைவர் வெங்கடேஷ் நாராயணசாமி. இது தவிர, ‘செயல்’ என்னும் அமைப்பினையும் அண்மையில் தொடங்கி நடந்தி வருகிறார். இவரின் தொழில்முனைவுப் பயணம் குறித்து யுவர்ஸ்டோரி தமிழ் இடம் பகிர்ந்து கொண்டார்.
ஆரம்பகாலம்
கோவையில் பிறந்தவர் வெங்கடேஷ் நாராயணசாமி. பிஎஸ்.ஜி கல்லூரியில் இயற்பியல் படித்தார். 1990களின் தொடக்கத்தில் இத்துறையில் வாய்ப்புகள் குறைவு. மேற்படிப்பு படித்து ஆசிரியர் படிப்புக்குச் செல்லலாம், அல்லது உடனடியாக வேலைக்குச் செல்லலாம் என்பதுதான் நிலை.
பெற்றோர்கள் அரசுப் பணியில் இருந்ததால் போட்டி தேர்வு எழுத வேண்டும் எனக் கூறினார்கள். இவை அனைத்தையும் விட்டுவிட்டு கொரியர் நிறுவனம் தொடங்கியுள்ளார் வெங்கடேஷ். பெரிய கொரியர் நிறுவனத்தின் உள்ளூர் பிரதிநிதியாக சேர்கிறார்.
இந்த பிஸினஸ் நல்ல வளர்ச்சி மற்றும் லாபத்தை பெற்றது. இருந்தாலும் ஓர் ஆண்டுக்குப் பிறகு எம்பிஏ படிக்க வேண்டும் என தோன்றவே, கொரியர் நிறுவனத்தை நண்பரிடம் கொடுத்துவிட்டு படிக்கத் திட்டமிடுகிறார். ஆனால் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என்பதும், அந்தத் தொகையை திரட்ட முடியாது என்ற உண்மை அவருக்கு புரிந்தது.
மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல். கோவையில் கம்யூட்டர் விற்பனை மற்றும் சேவை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். ஐந்தாண்டுகள் அங்கேயே பல பிரிவுகளில் பணியாற்றுகிறார். ஓரளவுக்கு அனுபவம் வந்தவுடன் தனியாக தொழில் தொடங்க திட்டமிட்டார் வெங்கடேஷ். அப்போது பழைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை நாட மாட்டோம் என்னும் உத்தரவுடன் பழைய நிறுவனத்தின் நிறுவனர்கள் ஆசியுடன் தொழில் தொடங்கினார்.
”சில மாதங்களில் புதிய ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கின. இந்த நிலையில் பழைய நிறுவனத்தின் நிறுவனர்கள் வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் பழைய நிறுவனத்தின் மொத்த தொடர்பும் எங்களுக்குக் கிடைத்தது. 1997-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தொழிலில் நல்ல வளர்ச்சி இருந்தது,” என்றார்.
கோவையில் இருந்து சென்னைக்கு
சென்னையில் உள்ள வாடிக்கையாளர் ஒருவருக்கு கம்யூட்டர்கள் மட்டுமல்லாமல் ஆலோசகரும் தேவைப்பட்டது. அதனால் கோவையில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார் வெங்கடேஷ். மேலும், சென்னையிலும் ஒரு அலுவலகத்தையும் தொடங்கினார்.
சிஸ்மேண்டெக் மற்றும் ஆலோசகர் பணி இரண்டையும் செய்தார். இந்த நிலையில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் பணியையும் செய்யத் தொடங்கினார். அப்போதுதான் தனக்கு மனிதவளத்தில் ஆர்வம் இருக்கிறது என்பது வெங்கடேஷுக்கு புரிந்தது.
இதற்காக தனியாக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ‘Innovative Services' என்னும் மனிதவள நிறுவனம். இந்த நிறுவனம் மூலம் பலவிதமான பயிற்சிகள் வழங்குகிறார்கள்.
”கல்லூரி மாணவர்களுக்கு, கார்ப்பரேட்க்ளுக்கு என பல பயிற்சிகளை நாங்கள் வழங்கி இருக்கிறோம். 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளுடன் இணைந்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான தேவையான திறன் பயிற்சிகள் வழங்கி இருக்கிறோம், என்றார்.
கல்லூரி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகையான பயிற்சியை அளிக்கிறோம். கல்லூரி மாணவர்கள் படிக்கும்போது பயிற்சி தேவையில்லை என நினைப்பார்கள், ஆனால், படித்து முடித்த பிறகு இதையெல்லாம் கல்லூரியிலே செய்திருக்கலாமே என நினைப்பார்கள். அதனால் கல்லூரியிலே ஏன் பயிற்சி தேவை என்பது குறித்து பிரபலமான பேச்சாளர்களை அழைத்து பேச வைத்தோம். இதனால் மாணவர்களிடம் எளிதாகச் சென்றடைய முடிந்தது.
மாணவர்களுக்கு பயிற்சி அளித்தோம். அடுத்தகட்டமாக வேலைக்கு செல்பவர்கள், தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என நினைத்து ‘கனவு மெய்பட’ என்னும் தொடர் நிகழ்ச்சியைத் தொடங்கினோம். சென்னை உள்ளிட்ட 9 நகரங்களில் நடத்தினோம். மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் 10வது நிகழ்ச்சியை வெளிநாட்டில் நடத்தத் திட்டமிட்டோம். அப்போதுதான் கொரோனா வந்தது...
கொரோனா பாதிப்பு?
Sysmantech என்பது கம்யூட்டர் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் நிறுவனம். Innovative என்பது மனிதவளப் பயிற்சியை வழங்கும் நிறுவனம். கொரோனா தொடங்குவதற்கு முன்பாக சிஸ்மாண்டெக் மிகவும் சிரமமான சூழலில் இருந்தது. ஆனால், இன்னோவேட்டிவ் மிக சிறப்பாக இருந்தது. ஆனால் கொரானாவுக்கு பிறகு தலைகீழாக சூழல் மாறியது. மக்கள் ஒன்றாகக் கூடக் கூடாது என்பதால் பயிற்சி முழுவதும் தடைப் பட்டது.
அதே சமயத்தில் பணியாளர்கள் வீட்டில் இருப்பதால் லேப்டாப்-கான தேவை உயர்ந்தது.
காக்னிசெண்ட் நிறுவனத்தில் இருந்து ஆரம்பத்தில் 60 லேப்டாப் கேட்டார்கள். இதனை வழங்கியுடன் 300 லேப்டாப் கேட்டார்கள், அடுத்து 2000 லேப்டாப் கேட்டார்கள். கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் சிஸ்மேண்டெக் நிலைமையே வேறாக மாறியது. வழக்கமாக இந்தத் தொழிலில் பணம் உடனடியாக கிடைக்காது. ஆனால் கொரோனா காரணமாக பணம் கொடுத்த பிறகே கம்யூட்டர் வாங்கினார்கள்.
பயிற்சி என்பது தற்போதைக்கு நடக்காது என்பது கொஞ்சம் கொஞ்சமாக புரியத்தொடங்கியது. அதனால் இணையம் மூலம் பயிற்சி வழங்கத் தொடங்கினோம். இதன் மூலம் பெரும் டேட்டாபேஸ் உருவானது. சர்வதேச அளவில் உள்ள பல தமிழர்கள் நாங்கள் நடத்தும் இலவசப் பயிற்சியில் கலந்துகொண்டார்கள் என எங்களுக்குத் தெரிந்தது.
’செயல்’ தொடக்கம்
இதுவரை இணையம் வழியே பயிற்சி மற்றும் வணிகம் சம்மந்தமான உரைகளை இலவசமாக நடத்திவந்தோம். இனி கட்டண நிகழ்ச்சியாக நடத்தினாலும் மக்கள் வருவார்கள் என்னும் நம்பிக்கை உருவானது. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டதால் இதனை சர்வதேச கற்றல் அமைப்பாக மாற்ற வேண்டும் என முடிவு செய்து ‘செயல்’ என பெயர் வைத்தோம்.
”இதில், மாதத்துக்கு இரு ஞாயிற்றுக்கிழமைகள் பயிற்சி நடக்கும். தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் இவர்களுடன் பேசுவார்கள். பேசுவது மட்டுமல்லாமல் உரையாடலும் இருக்கும்.”
9,000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்தோம், 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 280-க்கும் மேற்பட்டவர்கள் இணைந்திருக்கிறார்கள். விரைவில் 500 என்னும் எண்ணிக்கையைத் தொடும் என எதிர்பார்க்கிறோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் உறுப்பினர்களை இணைக்க வேண்டும் என்னும் இலக்குடன் செயல் அமைப்பை நடத்திவருகிறோம் என வெங்கடேஷ் தெரிவித்தார்.
தற்போது இரு பிரிவுகளிலும் மொத்தமாக 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர். ஆண்டு வருமானம் ரூ.8 கோடி என்னும் அளவில் இருக்கிறது என்று முடித்தவரிடம் இறுதியாக இதுபோன்ற வகுப்புகளின் மூலம் ஒருவர் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடியுமா என்னும் கேள்வியை வைத்தோம்.
”எத்தனை உற்சாகப் பேச்சுகள், தன்னம்பிக்கைக் கதைகளை கேட்டாலும் நீங்களில் செயலில் இறங்கினால் மட்டுமே வெற்றியடைய முடியும். அதனால்தான் ’செயல்’ என பெயர் வைத்தோம். இதுபோன்ற சாதகமான சூழலில் உங்களை நீங்கள் ஒப்படைக்கும்போதுதான் உங்களுகான சிந்தனை அல்லது ஐடியா அல்லது பொறி (Spark) கிடைக்கும் என வெங்கடேஷ் கூறினார்.