Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

‘இன்ஸ்டாவில் பிரபலமான 81 வயது மெர்லின் டீச்சர்’ - ரோட்டில் இருந்தவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவிய யூடியூபர்!

81 வயது மெர்லின் பாட்டி ஆங்கிலம் கற்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே சுமார் ஐந்து லட்சத்து 91 ஆயிரம் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

‘இன்ஸ்டாவில் பிரபலமான 81 வயது மெர்லின் டீச்சர்’ - ரோட்டில் இருந்தவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவிய யூடியூபர்!

Saturday September 16, 2023 , 4 min Read

சமூகவலைதளங்களில் செலிபிரிட்டிகள் மட்டுமல்ல... சமயங்களில் சாமானியர்களும்கூட டிரெண்டிங் ஆகி விடுவார்கள். அப்படி கடந்த சில தினங்களாக சென்சேஷனாக பேசப்பட்டு வருபவர்தான் மெர்லின் பாட்டி.

நீங்கள் சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் என்றால், மெர்லின் பாட்டியைப் பற்றிய அறிமுகம் உங்களுக்குத் தேவைப்படாது. ஆனாலும் தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன அறிமுகம்.

merlin

மெர்லின் பாட்டி யார்?

மியான்மரில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியவர் மெர்லின்(81). திருமணத்திற்குப் பின்பு இந்தியாவுக்கு வந்த இவர், சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அவருடைய உறவுகள் ஒவ்வொருவராக இறந்து விட தனித்து விடப்பட்ட மெர்லின் டீச்சர், ஒருகட்டத்தில் வறுமை வாட்ட, சென்னையில் யாசகம் பெற்று ரோட்டோரங்களில் தனிமையில் வாழ ஆரம்பித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் தான், இன்ஸ்டாகிராமில் கண்டெண்ட் கிரியேட்டரான முகமது ஆஷிக் என்ற இளைஞரின் கண்களில் பட்டுள்ளார் மெர்லின் டீச்சர். சமூக ஊடகம் வாயிலாக பலரது வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி வரும் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு வருபவர் ஆஷிக். பொறியாளரான இவர், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டே, விடுமுறை நாட்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான உதவிகள், அவர்களின் பேச்சை எடுத்து ரீல்ஸ்களாக எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

ஏற்கனவே இவரது ரீல்ஸ்கள் மூலம் பல சாமானியர்களின் வாழ்க்கையில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு முயற்சியாத்தான், மாதா, பிதாவிற்கு அடுத்தபடியாகக் கொண்டாடப்பட வேண்டிய ஒரு குரு, இப்படி ரோட்டில் பலரிடம் கையேந்தி வாழும் நிலையைக் கண்டு வருந்திய ஆஷிக், மெர்லின் டீச்சரைப் பார்த்ததும் englishwithmerlin என்ற பெயரில் ஒரு புதிய பக்கத்தை ஆரம்பித்தார். அவரது ஒரு சிறு முயற்சிதான் இன்று மெர்லின் டீச்சருக்கு ஒரு மறுவாழ்வை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

“இன்ஸ்டாகிராமில் மூன்று மாதங்களுக்கு முன்பு பார்த்த வீடியோ ஒன்றின் மூலம்தான் மெர்லின் பாட்டி எனக்கு அறிமுகம். அந்த வீடியோவைப் பார்த்ததுமே அவரது முகம் எனது மனதில் ஒட்டிக் கொண்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக யதேச்சையாக அவரை பெசண்ட் நகர் கடற்கரை அருகில் சாலையின் ஓரத்தில் யாசகம் எடுக்கும் போது பார்த்தேன். இப்படியான சாமானியர்களைப் பார்த்தால், அவர்களிடம் பேசி அறிவுரை வாங்குவது, அவரது வாழ்க்கை அனுபவங்களைத் தெரிந்து கொள்வது போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும்," என்கிறார் ஆஷிக்.

மெர்லின் பாட்டியிடமும் அப்படித்தான் சென்று பேசினேன். அப்போது அவரது ஆங்கில புலமை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. தான் ஒரு ஆசிரியை என்பதை அவர் கூறியதும், கல்விக் கண் திறக்கும் ஆசிரியைக்கு இப்படி ஒரு நிலைமையா என எனக்கு கஷ்டமாக இருந்தது. அவருக்கு என்னால் இயன்ற ஏதாவது ஒரு உதவியைச் செய்ய நினைத்தேன்.

மெர்லின் பாட்டியை ஆசிரமம் ஒன்றில் சேர்த்துவிட வேண்டும் என நினைத்தேன். ஆனால், அதற்கு அவர் மறுத்து விட்டார். என்னை இப்படியே அமைதியாக வாழ்ந்து சாக விடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

எனவே, அவர் கேட்டுக் கொண்டபடி ஒரு சேலை மட்டும் வாங்கிக் கொடுத்தேன். பிறகு எந்த வயதானாலும் ஆசிரியர் என்பவர் ஆசிரியர்தானே. அதனால் அவரை வைத்து ஒரு இன்ஸ்டா பக்கம் ஆரம்பித்து, மற்றவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தால் என்ன என்ற யோசனை தோன்றியது. அப்படி உருவானதுதான் englishwithmerlin பக்கம்.

“ஆங்கிலம் கற்பிப்பதற்கான வீடியோக்களை உருவாக்க உதவுமாறு மெர்லினிடம் கேட்டுக் கொண்டேன். ஒவ்வொரு வீடியோவிற்கும் பணம் கொடுக்க அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளேன். என்னால் முடிந்த எந்தத் தொகையையும் அவருக்குத் திருப்பிச் செலுத்துகிறேன். இதன் மூலம் மெர்லின் கற்பிக்கத் தொடங்கவும், யாசகம் எடுப்பதைத் தவிர்க்கவும் ஊக்குவிப்பதாகும்” என்கிறார் ஆஷிக்.

ஏற்கனவே இவரது ரீல்கள் வைரல் என்பதால், வழக்கம் போலவே இந்த ரீலும் டிரெண்டிங் ஆனது. 30.8 மில்லியன் இதைப் பார்க்க ஒரே நாளில் உலகப்பிரபலம் ஆனார் மெர்லின் பாட்டி.

மெர்லின் பாட்டிக்கு கிடைத்த அமோக ஆதரவு

’இங்கிலீஷ் வித் மெர்லின்’ பக்கத்தை ஒரு சில நாட்களிலேயே சுமார் ஐந்து லட்சத்து 91 ஆயிரம் பேர் ஃபாலோ செய்ய ஆரம்பித்தனர். முன்னால் டிஜிபி சைலேந்திர பாபு IPS உட்பட பல பிரபலங்கள் சமூக வலைதளங்களில் மெர்லின் டீச்சரின் வீடியோவை ஷேர் செய்தனர். இந்த வீடியோவைப் பார்த்தவர்களில் மெர்லின் டீச்சரின் மாணவர்களும் அடக்கம். அவர்களில் ஒருவர் தான் சென்னையைச் சேர்ந்த ஷ்யாம்.

தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சர் மெர்லின் இப்படி சாலையில் கிடந்து யாசகம் பெற்று வாழ்வதைப் பார்த்த ஷ்யாம், ஆஷிக்கைத் தொடர்பு கொண்டு, மெர்லின் பாட்டியைப் பற்றி விசாரித்துள்ளார். பின்னர், ஆஷிக், ஷ்யாம் மற்றும் சில மாணவர்கள் சேர்ந்து, உறவுகள் (https://uravugaltrust.com/) என்ஜிஓவை நடத்தி வரும் காலித் அகமதுவை தொடர்பு கொண்டுள்ளனர்.

ஆதரவற்ற சடலங்களுக்கு நல்ல முறையில் இறுதிச் சடங்குகள் செய்வது, ஆதரவற்ற மக்களை நல்ல இருப்பிடங்களில் கொண்டு சேர்ப்பது போன்ற நல்ல செயல்களை, தனது டீமுடன் சேர்ந்து செய்து வரும் காலித், தற்போது மெர்லின் பாட்டியை பாதுகாப்பான முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்துள்ளார். அங்கு தனது வயதையொத்த மனிதர்களுடன் சந்தோசமாக தன் வாழ்நாளின் மீதி நாட்களைக் கழிக்க இருக்கிறார் மெர்லின் பாட்டி.

“தினமும் மெர்லின் பாட்டியைப் பற்றி விசாரித்து, நிறைய போன் கால்கள், மெயில்கள் வருகின்றன. தங்களால் என்ன உதவியை அவருக்கு செய்ய முடியும் என மக்கள் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரிடம் பாடம் படித்த மாணவர்கள் மட்டுமின்றி, எல்லோருமே அவரின் நலனில் அக்கறை காட்டுவது, ஆசிரியர்களுக்கு நம் மக்கள் கொடுக்கும் மரியாதை வெளிக்காட்டுவதாக இருக்கிறது,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் காலித் அகமது.

தினசரி பயன்பாட்டு ஆங்கில வாக்கியங்களை மெர்லின் பகிர்ந்து கொள்ளும் வீடியோக்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகமாக உள்ளது என்பதால், முதியோர் இல்லத்தில் சேர்ந்தாலும், @englishwithmerlin என்ற பக்கம் மூலம் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் வீடியோக்களை மெர்லின் தொடர்ந்து பகிர இருக்கிறார். இதனால், இன்ஸ்டாகிராம் கணக்கை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

மெர்லின் பாட்டியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தற்போதைக்கு அவர் தங்க வைக்கப்பட்டுள்ள ஆசிரமத்தின் பெயர் இங்கே குறிப்பிடப்படவில்லை. மெர்லின் பாட்டியின் நலனுக்கென அவரது முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவை ஏற்படுத்தி இருக்கின்றனர். அந்தக் குழு மூலம், விரைவில் மெர்லின் பாட்டியை தனியே ஒரு வீடு எடுத்து தங்க வைக்கும் முயற்சிகளையும் அவரது முன்னாள் மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

எது எப்படியோ தொடர்ந்து நமக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக மெர்லின் டீச்சர் ஆங்கில வகுப்பெடுப்பார் என்பது மட்டும் நிச்சயம்.